இசைஞானி அவர்களின் பிறந்த நாளை (ஜூன் 2) முன்னிட்டு இந்தப் பதிவு.

இளையராஜா அவர்கள் “தாரை தப்பட்டை” வரை 1000 திரைப்படங்கள் என்றால், 1 படத்திற்கு குறைந்தது 4 பாடல்கள் என்று வைத்துக்கொண்டாலும் 4000 பாடல்கள்.

ஒவ்வொரு பாடலிலும் வரும் இரண்டு 2 இடையீடுகளுக்கும் (Interlude) வெவ்வேறு இசைக்கோர்வை என்ற கணக்கில் பாடல் இசை தவிர 8000 இடையீடுகள்.

இந்த 4000 பாடல்களில் ஒவ்வொன்றையும் எடுத்து ஆய்வு செய்தால் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு புது முயற்சி, தனித்துவம் இருக்கும்.

இராகங்களின் முழுப்பரிமாணமாக, இராகங்களின் கலப்பாக, இராகங்களின் மீறலாக, இராகங்களின் பரிணாமமாக…
நாட்டுப்புற, கர்நாடக, இந்துஸ்தானிய, மேற்கத்திய இசையின் ஊடாக அடுத்த இசைக்கிரகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் ராக்கெட் விண்கல விமானியின் வல்லமை இளையராஜா என்ற இசை மாஜிக் நிபுணருக்கு இருக்கிறது.

ஆனால் அவரின் இசையை ரசிக்க மட்டுமே தெரிந்த என்னாலான ஏதோ ஒரு சின்ன தேடல் முயற்சி.

1. இசைக்கருவிகளே இல்லாமல் ஒரு சினிமா பாடல்.

“மாயா பஜார் 1995” என்ற திரைப்படத்தில் வரும் பாடல் இது.

முதலில் இதற்கான கற்பனை, திரைப்படத்தில் ஒரு விஷப்பரிட்சை, என்பதையெல்லாம் தாண்டி மிகவும் இனிமையான ஒரு பாடல்.

சமீபத்தில் அவரின் இசைக்கச்சேரியிலும் பாடப்பட்டது இந்தப் பாடல்.

இசைவடிவ காணொளி காண: நான் பொறந்து வந்தது 

கச்சேரி காணொளி காண: இங்கே 

2. ரிதம் கருவி (Rhythm Pad) மட்டுமே கொண்ட ஒரு திரைப்பாடல்

வேறெந்த இசைக்கருவியும் பயன்படுத்தாது வெறும் ரிதம் கருவி மட்டுமே பயன்படுத்தப்பட்டாலும் பெரும் வரவேற்பை பெற்ற “அக்னி நட்சத்திரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.

ராஜா… ராஜாதி… ராஜன் இந்த ராஜா…

3. “சிட்டுக்குருவி” என்ற படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே குயிலினிமை உடையதுதான்.

அதிலும் இந்தப்பாடல் என் கண்மணி… என் காதலி… என்ற பாடல்.

1. இனிமையான இசைப்பாடல்.

2. புது முயற்சியாக பாடலின் இடையே வரும் உரையாடல்கள்: 78 களில் நவீன முயற்சிகள்.

– தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு…,

– இந்தாம்மா கருவாட்டுக்கூடை முன்னாடி போ…

– நல்ல பொங்கல் போங்கோ…

3. மூன்றாவதாக இரு குரல் ஒன்றில் மேல் ஒன்று ஏற்றி பாடுவது. இதனை (Counter Point) என்று சொல்கிறார்கள்.

அதாவது, ஒரு கனவுப்பாடலில் நிஜ நாயகனும் அவனது கனவு நாயகனும்,

அதேபோல், நிஜ நாயகியும் அவளது கனவு நாயகியும், இந்த 4 பேரும் பாடுவது போல் ஒரு பாடல்.

இதில் நாயகனும், கனவு நாயகனும் கேள்வி-பதிலாக பாடி ஒரே கருத்து முடிவில் இணைவது.

