எதிர்காலத் தமிழகம்: எனது கனவு

தமிழகம் பற்றிய ஒரு சின்னச்சின்ன ஆசை. வாங்க என்னதான் சொல்றான்னு பார்ப்போமே.

1. தமிழ் மற்றும் கல்வித்துறை:

1. தமிழ் உலகின் முதல் மொழி என்பதனை சர்வதேச சமூகம் ஆராய்ந்து அங்கீகரிக்க அனைத்து கடலியல், மொழியியல் ஆராய்ச்சி ஏற்பாடுகளும் செய்யப்படும்.

2. தமிழ் மொழியே தமிழ்த் தேசிய மொழி, ஆட்சி மொழி, கல்வி மொழி, அலுவல் மொழி, தொழில் மொழி.

3. 12 வகுப்புகள் வரை இலவசக் கல்வி, கட்டாயக்கல்வி. தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்காத பெற்றோர் கைது செய்யப்படுவர்.

4.  அனைத்து பள்ளிகளும் அரசுப் பள்ளிகளாக்கப்படும்.

5. அனைத்தும் இரு பாலார் பள்ளிகளாகவே இருக்கும். ஆண் – பெண் சமத்துவம், இணைந்து செயலாற்றும் திறன் வளர்க்கப்படும்.

6. பள்ளியில் தமிழ் தவிர ஒரு இந்திய மொழி, ஒரு ஐரோப்பிய மொழி கற்றுக்கொடுக்கப்படும் (அவரவர் விருப்பத்திற்கேற்ப). ஆனால் பயிற்று மொழி தமிழே.

7. 12 ம் நிலை முடிக்கும் முன்பாக அனைத்து மாணவருக்கும் நீச்சல் திறன், வாகன ஓட்டும் திறன், கணிணி திறன் இவைகளை கற்றுக்கொள்வது அடிப்படை. கணினி விசைப்பலகையில் (keyboard) தமிழ் மட்டுமே.

8. இங்கு அவர்கள் உருவாக்கும் ஈ மெயில் முகவரி அவர்களுக்கென இறுதி வரை இருக்கும். அரசின் அனைத்து தகவல்களும் அதன் மூலமே அனுப்பப்படும், அவர்கள் வாகன விதி மீறினால் வரும் தண்டனைத் தொகைத்தகவல் உட்பட.

9. அலுவலகம், பள்ளி அனைத்திலும் தமிழில் மட்டுமே பேச வேண்டும்.

10. விளையாட்டு: தமிழக தேசிய விளையாட்டாக பலர் இணைந்து செயல்படும் வகையில் உள்ள கால்பந்து அறிவிக்கப்படும். வட்டம், மாவட்டம், மாநிலம் வாரியாக ஆண்-பெண் களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு ஒலிம்பிக்கிலும் நேரடியாக பங்குபெற்று பலரும் வெற்றி பெறும் வகையில் பள்ளியிலிருந்தே வீரர்கள் உருவாக்கப்படுவர்.

11. கல்வி முடித்த எவரும் முதல் ஐந்து வருடத்திற்கு தமிழ் நாட்டில் தான் பணி செய்ய வேண்டும்.

12. அயல் நாடு செல்வோர் 5 வருடங்களுக்கு மேல் அங்கு படிப்போ, பணியோ செய்ய முடியாது. தாயகம் திரும்ப வேண்டும்.

2. தமிழ்ப் பண்பாடு:
1. திரைப்பட, தொலைக்காட்சி தணிக்கை முறையில் தமிழ், தமிழ் சமூக மேம்பாட்டுக்கு எதிரானவை தடை செய்யப்படும்.

2. ஆங்கிலக்கலப்பு மிக்க நிகழ்ச்சிகள் தடை செய்யப்படும்.

3. ஆங்கிலம் உட்பட பிற மொழிகளில் உள்ள தொலைக்காட்சிகளும் செயல்படும். ஆனால் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழ் மட்டுமே.

