திரிசூலம் – நடிகர் திலகத்தின் திரைப்பட விமர்சனமல்ல.

திரிசூலம் – பிரம்மன், விஷ்ணு, சிவன்:

தமிழர்களின் அறிவியல் – உலக மதங்களின் மூலம்.

தொல் தமிழர்கள் கடவுள் நம்பிக்கையை உருவாக்காதவர்கள். தேவைப்படாததால் அந்த நம்பிக்கையை வளர்க்காதவர்கள். அவர்கள் கடலோடி மீன்பிடி தொழில் செய்தவர்கள் ஆதலால் வானியல் இயல்பிலேயே ஊறிய விசயமாக இருந்தது. அவர்களின் வானியல் அறிவு பிற்காலத்தில் பிற மதங்களால் உள்வாங்கப்பட்டு, உருமாற்றப்பட்டு, தமிழனின் தலையிலேயே மதங்களாகத் திணிக்கப்பட்டிருக்கிறது.  அந்நிய ஆரிய அ பிராமண மதத்தால் தான் தமிழரின் வானியல் அறிவு, பெருமளவு திட்டமிட்டு அழிக்கப்பட்டது என்றாலும், பிற மதங்களும் விதி விலக்கல்ல. ஒவ்வொன்றாய் காண்போம்.

தொடக்க கால தமிழர் சமயம்  6 பிரிவுகளைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என்பவையே அந்த ஆறு பிரிவுகள். இவற்றில் நன்கு அறிமுகமான பிரிவுகள் சைவமும் வைணவமும். இந்த ஆறு பிரிவுகளும் ஒன்றோடு மற்றொன்று கலக்கப்பட்டு ஒரே  மதத்திற்குள்ளாக இருக்குமாறு மாற்றப்பட்டுவிட்டது.

  1. சைவம் – சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
  2. வைணவம் – விண்ணு அ விஷ்ணு என்ற திருமாலை முழுமதற்கடவுளாக வழிபடும் சமயம்
  3. சாக்தம் – சக்தி அ பார்வதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
  4. காணாபத்தியம் – கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
  5. கௌமாரம் – குமாரனான முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
  6. சௌரம் – சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்

இவை ஆறு சமயப்பிரிவுகளும் ஒரே மதமாக்கப்பட்டு விட்டாலும் அடிப்படையில் இவை எதுவும் மத, கடவுள் நம்பிக்கை சார்ந்த விசயங்களைப் பற்றி பேசாதவை. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை. காரணம் இவை அனைத்தும் வானியல் கோட்பாடுகளே. விஞ்ஞான விசயங்களே. விஞ்ஞானம் என்பதே விண் ஞானம்தானே. உண்மைகளை எங்கே தேடிக்கண்டுபிடிக்க ?

மதஇயல் அ இறையியலில் தொன்மக்கதைகள் களைதல் (De-mytholization) என்ற ஒரு பிரிவு உண்டு. அனைத்து மதங்களிலுமே இருக்கக்கூடிய புனைவுக்கதைகள், அதீத அற்புதங்கள், இயற்கையை மீறிய செயல்பாடுகள், நடைமுறை வாழ்க்கையில் காணமுடியாத ஐதீகங்கள், விசுவாசங்கள், அறிவியல் பூர்வமற்ற, அறிவுக்கொப்பாத கற்பனை செய்திகள், இவை போன்றவைகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது என்பதைவிட இவற்றுக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய மூல உண்மைச்செய்திகளை வெளிக்கொணர்ந்தாலே உண்மை வெளிப்பட்டு விடும். கற்பனைக் கதை அடிபட்டுப்போகும்.

இதற்கு ஒரு மதம்சாராத ஒரு கற்பனை செய்தியை உதாரணமாக மேற்கோள் காட்டலாம். அது, கவரிமான் கதை.

கற்பனை கதை: கவரிமான் ஒரு முடி இழந்தாலே அது தன்மானம் இழப்பதால் உயிர் துறந்துவிடும்.

நடைமுறை உண்மை: கவரி மா என்பதுதான் அவ்விலங்கின் பெயர். காண்க:  மா என்றால் பெரிய என்று பொருள்.

கவரி வீசுதல் என்றால் மயிலிறகால் காற்று வீசுதலைக் குறிக்கும். ஆக, கவரி என்பது முடி.

இமய மலைப்பகுதிகளில் வாழும் கவரிமா என்னும் விலங்குக்கு இயற்கையே குளிர் தாங்கக் கொடுத்திருக்கும் முடியினை இழந்தால், குளிரால் அது இறந்துவிடும்.

இந்த மா என்பது யாக் எருமையையே குறிக்கும் யா என்றாலும் பெரிய என்றே பொருள்.

அந்த யாக் எருமை இதுதான்.

