தமிழுக்கு அடுத்து நான் நேசிப்பது இளையராஜா. 


நான் மட்டுமா, நேசிக்காத நெஞ்சங்கள் குறைவு தான் தமிழ் உறவுகள் இருக்கும் உலகெங்கும்.


அவருடைய பாடல்களில் சிறந்த பத்து பலரும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். 


பள்ளிப்பருவ பதின்ம வயதிலிருந்து பனசொனிக் வானொலிப்பெட்டிக்கருகில் அவரது பாடலின் முன்னிசை வந்தவுடன் என்ன பாடல் என்று உலகிற்கு அறிக்கைவிடுத்து அந்த வரி வந்தவுடன் உடனிருப்போரிடமிருந்து வரும் அங்கீகாரத்தினால் வரும் பெருமிதம். சில சமயங்களில் படிக்கிறதை தவிர… என்று வரும் சின்ன வசவு மொழிகளுக்கு மத்தியில் பாடலோடு லயித்த காலம் நினைக்கும் போது மீண்டும் புத்துணர்ச்சி வாழ்க்கையில்.


ஒரு சின்ன அனுபவ பகிர்வு. அந்த வருடம் 1976 நான் தஞ்சாவூரில் பள்ளிகூட காலங்களில். அருள் தியேட்டரில் ஒரு படம் போட்டிருந்தார்கள். அன்னக்கிளி. நல்ல ஞாபகம் இருக்கிறது. ஒரு வாரம் தான். படத்தை தூக்கிவிட்டார்கள். ஆனால் கொஞ்ச நாளில் எங்கு பார்த்தாலும் அன்னக்கிளி பாட்டுதான். திரும்ப போட்டார்கள் தஞ்சாவூரில் கிருஷ்ணா தியேட்டரில் (கொடிமரத்து மூலைக்கருகில்). படம் ‘சூப்பர் டூப்பர் ஹிட்’ என்பார்களே அதுதான். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வருமளவிற்கு. பக்கத்தில் விட்டுவிட்டு தொலைவில் அங்குதான் அன்னக்கிளி பார்த்தேன்.


சரி 

இளையராஜா அவர்களுடைய பாடல்களில் 10 ஐ தேர்ந்தெடுப்பது பலரும் சொல்வது போல சிரமம்தான்.


நான் அவருடைய பாடல்களில் என் ரசனைக்கேற்ப 1,2,3 என்று 3 ரகங்களாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் ஏறக்குறைய 50 பாடல்கள் என்று வைத்திருக்கிறேன். மேலும் அவரின் வித்தியாசமான முயற்சிகள்கொண்ட பாடல்கள், பின்னணி இசைக் கோர்ப்புகள் என ஒரு சேகரிப்பு வைத்திருக்கிறேன்.


அதில் மிகச்சிறந்த என்று எனக்குப்பட்டதை கொஞ்ச நாட்கள் வைத்திருந்து அந்தப் 10 க்குள் தரம் முன்னே பின்னே மாறவிட்டு சில மாதங்களுக்கு பிறகும் அப்படியே இருக்கும் அந்தப்பத்து.


ஒரு வார்த்தை என்னைப்பற்றி இசைக்கும் எனக்கும் ‘கிரேன்’ வைத்தாலும் எட்டாது. ரசனை, இனிமை, பாடல் பாதித்த விதம், இசைக்கோர்ப்பு ஈர்ப்புகள் அடிப்படையில் இந்த தேர்வு.


10. சந்தத்தில் பாடாத கவிதை. 


ஓலங்கள் என்ற மலையாள படத்தில் தும்பி வா என்றும், ஆட்டோ ராஜா என்ற தமிழ் படத்திலும், ப்பா என்ற இந்திப்படத்தில் கும் சும் என்றும் (தெலுங்கிலும் உள்ளதாகச் சொல்கிறார்கள்) ஆக சிறந்த இந்த ராகம் பல மொழிகளில் அவரால் தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு சிறந்த பாடல். ஆனால் எனக்கு பிடித்தது இந்த பாடலுக்கான இசைக்கருவிகளின் மீட்டலில் உருவான பாடலற்ற இசை.

சந்தத்தில் பாடாத


9. பருவமே புதிய பாடல் பாடு


குத்து பாட்டு இல்லை, வெளிநாட்டு காட்சிப்படுத்தல் இல்லை, நிமிடத்துக்கு 60 தடவை காட்சி மாற்றம் இல்லை, ஆனாலும் கட்டிப்போடுது காலையும், கற்பனையையும். அதிகாலை வேலை, ஒரே காட்சிதான் ஓடிக்கொண்டே இருப்பது, இருவர், கொஞ்சிக்குலாவல் இல்லை, இசை வாத்திய கூச்சல் இல்லாது, ஒரே படித்தான குதி சப்தம் மட்டுமே, இடையே வயலின், கித்தார், ஜானகி அம்மா, பாடகர் பாலசுப்பிரமணியம், காட்சி பதிவு செய்த அசோக்குமார், இயக்கிய மகேந்திரன், அனைத்தையும் ஒரே கோட்டில் இணைத்த இளையராஜா, வேறென்ன வேண்டும். அதிலும் இந்த பாடலுக்கான முன் தயாரிப்பு சூழல், எல்லாவற்றுக்கும் மேலே இடையீட்டு இசைக்கோர்ப்பு- இதைத் தவிர வேறெதை சிம்பொனின்னு சொல்றது. 