4. தமிழர் பண்பாடு, தமிழர் வரலாறு, மக்கள் முன்னேற்றம், அறிவியல், மனித நேயம், ஆண் – பெண் சமத்துவம், மருத்துவம், விளையாட்டு போன்ற மதிப்பீடுகளை உயர்த்தும் திரைப்படங்கள், நூல்களுக்கு மட்டுமே வரிவிலக்கு, விருதுகள் வழங்கப்படும்.

5. இத்தகைய மதிப்பீடுகளுடன் தமிழ் சமூகத்துக்காக உழைக்கும் நபருக்கு ஒவ்வோர் ஆண்டும்

தமிழ் ரத்னா விருது வழங்கப்படும்.

3. மின்சாரம், தகவல் தொடர்பு:

1. மின்சாரத்துக்கென தனிப்பட்ட வானியல் செய்மதி நிலையங்கள் (Space Stations) வானில் நிறுவப்பட்டு (24 மணிநேரமும் சூரிய ஒளி அங்கு கிடைப்பதால்), சூரிய மின்சாரம் பெறப்படும்.

2. ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடி மின் தொடர்பு சாதனங்கள் (மின் ஈர்ப்புக்கருவி) வழங்கப்பட்டு சூரிய மின்சாரம் இலவசமாக்கப்படும்.

3. தமிழகம் மின் கம்பியற்ற மாநிலமாக்கப்படும்.

4. அதே போல் நிறுவுவதற்குரிய செலவு மட்டுமே உண்டு என்பதால் மின்சாரம் போன்று செல்லிட பேசியில் பேசுவதும் இலவசமாக்கப்படும்.

5. சமையல் அடுப்பும் அனைத்து வீடுகளிலும் இந்த சூரிய மின் மயமாக்கம் என்பதால் அதுவும் இலவசமே. எனவே காஸ் அடுப்பு, மருமகள் சாவு இருக்காது.

6. தொலைக் காட்சி கட்டணமும் இருக்காது.

7. ஆனால் இவையெல்லாம் தமிழ் குடியுரிமை அட்டை பெற்றவருக்கு மட்டுமே.

8. ஒரு சிறு தொகை பராமரிப்பு செலவுக்கென முதல் 5 வருடங்களுக்கு மட்டும் பெறப்படும். பின்பு அனைத்தும் இலவசமே.

9. பல்வேறு வரிகள் மூலம் பெறப்படும் தொகை அனைத்தும் தமிழ், தமிழர், தமிழக வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

4. தொழில்துறை:

1. பொருட்களுக்கான தர நிர்ணயகுறியீடு “த”. (ISI) போல ஆனால் உலகத்தரம் வாய்ந்த தரக்குறியீடாக அது “த” உருவாக்கப்படும். (த-தமிழையும் குறிக்கும், தரத்தையும் குறிக்கும்)

2.  மக்கள் பயன்படுத்தும் நெகிழி, குடிநீர், துணி, மருந்து, மகிழுந்து, பேருந்து, தொடர்வண்டி என அனைத்து உற்பத்தி பொருட்களும் இந்தக் குறியீடு இல்லை என்றால் உற்பத்தி செய்ய முடியாது.

3. அதே போல தொழில் துறையில் பகுதி வாரியாக தொழில் மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்.

சென்னை-வாகனம், கணினி

கடலூர்-தூத்துக்குடி, கன்னியாகுமரி-மீன், கடல் பொருட்கள், கப்பல் கட்டுமானம்

திருச்சி-பாத்திரங்கள், வீட்டு உபயோக மின் பொருட்கள்

கோவை– தொழில், எந்திரங்கள்,

ஈரோடு-மளிகைப்பொருட்கள்

திருப்பூர்-ஆடைகள் ,

கரூர்-வாகனங்கள், உதிரி பாகங்கள், பேருந்து, மகிழுந்து, தொடர்வண்டி, விமானம் தயாரிப்பு.

சேலம்-இரும்பு, அலுமினியம்

மதுரை-விவசாய, பண்ணைக்கருவிகள், எந்திரங்கள்,

நெல்லை-குளிர்பானங்கள், உணவு பதப்படுத்தும் கருவிகள் உற்பத்தி

சிவகாசி-காகிதம், புத்தகம், அச்சிடும் கருவிகள், (பட்டாசு, வெடி பொருட்கள் தொழில் தடை செய்யப்படும்)

ஒவ்வொரு பகுதியிலும் இவையெல்லாம் ஏறக்குறைய இருந்தாலும் அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்படும்.