ஆக அவ்விலங்கின் பெயர் கவரிமான் இல்லை, கவரிமா(டு). ஆனால் பட்டிமன்றங்களில் நம்மவர்கள் கவரிமான் பரம்பரை பற்றிக்கொடுக்கும் உரைவீச்சு கொஞ்சம் அதிகம்தான்.

ஐரோப்பாவில் தத்துவ வளர்ச்சி கண்ட காலங்களில் பல்வேறு சிந்தனைக்குழுமங்கள் (Schools of Thought) உருவாக்கப்பட்டது. (உதாரணமாக: Post Modernism, Neo Marxism, Frankfurt School, Idealism, Realism, Empiricism etc)

இவைகள் போல தொடக்கக் காலத்தில் தமிழர்கள் உருவாக்கிய சிந்தனைக்குழுமங்கள் வானியல் அடிப்படையிலானது.

அவையே மேற்கூறப்பட்ட 6 சமய வழி முறைகள். சமயம் என்றாலே வழி, வாழ்வியலுக்கான வழிமுறை என்றுதானே பொருள்.

1. சைவம் – வலியுறுத்தும் சிவம் என்பது சிவந்த நட்சத்திர சூரியன் திருவாதிரை (Betelgeuse) காண்க:

2. வைணவம் – வலியுறுத்தும் விண்ணவம் அ விஷ்ணு என்பது பரந்த இந்த அண்டம் (Milky Way Galaxy) காண்க:

3. சாக்தம் – வலியுறுத்தும் சக்தி அ பார்வதம் என்பது பார் என்ற நாம் வாழும் இந்த பூமி (Earth)

4. காணாபத்தியம் – வலியுறுத்தும் கணம் பொருந்திய, சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய கிரகம் வியாழன் (Jupiter)

5. கௌமாரம் – வலியுறுத்தும் 6 குமாரர்கள் (அறுபடை வீடு) ஆன கார்த்திகை நட்சத்திரக்கூட்டம் (Pleiades)

6. சௌரம் – வலியுறுத்தும் சூரியன் என்பது நமது சூரியன் (Sun)

இவற்றில் 3,4,5,6 பற்றி ஏற்கனவே பார்த்துள்ளோம் என்பதால் முதல் இரண்டைப்பற்றி இங்கே காண்போம்.

இந்த 6 வழிமுறைகளும் குறிப்பாக மிக முக்கியமான சைவமும் வைணவமும் தமிழர்களோடு தொடங்கி தமிழர்களோடே வளர்ந்தது என்பதற்கான நடைமுறை சாட்சியங்களைப் பார்ப்போம்.

1. 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.

2. 108 பழைமையான வைணவக்கோயில்களில் 96 வைணவக்கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.

3. சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் இருந்தது தமிழ்நாட்டில்.

4. வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும் இருந்தது தமிழ்நாட்டில்.

5. சைவக்கோயில் என்றாலே குறிக்கும் சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்.

6. வைணவக்கோயில் என்றாலே குறிக்கும் திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.

7. பஞ்ச பூதங்கள் என்றழைக்கப்படும் 5 சக்திகளுக்கான கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.

8. நவகிரகங்கள் ஒன்பது மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் 27 இவற்றிற்கு கோயில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில். காண்க: 

108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ( 96 தமிழ்நாட்டில்,) ஒன்று நேப்பாளிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை.

9 கிரகங்கள், 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோயில்கள் தமிழ்நாட்டில்.

இடம் கிரகம் நட்சத்திரம்
பாபநாசம் சூரியன் கார்த்திகை , உத்திரம்
சேரன்மகாதேவி சந்திரன் ரோகினி ,ஹஸ்தம் , திருவோணம்
கொடகநல்லூர் செவ்வாய் மிருகசிரீடம் , சித்திரை , அவிட்டம்
குன்னத்தூர் ( சங்காணி ) ராகு திருவாதிரை , சுவாதி , சதயம்
முறப்பநாடு வியாழன் (குரு) புனர்பூசம் ,விசாகம் , பூரட்டாதி
திருவைகுண்டம் சனி பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி
தென்திருப்பேரை புதன் ஆயில்யம் , கேட்டை , ரேவதி
ராஜபதி கேது அசுவதி , மகம் , மூலம்
சேர்ந்த பூ மங்களம் சுக்கிரன் பரணி , பூராடம் , பூரம்

பஞ்சபூதங்களுக்கு உரிய 5 சிவத்தலங்கள் பின்வருமாறு:

படிமம் கோவில் பெயர் குறிக்கும் பூதம் இடம்
Ekam.jpg காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நிலம் காஞ்சிபுரம்
Tiruvannamalai004.jpg திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நெருப்பு திருவண்ணாமலை
Tiruvannaikkaval4.jpg திருவானைக்காவல்  ஜம்புகேசுவரர் கோயில் நீர் திருச்சி
Eastgopuram2.jpg சிதம்பரம் நடராசர் கோயில் ஆகாயம் சிதம்பரம்
SrikalahastiGaligopuram.jpg திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில் காற்று திருக்காளத்தி

தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக்கலந்த வானியல் அடிப்படைத் தத்துவங்கள் எவ்வாறு அனைத்து மதங்களின் அடிப்படைகளை உருவாக்க உதவியிருக்கிறது என்று காண்போம்.