பருவமே புதிய பாடல் பாடு


8. புத்தம் புது காலை 


அலைகள்  ஓய்வதில்லை படத்தில் வராமல் போன பாடல். ஒரு நேர்காணலில் யூகி சேது இந்த பாடலை கேட்ட ஒரு இத்தாலியர் சென்னைக்கு தேடி வந்து இளையராஜாவை சந்தித்து, ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தார் என்று பகிர்ந்தார். அவரின் இசையும், ஜானகி அம்மாவின் குரலும் போட்டி போடும் பாடல்.


புத்தம் புது காலை


7. ஒரு வானவில் போலே 

காற்றினிலே வரும் கீதம் படப் பாடல். அனைத்துப் பாடல்களும் அதில் தேனிசை. அதிலும் இந்த பாடலுக்கான முன்னிசை வாய்ப்பே இல்லை. நிச்சயமாக வானவில் போலத்தான் இருக்கும் ரம்மியமாக. என்ன காணொளி அந்தளவிற்கு இல்லை.

ஒரு வானவில் போலே 


6. காற்றில் எந்தன் கீதம் 

‘ஜானி’ என்ற இயக்குனர் மகேந்திரன் அவர்களின் திரைப்படம். இதிலும் ஜானகி அம்மா. அவர்களின் தொடக்க அணுக்கம் ‘குழல் இனிது யாழ் இனிது என்பர் ஜானகி அம்மா குரல் கேளாதவர்’ என்று சொல்லும் அளவிற்கு இசை இன்பத்தில் மிதக்க வைக்கும். சரணங்களுக்கிடையில் வரும் இடையீட்டு இசைத்தாண்டவம் இளையராஜாவுக்கே உரியது.

 காற்றில் எந்தன் கீதம்


5. அடி பெண்ணே 


இதுவும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் முள்ளும் மலரும் திரைக்காவியம். குறிப்பாக இப்பாடலில் தன்னை  திருமணம் செய்து கொள்வதாக விருப்பமான ஆண்மகன் கூறியதும் அந்த பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிகை ஷோபா, இயற்கையே அந்த பெண்ணின் உணர்வுகளை புரிந்துகொண்டு குதூகலப்படும் சூழலை கண்முன் காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா, ஒருங்கிணைக்கும் இயக்குனர் மகேந்திரன், இவை அனைத்தையும் நம் மூளையின் இசைப்பரப்பிற்குள் நம்மையறியாமல் இறக்குமதி செய்ய வைக்கும் ராஜாவின் இசைவண்ணம். என்ன சொல்ல. ஏழ்பிறப்பில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அனைத்திலும் தமிழனாகவே பிறக்க வேண்டும், இந்த ராஜாவின் இசை பருக.

 அடி பெண்ணே


4. என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் 


ரோசாப்பு ரவிக்கைக்காரி படப்பாடல். நம்முடலில் எலும்பையும், சதையையும், நரம்பையும், குருதியையும் பிரிக்கமுடியாது. பின்னிப்பிணைந்தது. இந்தப்பாடலும் அப்படித்தான். பாடலின் உணர்வு, சூழல், ஏக்கம், தவிப்பு, அங்கலாய்ப்பு அனைத்தையும் நம் இதயம் பிரதி எடுத்துக்கொள்ளும் அவரின் இசையால்.

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் 3. சின்னக்கண்ணன் அழைக்கிறான்.

கவிக்குயில் திரைப்படம். என்ன ஒரு இசைக்கோர்ப்பு. பிஞ்சுக்கை பிடித்து பெற்ற குழந்தையை வாஞ்சையோடு அழைத்துச்செல்லும் ஒரு பாசமிக்க தந்தை போல 6 கோடி இதயங்களை மூழ்காத இசை வெள்ளத்திற்குள் மூழ்க வைக்கும் இசை வார்ப்பு.

 சின்னக்கண்ணன் அழைக்கிறான்


2. மலர்களே நாதஸ்வரங்கள் 


இப்பாடலும் கிழக்கே போகும் ரயிலில் இடம் பெறாமல் போன பாடல். இதயங்களிலெல்லாம் இடம் பிடித்த பாடல். நாட்டுப்புற, தமிழிசையை பிழிந்து பருகச்செய்யும் இசை. அதிலும் என்ன ஒரு கற்பனை வளம், புது முயற்சி. இப்பாடலை முடித்திருக்கும் இசை குறிப்பு, எப்படி தோன்றியது அவருக்கு.

மலர்களே நாதஸ்வரங்கள் 


1. மலர்களிலே ஆராதனை 


கரும்பு வில் படத்தில் வரும் பாடல். தொடக்க முதல் என் வரிசையில் முதலிடத்திலேயே நிலைத்த பாடல். இப்பாடலுக்கு இசைப்பிரியர் ஒருவர் அளித்திருந்த கருத்தையே இங்கு வழிமொழிகிறேன். 

இளையராஜாவே நினைத்தாலும் இப்படி ஒரு பாடலை அவர் திரும்பவும் தர முடியாது.

 மலர்களிலே ஆராதனைநன்றி.

Advertisements