1. முக்கியமாக உள்நாட்டு தொழிநுட்பத்தில் ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள், தொழில் முனைவோர் ஒருங்கிணைக்கப்படுவர்.

2. அனைத்து ஆராய்ச்சிகளும் தமிழில் மட்டுமே நடக்கும்.

3. தமிழில் கற்றோருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு.

4. தாய்த்தமிழ் மொழியிலான சிந்தனை, புதுக்கண்டுபிடிப்பு, முன்னேற்றம், தரமான பொருட்கள், கருவிகள், எந்திரங்கள் உற்பத்திக்கு மட்டுமே முன்னுரிமை.

5. போக்குவரத்து துறை:

1. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நிலத்தடி தொடர்வண்டி (மெட்ரோ) போக்குவரத்து.

2. நகரப்பேருந்துகள் தொலைவிலுள்ள கிராமங்களுக்கு மட்டுமே. நகரங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்காது.

3. நகரமயமாக்கம் குறைக்கப்படும். அனைத்து ஊர்களிலும் அனைத்து வசதிகளும் இருக்கும்.

4. அனைத்து தமிழக தொடர்வண்டிகளும் பேருந்துகளும் மின்மயமாக்கப்படும்.

வாகனப்புகையற்ற சுகாதார தமிழ்நாடு உருவாகும்.

5. அனைத்து பேருந்துகளும் சீரான வேகத்துடனும், பாதுகாப்புடனும் செல்லும் வகையில் இருப்பதோடு செய்மதி கண்காணிப்பும் இருப்பதால், விபத்து பெருமளவு குறைக்கப்படும்.

6. மிக முக்கியமாக நீர் வழிப்போக்குவரத்து உருவாக்கப்படும்.

1. ஆற்று வழி நீர்ப் போக்குவரத்து:

1. தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் திருநெல்வேலி, திருநெல்வேலியில் இருந்து புன்னைக்காயல் வழியாய் தூத்துக்குடி வரை.

2. காவிரி, பவானி ஆறுகளில் மேட்டூரிலிருந்து ஈரோடு, சத்தியமங்கலத்திலிருந்து ஈரோடு, ஈரோடு-கரூர்-திருச்சி-சிதம்பரம், திருச்சி-தஞ்சாவூர், திருச்சி-நாகூர்.

3. வைகையில் தேனீ-மதுரை, மதுரை-பரமக்குடி

இவைதவிர

2. கடல்வழி நீர்ப் போக்குவரத்து 

சென்னை-மகாபலிபுரம்-பாண்டிச்சேரி-கடலூர்-சிதம்பரம்-நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி-கோடியக்கரை-மணமேல்குடி-தொண்டி-இராமேஸ்வரம்-கீழக்கரை-தூத்துக்குடி-திருச்செந்தூர்-உவரி-கன்னியாகுமரி-குளச்சல்.

என அமையும் 1000 கிலோமீட்டருக்கான கடல்வழிப்போக்குவரத்தின் பயன்கள்:

1. தரைவழிப் போக்குவரத்து (சென்னை-விழுப்புரம்-திருச்சி-மதுரை-நெல்லை-கன்னியாகுமரி வரை) (பேருந்து-தொடர்வண்டி) நெரிசலைக் குறைக்கும்.

2. அதிக செலவில்லா போக்குவரத்தாக அமையும். கடலில் ஒவ்வோர் ஆண்டும் சாலை போடும் தேவையே இருக்காது. தஞ்சையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவில் செல்லும் கப்பல், சூரிய ஒளி கப்பல் என அமையும்.

3. சுற்றுலா பெருக்கும் வழிமுறையாக அமையும். கப்பலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் தவிர உள்ளூர் மக்களும் விரும்புவர். ராமேஸ்வரம்-தூத்துக்குடி வரை உள்ள 12 தீவுகளில் தங்கும் விடுதி வசதி போன்றவை அமைக்கலாம்.