திரிசூலம் – மூன்று சூல் – பிரம்மன் – விஷ்ணு – சிவன்:

தமிழர் அறிவியல் – உலக மதங்களின் மூலம்.

எந்த உயிரும் சூல் கொண்டு பிறப்பெடுக்க 3 காரணிகள் தேவை.

அவை:

(1) மூச்சுக்காற்று, பிராண வாயு.

(2) காலூன்ற நிலம் அல்லது சூழல் (சுருக்கமாக இருக்க ஓரிடம்),

(3) சூரிய ஒளி.

இம்மூன்றுக்கும்  தமிழர்கள் வைத்த பெயர்கள் கால மாற்றத்தில் மும்மூர்த்திகளாக, திரிசூலமாக, கடவுள்களாக உருமாறிவிட்டன, பிரம்மன், விஷ்ணு, சிவனாக.

(பிராண வாயு பிரம்மனாக, நட்சத்திர மண்டலங்கள், கிரகங்கள், வாயுக்கள் அனைத்தையும் என உள்ளடக்கும் விண்ணவம் விண்ணுவாக – விஷ்ணுவாக, சிவந்த சூரியன் சிவனாக)

பிரம்மன்:

பிரம்மா பற்றிய பொதுவான கருத்துக்கள்:

1. பிரம்மா படைப்புக்கடவுளாகக் கருதப்படுபவர்.

2. நான்கு முகங்கள் கொண்டவர் என்பதால் நான்முகன் எனப்படுகிறார். இவருக்கு கரங்கள் நான்கு, பிள்ளைகள் நான்கு.

3. இவருக்கு கோயில்கள் அதிகம் இல்லை, இருந்தாலும் வழிபாடு இல்லை. இந்தியாவிலேயே கும்பகோணத்தில் உள்ள பிரம்மன் கோயிலில் மட்டும்தான் இவருக்கு பூசை செய்யப்படுகிறது.

இவரைப்பற்றிய மேற்கண்ட செய்திகள் அறிவியல் பூர்வமானவை. அப்படி என்ன சிறப்புகள் இம்மூன்றிலும்.

1.  மனிதன் உயிர் வாழ அடிப்படையானது பிராண வாயு என்ற ஆக்சிஜன்.

12 நாட்களுக்கு உணவு இல்லாமல் இருந்துவிடலாம். 5 நாட்களுக்கு நீர் அருந்தாமல் இருந்துவிடலாம். ஆனா மூச்சு விடாம 1 நிமிசம் கூட இருக்கமுடியாது.

பிரம்மா என்றால் பொருள் பிராண வாயு என்பதே. தமிழில் மட்டுமல்ல சமஸ்கிருதத்திலும் ‘Brh’ என்றால் மூச்சு என்றுதான் பொருள். 

Brahman – The root “brh” means to grow, to increase, to expand. The root “an” means to breathe or to live. Brahman is the spirit/breath that expands. The principle of life that has expanded to become the entire universe.

பிரம்மாவின் சிறப்புப்பெயரான சச்சிதானந்தா (Sat, Cit, Ananda) வில் முதலில் உள்ள ‘Sat’ என்றாலே உயிர் என்று தான் பொருள்.

பிராண வாயுவை சுவாசித்து உயிர் வாழ்வதால்தான் மனிதன், விலங்கு, பறவைகள் அனைத்தும் பிராணிகள் எனப்படுகிறது. கரியமில வாயுவை உட்கொள்ளும் மரம் பிராணி ஆகாது.

2. இந்த நான்கு என்பதில் ஒரு சிறப்பு உள்ளது. இந்தப்புவியில் நான்கு புறமும் நிறைந்திருப்பது பிராணவாயு. இப்பேரண்டத்தில் நாம் இதுவரை கண்டறிந்துள்ள கிரகங்களில் பிராண வாயு இருக்கும் ஒரே கிரகம் பூமி மட்டும் தான். புவிஈர்ப்பு விசையால் பூமியோடு இணைந்தே வலம் வருவது இந்த பிராண வாயுக்கவசம். படத்தில் பிரம்மனின் நான்காவது முகம் மறைந்துள்ளது.

3. வட இந்தியாவிலுள்ள அலகாபாத் என்ற நகரில்தான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் நடக்கிறது.