இந்த இரு குரல் ஒன்றில் மேல் ஒன்று ஏற்றி (Counter Point) பாடுவது பற்றி ராஜா அவர்களின் விளக்கம் காண:

அந்த இனிமையான நவீன முயற்சியை கண்களால் கண்டு, செவியின்பமும் பெற: என் கண்மணி

4. “குணா” திரைப்படத்தில் எல்லாப்பாடல்களுமே இனிமைதான்.
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடலும், உரையாடல்களோடு இணைந்த பெரும் வரவேற்பு பெற்ற வித்தியாச முயற்சி பாடல் தான்.

எனக்கு அந்தப்படத்தில் மிகவும் பிடித்தது உன்னை நான் அறிவேன் என்ற பாடல்.

அந்தப் பாடல் சுழலும் ஒரு மின்விசிறியின் ஒலியோடு துவங்கி நம்மை அப்படியே ஈர்த்துக்கொள்ளும். என்னவொரு இசைக்கற்பனை.

தொடர்வது: மதிக்குறையுள்ள நாயகனின் மீது  உண்மையான இரக்கம் கொள்ளும் ஒரு பெண்ணின் குரலில் ஜானகி அம்மாவின் அணுக்கம்.

ஒரு மாடி அறையில் தொடங்கும் அந்த மெல்லிய இசைப் பாடல், அங்கிருந்து பயணித்து வெளியில் நடக்கும் ஒரு இந்துஸ்தானி கச்சேரி யை  சேர்த்துக் கொள்ளும். தொடர்ந்து அப்படியே வண்டிகளின் இரைச்சல்களுக்கு  இடையே உலாவி, பின் ஒரு கூத்துப்பாடல் கூட்டத்தோடு கும்மாளமடிக்கும் பிறகு மீண்டுமாக மெல்லிசையாக நாயகனின் நிம்மதியான உறக்கத்தோடு நிறைவு அடையும்.

பாடலில் உள்ளம் கொள்ளை கொள்ள: உன்னை நான் அறிவேன்

5. “மீண்டும் கோகிலா” திரைப்படத்தில் பெண் பார்க்கும் படலமாக ஒரு பாடல், சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி என பாரதியார் வரிகளில் தொடங்கும். வெத்தலை இடிக்கும் பாட்டியின் இதமான இடிப்பு இன்னிசையின் இடையீடாய் (Interlude). சிறுவனின் சேட்டை, நாயகி மறக்க, எடுத்துக்கொடுக்கும் நாயகன், சபாஷ் போட வைக்கும் கற்பனை நயங்கள். கேட்டுத்தான் அனுபவிப்போமே: சின்னஞ்சிறு வயதில்

6. “பூந்தளிர்” படத்தில் ஜென்சி அவர்களின் குரலில் ஞான் ஞான் பாடனும் பாடல். துவக்க இசையே நம்மை எங்கோ அழைத்துச்செல்லும். அதை உணர்ந்து மீள்வதர்க்குள்ளாக ஜென்சியின் குரலலை நம்மை வீழ்த்தும். கடித விளக்கம் பெறும் மொழி புரியா நாயகியின் ஏக்கம் இடையீட்டு உரையாடலில்.

சேரனின் ‘ஆட்டோகிராப்’ படப் பாடல் ‘மனசுக்குள்ளே காதல் வந்துச்சா’ என்ற பாடலுக்கு முன்னோடி இந்தப்பாடல். இன்ப வெள்ளத்தில் நீராட: ஞான் ஞான் பாடனும்

7. “சின்ன வாத்தியார்” படத்தில் ஒரு பாடல் கண்மணியே கண்மணியே நான் சொல்லுவதைக்கேளு. நாயகன் முழுக்க பாட, அதற்கு நாயகி பாடலுக்கு பதில் வசனம் மட்டுமே. முழுப்பாடலிலும் அப்படியே. நாயகியின் வசனக்குரல் நடிகை ரோகினி அவர்களுடையது. கேட்டு ரசிக்க: கண்மணியே  கண்மணியே