சென்னைக்குள்ளேயே புலிகாட் ஏரி, எண்ணூர் லிருந்து திருவொற்றியூர், பாரிமுனை, சாந்தோம், பட்டினம்பாக்கம், நீலாங்கரை, வி.ஜி.பி. தங்கக்கடற்கரை வரை நகரப்பேருந்து போல படகு இயக்கலாம்.

7. ஆட்சி நிர்வாகத்துறை:


1. தமிழர் ஒவ்வொருவருக்கும் 18 வயது நிரம்பியதும் குடியுரிமை அட்டை வழங்கப்படும்.

2. அதுவே கூட்டுறவு பொருள் வாங்க மட்டுமல்ல, ஓட்டுனர் உரிமம், பண பரிவர்த்தனை, சொத்து விபரம், சம்பளம், வரவு-செலவு அனைத்திற்குமான ஒரே அட்டை.

3. வெளி மாநிலத்தவர் என்றால் அவர்களுக்கென இரு விதமான அட்டைகள்.

# தனி மொழி வாரி மாநிலமான 1965 க்கு முன்பிருந்தே இங்கு வாழும் பிற மொழியினர் தங்களை தமிழ் மண்ணின் மக்கள் என்று ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்களும் தமிழர் என்றே அங்கீகாரம் வழங்கப்படும்.

# பணி நிமித்தமாக சில காலம் தங்கியிருப்பவர்களுக்கு வேறு ஒரு அட்டை வழங்கப்படும்.

8. சுற்றுச்சூழல், சுகாதாரம், மருத்துவம்:

1. புகையிலை சிகரெட் முற்றிலும் தடை செய்யப்படும். அதற்குப்பதில் உடலுக்கு நலம் தரும் மூலிகை சிகரெட்டுகள் (துளசி, கற்றாழை, வேம்பு, புதினா, போன்றவை) அறிமுகப்படுத்தப்படும்.

2. அந்நிய மதுபானம் தடை செய்யப்படும்.

3. தென்னை, பனை கள் பக்குவப்படுத்தப்பட்டு குடியுரிமை அட்டை உள்ளவர்க்கு (18 வயது) மட்டும் விற்கப்படும்.

4. அவரவர் இல்லத்தில் மட்டுமே குடிக்க முடியும். பொது இடங்களில் கள் அருந்துவதற்கு தடை.

5. தமிழகம் முழுவதும் கொசு ஒழிக்கப்படும். விஷப்பாம்புகள் உயிருடன் பிடித்து தருவோருக்கு பரிசுகள் உண்டு. அந்த பாம்புகள் அனைத்தும் காடுகளில் பாதுகாப்பாக விடப்படும்.

6. காடுகளில் இருந்து எந்த விதமான ஆபத்தான விலங்கும் நாட்டிற்குள் நுழையாதபடி உயரமான வேலி அமைக்கப்படும்.

7. அந்நிய காட்டுக்கருவேல மரங்களும், யூகலிப்டஸ் மரங்களும், பார்த்தீனிய செடிகளும் முற்றிலும் அழிக்கப்படும்.

8. அந்நிய குளிர்பானங்கள் ஒழிக்கப்பட்டு மோரும், இளநீரும், எலுமிச்சை, பழ, கீரை பானங்கள் நாடெங்கும் அறிமுகத்தப்படும்.

9. ஆங்கில வழி மருத்துவ முறை படிப்படியாக ஒழிக்கப்பட்டு சித்தா மருத்துவ முறை அனைத்து இடங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

10. ஒவ்வொரு கிராமத்திலும், ஊரிலும் சித்தா மருந்தகங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் சித்தா மருத்துவக்கல்லூரி, மூலிகைப் பண்ணைகள்  இருக்கும்.

11. மருந்து பொருட்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். மாத்திரையின் பெயர் முதல் மருந்தின் உப பொருட்கள், காலாவதி தேதி வரை தமிழில் மட்டுமே.

 9. பாதுகாப்பு:
1. காவல் துறை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு துறையாக மாற்றப்படும். குற்றங்களை விட குற்றங்களுக்கான சூழல், வாய்ப்புகள் களையப்படும்.