அலகாபாத் என்ற நகரம் அக்பரால் பெயரிடப்பட்ட நகரம். அதன் பொருள் அல்லாவின் பேட்டை அ அல்லாவின் நகரம் அ கடவுளின் நகரம்.

இந்த நகரத்தின் பழைய பெயர் பிரயாகை. பிரயாகையின் பொருளும் அதே. பிரம்மனின் அகம் என்ற சுத்தத் தமிழ்ப்பெயர். பிரம்மனின் அகம் அ பிரம்மாவின் அ கடவுளின் இடம்.

ஏன் பிரம்மாவின் அ கடவுளின் இடம்?

காரணம்

3 நதிகள் சங்கமிக்கும் இடம். அதனால் திரிவேணி சங்கமம் என்றும் அழைக்கப்படுகிறது. வேணி என்றால் நதி என்றே பொருள். காண்க: 

கங்கை, யமுனை, மற்றும் கண்ணுக்குப்புலப்படாத சரஸ்வதி நதி (இது பற்றி பின்னர் விளக்கப்படும்) இம்மூன்றும் சங்கமிக்கும் இடம். மூன்று நதிகளும், காடுகளுமாக பிராண வாயுவை அதிகம் உற்பத்தி செய்யும் இடத்தில் வானியல் சிறப்பு நிகழ்வை கொண்டாடுவது சிறப்பானது.

இயற்கையை, வானியல் கண்டுபிடிப்புகளை திருவிழாவாகக்கொன்டாடும் தமிழர்களின் அதி சிறப்பு திருவிழா இது.

அப்படி என்ன மகாமகத்தில் தமிழர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு?

மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது, ஏன் ?

தமிழரின் வானியல் கண்டுபிடிப்பு தான். வியாழன் கிரகம் ஒரு முறை சூரியனைச்சுற்றி வர எடுக்கும் காலம் 12 ஆண்டுகள். வியாழன், சூரியன், பூமி, நிலவு,  மகம் என்ற நட்சத்திரக்கூட்டம் என ஐந்தும் ஒரே நேர்கோட்டில் வருவது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை. அதுவும்  மகம் என்ற நட்சத்திரக்கூட்டம் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று இணைவது சிறப்பானது. அதனால்தான் மாசிமகம் எனப்படுகிறது.

மகம் என்பது இந்திய வானியலில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரப் பிரிவுகளுள் 10 ஆவது பிரிவு ஆகும்.

சிங்கராசியில் அமைந்துள்ள இந்த நட்சத்திரக்கூட்டத்தின் அமைப்பு கீழே.

கும்பகோணத்தில் உள்ள மகாமக குளமும் இந்த சிங்க நட்சத்திர அமைப்பை ஒட்டியே கட்டப்பட்டிருப்பது சிறப்புக்குரியது.

நட்சத்திர சிங்கத்தின் உடல், வயிற்றுப்பகுதியை மையமாகக்கொண்டு கட்டியிருக்கிறார்கள் தமிழர்கள். என்ன ஒரு விண்ணியல் அறிவு அவர்களுக்கு.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றும் வியாழன் மக நட்சத்திரக்கூட்டத்தில் இருக்கும் போது

சூரியன் கும்ப நட்சத்திரக்கூட்டத்தில் இருப்பதால் இவ்வூர் கும்ப-கோணம் என்றே அழைக்கப்படுகிறது.

இந்நாளைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ராசியும் சிங்க ராசி, நட்சத்திரம் மக நட்சத்திரம் என்பதாலேயே மாகமகத்திற்கு வந்திருந்தார். காண்க:

கும்பகோணத்தில் மூன்று நதிகள் பாயும் திரிவேணி சங்கமம் உண்டு. கண்ணுக்குப் புலப்படும் காவிரி, அரசலாறு ஆறுகளும், புலப்படாத சரசுவதி ஆறும் (தெற்கு கோதாவரி) காண்க:

ஈரோடுக்கு அருகில் பவானியில் இவ்வாறு 3 நதிகள் சங்கமிக்கும். காவிரி, பவானி, கண்ணுக்குப்புலப்படாத அமுதா நதி. காண்க:

விஷ்ணு அ விண்ணவர் 

விஷ்ணுவைப்பற்றிய பொதுவான கருத்துக்கள்:

1. திருமால் என்பவர் வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளாக அறியப்பெறுகிறார். இவர் விஷ்ணு, பெருமாள் என்றும் அறியப்பெறுகிறார்.

2. தமிழர்களின் முல்லைநிலத் தெய்வமாக வணங்கப்பட்ட மாயோன் தெய்வமாக திருமால் அறியப்பெறுகிறார்.

3. திருமால் சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்ற பஞ்சாயுதங்களை கொண்டவர்.

4. பாற்கடலில் ஆதிசேசனின் படுக்கையில் படுத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.