8. “மெட்டி” என்ற இயக்குனர் மகேந்திரனின் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் முத்தானவையே. அதில் நாயகியின் கல்யாண நிபந்தனைகள் உப காட்சியாக, இடையீடாக பாடலில் லயிக்க வைக்கும் பாடல் கல்யாணம் என்னை முடிக்க. கொஞ்சம் லயிப்போமா:

இப்பாடல் மேலே கிடைக்க வில்லையென்றால் முழுப்பாடல்கள் உள்ள இந்த தொகுப்பில் 4. 40 நிமிடத்தில் இப்பாடலைக் கேட்கலாம். கண்டு களிக்க:

9. “பகலில் ஒரு இரவு” படத்தில் தோட்டம் கொண்ட ராசாவே என்ற பாடல். இந்தப்பாடலில் மொத்தம் 4 இசைக் கருவிகள் மட்டுமே. ஆனாலும் பாடல் ஒரு தேனிசை மழை, அந்த மழையில் நனைவோமா: தோட்டங் கொண்ட ராசாவே

10. 3 சுரத்தில் ஒரு திரைப்பாடல் ச, ரி, க என்ற மூன்றே மூன்று சுரத்தில் ஒரு முழுப்பாடல். இது ஒரு தெலுங்குப் பாடலாய் இருந்தாலும் ராஜா கொஞ்சம் தமிழ்ப்படுத்துகிறார். கேட்டுத்தான் பார்ப்போமே:

காணொளி: 

கொசுறாக இந்த வரிசையில் எனக்கு பிடித்த இராஜாவின் பாடல்களில் மிகச்சிறந்த ஒன்று:

1. “எனக்காக காத்திரு” என்ற படத்தில் வரும் பனி மழை விழும் என்ற பாடல்.  1978 ல் வந்த படப்பாடல். அருணாச்சல பிரதேச இமய மலையில் புத்த விகாரங்களுக்கு மத்தியில் மலையகப் பிரதேச பிரத்யேக இசைக்கருவிகளோடு மலை முகட்டிற்கும், எவரெஸ்டின் உச்சிக்கும் ஏன் அதற்கும் மேலே நம்மை கொண்டு செல்லும் பாடல் இது. துவக்க இசை, இரண்டு இடையீடுகளை இமைகளை திறவாது அனுபவியுங்கள்.

பாடலின் இசையை மட்டும் ரசிக்க: பனி மழை விழும்.

திரைப்பாடலாய் ரசிக்க: இங்கே  

இவைதவிர

2.  “கரையெல்லாம் செண்பகப்பூ” படத்தில் பாடல் கற்றுக்கொடுக்கும் பாடலாக ஏரியிலே எலந்தை மரம் 

3. “பொண்ணு ஊருக்கு புதுசு” படத்தில் மிதிவண்டி கற்கும் பாடலாக ஒரு காலகட்டத்தில் தமிழகத்தையே கலக்கிய பாடல்: ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது..

4. தமிழ்த்திரைப்படத்தில் இரத்தப் புற்றுநோய் என்பதை அறிமுகப்படுத்தி அதன் வீச்சு சில ஆண்டுகளுக்கு இருக்கச்செய்த “பயணங்கள் முடிவதில்லை” படத்தில் இருமலோடு நாயகன் பாடும் மணியோசை கேட்டு எழுந்து…

5. மூச்சு அடக்கி பாடி படத்திற்கே விளம்பரமாய் அமைந்த “கேளடி கண்மணி” படத்தின் மண்ணில் இந்தக் காதலின்றி.. 

இசைஞானி அவர்களின் காலக் கட்டத்தில் வாழும் தமிழ் இசைப்பிரியர்களாகிய நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அவருக்கும், தமிழுக்கும், தமிழிசைக்கும் என்றுமே நன்றிக்கடன் பட்டவர்கள்.

தொடர்ந்து தேடுவோம்…