2. ரௌடிகள், அடியாட்கள், கட்டப்பஞ்சாயத்து அடியோடு ஒழிக்கப்படும்.

3. வன்முறையான செயலில் தொடர்ந்து செயல்படும் நபர்களின் உடலில் சிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்.

4. மாணவர்கள் கல்லூரிப்படிப்பில் ஒரு வருடம் இந்தப் பாதுகாப்பு துறையில் ஈடுபடுத்தப்படுவர்.

5. அனைத்து வாகனங்களும் செய்மதியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். ஒழுங்கு மீறி செல்லும் வாகனங்கள், விபத்து ஏற்படுத்திய வாகனங்கள், உடனுக்குடன் கண்காணிக்கப்பட்டு தண்டனைத்தொகை அவர்களின் கணிணி முகவரிக்கு, அல்லது செல்லிட பேசிக்கு அனுப்பி வைக்கப்படும். மீறுவோரின் உரிமம் பறிக்கப்படும்.

10. சமூக மேம்பாடு:

1. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சுய நிர்வாகம், அதற்கு ஒரு கொடி, விளையாட்டுக்குழு, சிந்தனையாளர் குழு, இலக்கியக்குழு, சுற்றுலா இடங்கள், கண்காணிப்பு அமைப்பு, நிதி அமைப்பு உருவாக்கம்.

2. ஒவ்வொரு வட்டாரத்திலும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விவசாய, உணவு, தொழில் பொருட்கள் வட்டார மக்களால் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு நிர்வகிக்கப்படும். இலாபமும் மக்களால் பகிர்ந்து கொள்ளப்படும்.

11. அரசியல் நிர்வாகம்:

1. தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், அவர்களது சின்னங்களும் கலைக்கப்படும்.

2. சுயேட்சைகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும், அவர்களின் கல்வி, சமூக ஈடுபாடு, பங்களிப்பு பொறுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

3. தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் மாநிலத்திற்கான நிர்வாக செயற்குழுவையும், கண்காணிப்புக்குழுவையும் தேர்ந்தெடுப்பார்கள்.

4. நிர்வாகக்குழு நாட்டை நடத்தும், இந்த நிர்வாகக் குழுவை கண்காணிப்புக்குழு நெறிப்படுத்தும், நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை ஒவ்வொரு வருடமும் ஆராய்ந்து அறிக்கை தரும்.

5. ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக செயல்படும் 10 மாவட்ட நிர்வாகங்கள் பரிசளிக்கப்படும்.

6. முதல்வர் பதவி இருக்காது.

7. ஓட்டு போடுவது இணைய முறையில் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் முறை. வாக்களிக்காதவர் தண்டத்தொகை கட்டவேண்டும்.

12. மதம்:

1. எல்லாவித மதங்களும் அவரவர் தனி மனித உரிமைக்காக மதிக்கப்படும்.

2. ஆனால் தமிழர் சமயம் என்ற உயர்ந்த வாழ்க்கை வழிமுறை மட்டுமே அரசின் கொள்கை.

மெய்ப்பொருள் காண்பதே அறிவாக, சமய நெறியாக அமையும்.

3. தனி நபர் கடவுள்களை கொண்டுள்ள மதங்களை கொள்கையளவில் ஏற்காத நாடாகவே தமிழ்நாடு இருக்கும்.

4. இதைப்பின்பற்றுவோர் தமிழர் சமயத்தை சேர்ந்தவராக ஏற்கப்படுவர். (சமயம் என்பது மதமல்ல வாழ்வியல் முறை)

13. இந்தியா மற்றும் சர்வதேசம்:

1. தமிழ்நாடு குறிப்பிடத்தக்க மேம்பாடு அடைந்ததும் அதேபோல இந்தியாவும் அடைய ஒரு குழு அமைக்கப்பட்டு அந்தக்குழு அதற்காக பாடுபடும்.

2. பின்னர் அது விரிவடைந்து உலகில் எங்கெல்லாம் சமத்துவம் இல்லையோ அங்கேயெல்லாம் சமத்துவம் உருவாக உழைக்கும்.