5. இவருடைய வாகனம் கருடன்.

6. மும்மூர்த்திகள் வழிபாட்டில் இவர் காக்கும் தொழில் செய்யும் கடவுள். மற்றவர்களான பிரம்மா படைக்கும் தொழில் செய்பவர். சிவபெருமான் அழித்தல் தொழில் செய்பவர்.

இந்த 6 கருத்துக்கள் மற்றும் அவற்றுக்கான விளக்கப்பின்னனியில் தொல் தமிழரின் அறிவியல் மேன்மையைக் காண்போம்.

1. விஷ்ணு என்றால் விண்ணவன் என்றே பொருள். காண்க:

எட்டுத்திசையும் நிறைந்திருக்கும் அண்டவெளி (Cosmos). அதனால்தான் விஷ்ணுவுக்கு கொடுக்கப்படும் பெயரான “ஓம் நமோ நாராயணா”என்ற வார்த்தையில் 8 எழுத்துக்கள். அண்டம் முழுவதும் 8 திசைகளிலும் இருப்பவன் என்று. பெருமாள் என்பதும் அனைத்து அண்டத்தையும் உள்ளடக்கிய பெரிய சக்தி, பெரிய ஆள் என்ற பொருளிலேதான்.

(தசாவதாரம் திரைப்படத்தில் 12 ம் நூற்றாண்டு பெண்ணாக வரும் நடிகை அசின், வைணவராக வரும் கமலைக் காப்பாற்ற 5 எழுத்தோ, 8 எழுத்தோ அவர்கள் கேட்பதுபோல 5 எழுத்தே சொல்லிவிடுங்கள் என்பார். 5 எழுத்து (சிவாயநம) சைவத்தையும், 8 எழுத்து (ஓம் நமோ நாராயணா) வைணவத்தையும் குறிக்கும். அந்தகாலக்கட்டம் 12 ம் நூற்றாண்டு தமிழ்நாட்டில் ஆரியர் மத ரீதியிலான (சைவ, வைணவ, சமண) குழப்பங்களை உருவாக்கி எதிர்த்தவர்களை கழுவிலேற்றி, அனல், புனல் வாத ஏமாற்று வேலைகளால் கொன்று குவித்த காலம். தமிழரின் வானவியல், அறிவியல் கருத்துக்கள் எல்லாம் மதக்கோட்பாடுகளாக்கப்பட்டு, தமிழரின் அறிவியல் நூல்கள் எல்லாம் ‘ஆடிபெருக்கில் அனைத்தையும் போடு’ என்று அழிக்கப்பட்ட காலம். காண்க:)

2. மாயோன், திருமால்.

மா என்றால் கருமை நிறம் என்றே பொருள். ஏற்கனவே மாநிறம் என்றால் நல்ல கறுப்பு என்ற அர்த்தம் மறந்துபோய் தமிழன் மத்திய நிறம் என்று தவறாய் பயன்படுத்தும் வார்த்தை என்று பார்த்திருக்கிறோம். ஆக விஷ்ணு கறுப்பு நிறத்தவன்.

இந்த அண்டத்தில் பெரும் சக்தியாய் 94 சதவிகித இடத்தை ஆக்கிரமித்திருப்பது இருண்ட சக்தியே. ஆங்கிலத்தில் இந்த இருண்ட சக்தி Dark Energy, Dark Matter எனப்படுகிறது. மாயோனும் இருண்ட சக்தியும் வேறு வேறு அல்ல. ஒரே பொருளைக்குறிக்கும் இரு வேறு சொல் பதங்களே.

திருமால் என்றால் மறைந்திருப்பவன் என்று பொருள். கோல் மால் என்றால் தில்லுமுல்லு. அதாவது பார்வைக்கு புலப்படாதவன். ஆனால் இருப்பவன், மறைந்து இருப்பவன் என்ற பொருளில் கூறப்படுவது. காற்று இருப்பது வெளிப்படையாய் பார்வைக்கு புலப்படாமல் இருப்பதைப்போல. அண்டவெளி என்பது பொருளற்ற இடைவெளிதான். பொருளற்ற இடைவெளியும் ஒரு பொருளே. (Space is not ’empty’ space)

3. விஷ்ணு 5 ஆயுதங்களை பயன்படுத்தியதாய் சொன்னாலும், 2 ஆயுதங்களே முதன்மையாய் சொல்லப்படுவதோடு விஷ்ணுவின் அடையாளமாயும் காட்டப்படுகிறது. அவை சக்கரமும், சங்கும்.

சக்கரம் சுற்றிச்சுழலும் அண்டமே. பால்வெளி யான நமது அண்டமே அந்த சக்கரம். Milky Way Galaxy.

