இன்று (ஜூன் 3, 2014) 71 ம் பிறந்த நாள் காணும் அவருக்கு வாழ்த்துக்கள்.

1. இந்தியத் தேர்தலில் வெற்றிபெற்றால் 5 வருசம்தான் ஆட்சி. இதயத்திரையில் வெற்றி பெற்ற இவருக்கு இடைத்தேர்தல் இல்லா 40 வருட இசை ஆட்சி.

2. மூன்று தலைமுறைகள் அவரின் பாடல்களோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ‘யூ டியூப்’ பில் தேடப்படும், ரசிக்கப்படும், கருத்துரைக்கப்படும் அவரது பாடல்களே சாட்சி. ஏன், அவரது பின்னணி இசையோடு வரும் இன்றைய பிற இசை அமைப்பாளர்களின் படங்களே போதும் நிரூபிக்க.

3. 1000 திரைப்படங்களுக்கு மேல் இசைஅமைத்துக்கொண்டே இருக்கும் இளைய ஞானி.

4. கமல், ரஜினி முதற்கொண்டு எல்லா ஸ்டார்களின் ஆரம்பகாலப்படங்கள் வெற்றி பெற்று அவர்களுக்கு நிலையான அடையாளம் கிடைக்க மூல காரணம் அவரே. இயக்குனர் மகேந்திரன் போன்ற ஒரு சிலரே இந்த உண்மையை வெளிப்படையாய் ஏற்றுக்கொள்வர்.

5. அவரின் இசை தமிழிசையில் பிறந்தது, மேற்கத்தியத்தை இணைத்தது, பிற இந்திய இசையும் சேர்த்து இறுதியில் எல்லார் இதயத்தையும் ஊடுருவியது. அங்குதான் அவரது இசை சாம்ராஜ்ஜியம்.

6. பாக் (Bach) இசைக் கோர்வைகளில் தமிழிசை கண்ட மேதமை அவர்.

7. தமிழரின் வானியல், தமிழரின் இசையோடு ஒருமித்தது என்பதைக்கண்ட விஞ்ஞானி அவர். 7 சுரங்கள் – 7 வாரநாட்கள், 12 சுருதிகள்-12 மாதங்கள், 27 சுருதிப்பிரிவுகள் – 27 நட்சத்திரக்கூட்டங்கள், 72 மேள கர்த்தா ராகம் – அண்டவெளியில் சூரிய சுழற்சியின் 72 பிரிவுகள், என தமிழிசையை தமிழர் வானியலோடு இணைக்க வல்லவர்.

8. 21 ம் நூற்றாண்டின் ஆபிரகாம் பண்டிதர் அவர். 1916ல் தஞ்சையின் ஆபிரகாம் பண்டிதர் குஜராத் சென்று கர்நாடக இசை தமிழிசையே என்று ஆதாரபூர்வமாக நிரூபித்துக்காட்டியவர். 1376 பக்கங்கள் கொண்ட “கருணாமிர்த சாகரம்” என்ற ஆய்வு மேற்கொண்டவர் அவர். ஆபிரகாம் பண்டிதர் ஆய்வில் நிரூபித்ததை தனது இசையால் நடைமுறையில் நிரூபித்துக்காட்டிய இசைப்பண்டிதர் இசைஞானி.

 

 ஏழு சுரங்கள், ஐந்து விகிர்த சுரங்களும் (ஷட்ஜம்,பஞ்சமம் + ரிஷபம்,காந்தாரம்,மத்தியமம்,தைவதம்,நிஷாதம்) போன்ற ஒலிநிலைகளும் சேர்ந்து 12 இசை ஒலி நிலை (பன்னிரு நிலம்).இந்த பன்னிரெண்டு சுரங்களும் (ச-ப,ச-ம) பண்டைய தமிழர்கள் உபயோகித்து வந்தனர்.இதை ஆயப்பாலை முறையையே கர்ணாடக சங்கீதத்தின் ஆதாரமாக உள்ளது. காண்க:

‘குரலே துத்தம் கைக்கிளை உழையே இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே’

என்கிறது திவாகர நிகண்டு.

தமிழிசையில் ஏழிசைச் சுரங்களாக குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியவற்றைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது, இசைக்குரிய எழுத்துகள் ஏழு – ச,ரி,க,ம,ப,த,நி – இதனை ஏழிசை என்பர்.

தமிழிசையில் இது பறவை, விலங்கினங்களின் குரல்களோடு ஒப்பிடப்பட்டு விளக்கப்படுகிறது. தமிழர் ஏழிசையை இயற்கை ஒலிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர்.

வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்

ஆடும் என்றிவை ஏழிசை ஓசை.- பிங்கலந்தை நிகண்டு

வ. எண் ஏழிசையின் தமிழ்ப் பெயர் ஏழிசையின் வடமொழிப் பெயர்
1. குரல் சட்சம்
2. துத்தம் ரிஷபம்
3. கைக்கிளை காந்தாரம்
4. உழை மத்திமம்
5. இளி பஞ்சமம்
6. விளரி தைவதம்
7. தாரம் நிஷாதம்

9. 1965 ல் இந்தி எதிர்ப்புக்காய் தமிழ்நாடெங்கும் போராட்டம் நடைபெற்று 7 பேர் தீக்குளிக்க, 70 பேர் அரசின் வன்முறையில் கொல்லப்பட இந்தி விரட்டப்பட்டது. 1975 வரை இந்தி மீண்டும் திரைப்பாடல்கள் வழியாய் படை எடுத்தது. 1976 ல் வந்த அன்னக்கிளி இந்திக்கழுகை விரட்டியடித்தது. அன்று போன கழுகு இன்று வரை திரும்பவே முடியவில்லை. நன்றி பண்ணைபுரத்தாருக்கே.

10. அவரது வாத்தியங்களில் முக்கிய இடம் தமிழிசைக்கருவிகளுக்கே.  வயோலின், தபேலா, புல்லாங்குழல் இம்மூன்றும் இல்லாத அவரின் பாடல்கள் அரிது.

வயோலின் என்பது தமிழர்கள் 7,000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்திய 14 யாழ் கருவியின் நீட்சி. குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு தோற்றுவாய். வில்யாழ். வி-யாழ், vi-yol, violin.

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கல்லாடம் என்னும் நூல் யாழ் வகைகளைப் பற்றுக் கூறுகிறது.

 • வில்யாழ்(21 நரம்புகளை உடையது)
 • பேரியாழ் (21 நரம்புகளை உடையது)
 • மகரயாழ் (17 அல்லது 19 நரம்புகளை உடையது)
 • சகோடயாழ் (16 நரம்புகளை உடையது)
 • கீசக யாழ் (14 நரம்புகளை உடையது)
 • செங்கோட்டியாழ் (7 நரம்புகளை உடையது)
 • சீறியாழ் (7 நரம்புகளை உடையது)

இவற்றைவிட நாரதயாழ், தும்புருயாழ், மருத்துவயாழ், ஆதியாழ் (100 நரம்புகளை உடையது) எனப்பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. மகர யாழ் யவன தேசத்திலிருந்து எடுத்துவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. சாத்தான் குளம் அ.இராகவன் என்பவர் தனது நூலில் 24 வகையான யாழ்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.

யாழ் நூலில் கூறப்படும் யாழ் வகைகள்:

 • வில் யாழ்
 • சீறி யாழ், செங்கோட்டியாழ்
 • பேரி யாழ்
 • சகோட யாழ்
 • மகர வேல்கொடி யாழ்
 • மகர யாழ் / காமன் கொடி யாழ்
 • மகர யாழ் / வர்ணர் ஊர்தி யாழ்

11. இசையின் 5 பரிமாணங்களையும் பரிணாம வளர்ச்சி அடையச்செய்த இசை டார்வின் அவர்.

1. தோல் இசை-க்கு தபேலா

2. துளை இசை-க்கு புல்லாங்குழல்

3. நரம்பு இசை-க்கு வயோலின் என்ற வில் யாழ்

4. வாய்ப்பாட்டு இசை-பாடகர்

5. ஒத்திசை-குழுவினர் ஒத்திசைப்பாடல்.

12. இன்னும் 300 ஆண்டுகள் கடந்தாலும் தமிழர்களின் வரலாற்றில் என்றென்றும் வாழப்போகும் தமிழ் ரத்னா அவர்.

13. எத்தனை இசை நுணுக்கங்கள் ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு இசைக்கருவியிலும் புது முயற்சி, இசைக்கருவியே இல்லாமல் பாடல், ரிதம் மட்டுமே கொண்ட பாடல், 3 சுரங்கள் மட்டுமே கொண்ட பாடல், தமிழிசை மட்டுமே கொண்ட பாடல், 4 கருவிகள் மட்டுமே கொண்ட பாடல், பாடகர்களின் அடுக்குத்தொடர் குரல் வரிசை முயற்சி, பாடலிடை புதுமைகள், பின்னணி இசையில் தீம் புதுமைகள், என ஒரு நூறாண்டு கால பல்நூறு கலைஞர்களின் ஒட்டுமொத்த திறமைகளை 15 ஆண்டுகளுக்குள் செய்து முடித்துவிட்டு இன்னமும் இசைக்கு உயிரோட்டம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

14. ஆரியம் ஒழித்துக்கட்ட நினைத்து முடியாமல்போய் உள்வாங்கிக் கொண்ட பல விசயங்களில் இளையராஜா 21 ம் நூற்றாண்டின் தமிழ்க் குறியீடு.

15. அவரது பின்னணி இசை போல பின்னணியில் போராடும் போராளி. பாவலரின் பொதுவுடைமை அவரின் பின்னணியில். அம்பேத்கரின் நீலப் புரட்சி அவரின் பின்னணியில், வெளிப்படையில் மாற்றாய் தெரிந்தாலும் பின்னணி சாதித்து மட்டுமே போராடியிருக்கிறது.

16. தமிழைப்போல அவரும் இக்காலத்தில் அங்கீகரிக்கப்படாமலே இருக்கிறார். வெறும் திரைப்பாடலோடு மட்டும் அவரை மதிப்பீடு செய்வது தவறு என்று வரலாறு உணரும். தமிழ் எந்நாளும் வெல்லும்.

Advertisements