14. நிதி, பொருளாதாரம்:

1. ஒவ்வொரு 10 வருடத்திலும் பணம் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப்படும். உதாரணமாக காகிதப்பணம் ஒழிக்கப்பட்டு நெகிழி (பிளாஸ்டிக்) பண முறை கொண்டுவரப்படும். பின்பு முற்றிலும் உலோகப் பண முறை இப்படி.

காரணம் பணப்பதுக்கலுக்கு வாய்ப்பு இருக்காது. கறுப்புப்பணம் தானாக வெளி வந்துவிடும்.

2. எந்த வித நிதி தொடர்பான கொடுக்கல் வாங்கல் முறைக்கும் நிதி அட்டை (பான் அட்டை போல நிதி நிர்வாக அட்டை)

3. தேநீர்க்கடையில் கூட ரசீது தரவில்லை என்றால் கடை இழுத்து மூடப்படும்.

4. ஒவ்வொருவரின் நிதி நிலவரமும் மாநில மைய அமைப்போடு இணைக்கப்படும். தவறான வழியில் எந்தத் தனி நபரும் செல்லாத நிலையில் எந்தவித அரசுக்குறுக்கீடும் இல்லாது அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியும். தனி நபர் உரிமையும் சமூகக் கட்டுப்பாடும் இணைந்தே செல்லும்.

5.  எந்த ஒரு தனி நபரும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலம் வைத்திருக்க முடியாது; பணம் வைத்திருக்க முடியாது.

15. வேளாண்மைத்துறை:

1. தமிழகத்தில் உள்ள ஏழு பெரும் அணைகளான மேட்டூர், பவானிசாகர், வைகை, பாபநாசம்-காரையாறு-மணிமுத்தாறு, பேச்சிப்பாறை அணைகள் நிலத்திற்கடி பெரும் குழாய்கள் மூலம் இணைக்கப்படும். நீரில்லா அணைகள் நீருள்ள அணைகளிடமிருந்து நீர் பெரும்.

2. கல்லனைக்கருகில் கொள்ளிட ஆற்றில் பெரும் அணை கட்டப்பட்டு மழை காலத்தில் வீணாக கடலில் சேரும் வெள்ளம் தடுக்கப்படும்.

3. தமிழகத்திலுள்ள அணைகள், ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் அனைத்தும் இணைக்கப்படும்.

4. காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி ஆறுகளின் கரைகள் கட்டப்பட்டு மணல் கொள்ளை தடுக்கப்படுவதோடு நீர் வழிப் போக்குவரத்து தொடங்கப்படும்.

5. செந்நெல் போன்ற அரிசி ரகங்கள் ஆராய்ச்சி தொடங்கப்பட்டு மக்களுக்கு நீரிழிவு போன்ற நோய்களைத் தராத அரிசி ரகங்கள் மட்டுமே பயன்பாட்டிற்கு வரும்.

6. அரிசி தவிர கம்பு, கேழ்வரகு, சாமை, போன்றவைகளால் ஆன உணவு, எல்லா உணவகங்களில் கொண்டுவரப்படும்.

7. தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக விவசாயமும் தொடங்கப்படும். உதாரணமாக,

தஞ்சை பகுதியில் அரிசி, மதுரைப்பகுதியில் சோளம், தானியங்கள், மலர், நெல்லையில், காய்கறிகள், பழங்கள் பண்ணைகள், கோவைப்பகுதியில் பருத்தி, கரும்பு போன்றவை.

8. விவசாயிகளின் நில அளவு, உற்பத்திக்கேற்ப, நாட்டிற்கான அவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப மாதச்சம்பளம், ஓய்வூதியம் போன்றவை வழங்கப்படும்.

9. விவசாயமும் ஒரு தொழிலாக்கப்பட்டு பலரும் ஈடுபடும் வகையில் லாபகரமாக்கப்படும்.

10. ஒரு எம்.எல்.ஏ வின் அடிப்படை சம்பளமும், ஒரு விவசாயியின் அடிப்படை சம்பளமும் சமமாக இருக்கும். அது போன்றே அனைத்து துறைகளின் அடிப்படை சம்பளமும், திரைத்துறை நடிகர் சம்பளம் உட்பட.