சங்கு குறிப்பது சப்தமே. இரைச்சலாய், எங்கும் ஓங்காரமாய் ரீங்காரமிடும் சப்தமே, நாதமே, ஒலியே, ஓசையே. கிறித்தவ விவிலியத்தில் கூட ஆதியில் வார்த்தை இருந்தது என்பது இந்த சப்தமே.

4. பாற்கடல்,

பாற்கடல் தொன்மக் கதை:

இந்து தொன்மவியலில் பாற்கடல் கடைதல் பெரும் நிகழ்ச்சியாகும். அமுதத்திற்காக வேண்டி பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மேரு மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாக கூறி அவர்களையும் அழைத்தார்கள். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலை கடையத் தொடங்கினார்கள்.

மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்க தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்திர மலையை தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலை கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தினை கக்கியது. அந்த விசத்தினால் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும், தேவர்களும், அரக்கர்களும், இன்னபிற தேவகனங்களும் அழிய நேரிடும் என்பதால் அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்குமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் அந்த ஆலகால விசத்தினை உண்டார். அவருடைய வயிற்றுக்குள் இருக்கும் உலக உயிர்களை விசம் அழிக்காமல் இருக்க, பார்வதி தேவி சிவபெருமானது கண்டத்தை பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விசம் தங்கி, நீலகண்டமாக உருவாகியது. அதன் பின் மீண்டும் அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். காண்க:

கீழுள்ள படத்தில் மலைக்குக்கீழே ஆமையைக்கவனிக்க மறந்துவிட வேண்டாம்.

இந்தத் தொன்மக்கதையில் முக்கியமான தமிழரின் அறிவியல் கூறுகள் என்ன?

1. பாற்கடல். 2. மேருமலை, ஆமை, கூர்மம் 3. பாம்பு 4. தேவர் மற்றும் அரக்கர் 5. ஆலகால விஷம், கண்டம். விளக்கம் கீழே.

கீழுள்ள பாற்கடல் படம் தாய்லாந்து பாங்காக் விமான நிலையம்.

 

தென்கிழக்காசிய கம்போடிய நாட்டின் அங்கோர்வாட் கோயிலில் உள்ள சோழர்கள் கட்டிய 12 ம் நூற்றாண்டு பாற்கடல் சிற்பங்கள்.

1. பாற்கடல் என்பது வேறொன்றுமில்லை நமது சூரியக்குடும்பம் இருக்கும் பால்வெளி வீதி என அழைக்கப்படும் நமது அண்டமே. ஆங்கிலத்தில் இது Milky Way Galaxy என அழைக்கப்படுகிறது. நமது சூரியக்குடும்பம் சிவப்பு எழுத்திலும் நமது சூரியனின் சுற்றுப்பாதை மஞ்சள் நிற வட்டமாகவும் காட்டப்பட்டுள்ளது. பாலைக்கொட்டியது போல இருப்பதால் இந்த அண்டம் பால்வெளி வீதி அல்லது பாற்கடல் என தமிழர்களால் அழைக்கப்பட்டிருக்கிறது.

2. மேருமலை, ஆமை, கூர்மம்

நமது பால்வெளிவீதியை கிடைமட்டமாகப்பார்த்தால் இவை மிக எளிதாக விளங்கும். ஒளி ஆண்டுகளைப்பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இருந்தாலும் ஒரு சின்ன விளக்கம்.

ஒரு சிறிய விளக்கம் ஒளி ஆண்டு பற்றி.

நாம் பொதுவாக தூரங்களை கிலோமீட்டரில் அளக்கிறோம்.

(நமக்குத் தெரியும் 1 கி. மீ. – 1,000 மீட்டர்)

கடல் தூரங்களை நாட்டிகல் மைல் என்பார்கள்.

பன்னாட்டுத் தர அடிப்படையில்: 1 கடல் மைல் = 1,852 மீட்டர்கள்.

விண்வெளியில் தூரம் அதிகம் என்பதால் கிலோமீட்டரில் சொல்ல இயலாது. கோடி, கோடி, கோடி ன்னு சொல்லவேண்டி இருக்கும் என்பதால் ‘ஒளி ஆண்டு’ என்ற பதம் பயன்படுத்துகிறார்கள்.

ஒலி-(சப்தம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 340 மீட்டர்

(அதாவது அரை கிலோமீட்டர் கூட இல்லை) ஆனால்

ஒளி-(வெளிச்சம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 3,00,000 கிலோமீட்டர். (3 லட்சம்)

அப்படின்னா

1 நிமிடத்துக்கு (3,00,000 X 60)

1 மணி நேரத்தில (3,00,000 X 60 X 60)

1 நாளைக்கு (3,00,000 X 60 X 60 X 24)

1 மாதத்திற்கு (3,00,000 X 60 X 60 X 24 X 30)

1 வருடத்திற்கு (3,00,000 X 60 X 60 X 24 X 30 X 12)

இந்த பெருக்குத்தொகைதான் ஒரே ஒரு ஒளி ஆண்டு. (ஏறக்குறைய 10 லட்சம் கோடி கிலோமீட்டர்)

பால்வெளி (Milky way) யின் அச்சு விட்டம் அதிக பட்சமாக ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் அளவுடையது.

இதன் சராசரி தடிமன் ஆயிரம் ஒளி ஆண்டுகள் ஆகும்.

இந்த பால்வெளி அண்டத்தில் பத்தாயிரம் கோடியில் இருந்து நாற்பதாயிரம் கோடி விண்மீன்கள் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

இந்தப் பால்வெளி வீதியில் மையப்பகுதி ஒளி நிறைந்த நட்சத்திரங்களால் விளிம்பைவிட பருத்து இருப்பதைக்காணலாம் இதுதான் (bulge and Galactic center ) மேருமலை மற்றும் ஆமை அல்லது கூர்மம் ஆகிப்போனது தொன்மக்கதையில்.

3. பாம்பு அல்லது ஆதிசேஷன் படுக்கை:

இந்தப் பாம்பு ஏன் 5 தலை நாகமாக இயற்கையில் இல்லாத ஒன்றாக சொல்லப்படுகிறது ?

5 தலை என்பது பால்வெளி வீதியின் 5 கைகள்.

பால்வழிப் பேரடையில் மொத்தம் ஐந்து சுருள்கைகள் உள்ளன. அவற்றில் ஓரியன் கைப் பகுதியிலேயே சூரிய மண்டலம் இருக்கிறது. கீழே மற்றும் மேலே உள்ள படங்கள் இதனை நமக்கு தெளிவாக்கும்.

5 கைகள் அ தலைகள்: 1,1a, 2, 2a, 2b என 5 தலைகள்.

பால்வழியின் 5 சுருள்கைகள்

நிறம் கை(கள்)
1. சியான் பெர்சியசு சுருள்கை (Perseus)
2. பர்புள் சுருள்கையும் வெளிச்சுருள்கையும் (Outer)
3. பச்சை சுகட்டம் சென்டாரசு சுருள்கை (Scutum-Centaurus )
4. இளம் ரோஜா கரினா சஜிடேரியசு சுருள்கை (Carina-Sagittarius)
5. இளஞ்சிவப்பு ஓரியன் கை (Orion )

5. வாகனம் கருடன்.

ஆகாயத்தின் மிக உயரத்தில் பறக்கும் உயிரினம் கழுகுதான் அதிலும் கருடன் உலகின் தென் பகுதியில் மட்டுமே காணப்படும் பறவையினம். அதனால்தான் விஷ்ணுவின் வாகனமாகக் கூறப்படுவதோடு அனைத்து வைணவ ஆலயங்களில் மட்டும் சுவர்களில் இந்த வாகனம் இருக்கிறது.

இந்த கழுகுகுறியீட்டினைத்தான் பின்னாளில் பல நாடுகளும் தங்களது தேசியச்சின்னங்களாகவும், கொடிகளிலும் பயன்படுத்துகின்றனர். உதாரணங்களில் சில:

1. ஜெர்மனி,

2. அமெரிக்கா,

3. அரேபியா.

ஆகவே இந்தக்கருடன் விஷ்ணுவின் வாகனமாகக் கூறப்படுவதோடு அனைத்து வைணவ ஆலயங்களில் மட்டும் சுவர்களில் இந்த வாகனம் இருக்கிறது.

இதனைப்போலவே சிவ ஆலயங்களின் சுவர்களில் இருப்பது சிவனின் வாகனமான காளை.

ஏன் சிவனின் வாகனம் காளை?

ஏன்னா சிவ நட்சத்திரமான திருவாதிரை (Betelgeuse) யின் முன்பாக வானில் இருக்கும் நட்சத்திரக்கூட்டத்தின் பெயர் காளை (Taurus).

4. தேவர் மற்றும் அரக்கர் அல்லது அசுரர்.

தேவர் என்பது தீ அல்லது ஒளியைக்குறிக்கும் ‘தீ’ யர் அல்லது தேவர் என்பது ஒளி நிறைந்த பால்வெளியில் உள்ள அனைத்து நட்சத்திரங்களை, அந்த நட்சத்திரங்களால் ஆன 5 கைகளைக்குறிக்கும். அதனால்தான் தமிழர்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள் (நட்சத்திரங்கள்) என்று சொல்லி இருக்கின்றனர்.

அரக்கர், அல்லது அசுரர் என்பது கருமை நிறத்தைக் குறிக்கும். அதாவது பால்வெளியின் 5 கரங்களுக்கு இடையிலான இருளைக் (Dark Energy) குறிக்கும். இந்த இரண்டு “ஒளி சக்தி, மற்றும் இருள் சக்தி” களின் சுழற்சியால்தான் அண்டமே இயங்குகிறது உயிர் என்ற அமுதம் கிடைக்கப்பெறுகிறது. (திராவிட, தமிழரை அசுரர் என்றே அழைப்பர். அ – சுரர். சுரர் என்றால், ஒளி பொருந்திய என்று பொருள். சுர, சூரிய- ஒளி, சூடு, சுரம்-காய்ச்சல்.)

6. தொழில் காத்தல்.

இந்தக் காத்தல் என்பது தன்னுள் இருக்க வைத்திருத்தல், பாதுகாத்தல் என்ற பொருளில் இந்த பால்வெளி வீதிக்குள் தானே எல்லாம் அடங்க வேண்டும். அந்த வகையில் காத்தல்.

மூன்றாம் நபர் சிவன்

ஏற்கனவே இவரைப்பற்றி நாம் பார்த்துள்ளதால், காண்க:

சுருக்கமாக, இந்தப்பால்வெளி தொடர்பாகவே காண்போம்.

சிவன் விஷத்தை அருந்துவதால் அது தொண்டையில் சிக்கிக்கொள்வதால் நீலகண்டன் எனப்படுகிறார்.

சிவப்பான சிவனின் கழுத்து மட்டும் ஏன் நீலமாகவேண்டும். இங்கேயும் தமிழர்களின் அறிவியல்தான்.

சூரியனான சிவனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் பூமிக்கு நேரடியாக வந்தால் பூமியின் உயிர்களுக்கு அவை விஷம்தான். மரணம்தான்.

அவற்றை தடுத்து நிறுத்துவது ஓசோன் காற்று மண்டலம்தான்.

பூமிக்கு மேல்பகுதியான வளி மற்றும் வெளி பகுதி 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பூமியிலிருந்து 100 கி.மீ. வரை காற்று மண்டலம் என்று ஓர் அளவீடு வைத்திருக்கிறார்கள். அதற்குமேல் பகுதி விண்வெளி.

இந்த மண்டலத்தில் ஒன்றான ஸ்ட்ராடோஸ்பியர் என்ற இரண்டாவது மண்டலத்தில் 30-40 கி.மீ. உயரத்தில் அமைந்திருக்கிறது ஓசோன் மண்டலம்.

இங்கே ஆச்சரியமான விஷயம் விஷத்தை விழுங்கியதால் நீலகண்டனாக மாறியதைப்போல ஓசோன் வாயுவின் நிறமும் நீலம்தான்.

ஓசோன் வாயு வெப்பநிலை -112 °செ இல் இது கரிய நீல நீர்மமாக மாறுகின்றது. இன்னும் கீழான வெப்பநிலையில் -193 °செ இல் கருமை மிக்க கத்தரிப்பூ நிறத்தில் திண்மமாக மாறுகின்றது.[6]

In standard conditions, ozone is a pale blue gas that condenses at progressively cryogenic temperatures to a dark blue liquid and finally a violet-black solid. காண்க:

1840 இல் தான் கிறிஸ்டியான் பிரெட்ரிக் ஷூன்பைன் (Christian Friedrich Schönbein) என்பவர் ஓசோனைக் கண்டுபிடுத்து, ஓசோன் (O4)என்று பெயர் சூட்டினார்.

எனவே

காற்று மண்டலம் என்ற பிரம்மன், (வளி)

விண்வெளி மண்டலம் என்ற விஷ்ணு, (வெளி)

சூரிய மண்டலம் என்ற சிவன் (ஒளி)

இவை மூன்றும் மூன்று சக்திகள், மாபெரும் இயற்கை சக்திகள். இம்மூன்று சக்திகளுக்கும் சமமான பெண்பால் சக்திகளும் தெய்வங்களாக உண்டு. அதை அடுத்த பதிவில் காண்போம்.

இந்த வளி, வெளி, ஒளி, என்ற தமிழர்களின் வானியல் கோட்பாடு உயிர் சூல் கொள்ள அடிப்படையான திரி-சூலமாக பின்னர் பிரம்மன்,விஷ்ணு, சிவன் ஆக ஆரிய மதமாக,  பின்னர் யூத, இஸ்லாமிய, கிறித்தவ மதமாக மாற்றம் பெற்றிருக்கிறது. பிற மதங்கள் பற்றி தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம்.

ஆக தொல் தமிழர்களின் அறிவியல், வானியல் கண்டுபிடிப்புகள் பிரம்மாண்டமானவை. எப்படி கண்டுபிடித்தார்கள் இவ்வளவையும் எந்தக் கருவியும், வானியல் வாகனமும் இல்லாமல். மிகப்பெரும் ஆச்சரியம், மிகப்பெரும் அதிசயம்தான்.

தொடர்ந்து தேடுவோம்.

Advertisements