கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இன்னைக்கு சோத்துக்கு வழியில்லை. இதுல இந்தக்கேள்வி தேவையா?

சென்னை முகலிவாக்கம் 11 மாடி இடிந்த கட்டடத்திலிருந்து மீட்கப்பட்ட 27 உயிர்களும் சொல்லும் கடவுள்தான் காப்பாத்தினார் என்று.

அப்ப அங்க செத்துப்போன 61 பேரையும் கொன்னது யார்.

இன்னும் 18 பேர் என்ன ஆனாங்கன்னு யாருக்கும் தெரியலை.

2001 ல் சபரிமலையில் நடந்த நெரிசலில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் பலி.

2003 ல் ஹஜ் திருயாத்திரை நெரிசலில் சிக்கி 300 க்கும் மேற்பட்டோர் பலி.

2004 ல் வேளாங்கண்ணி யில் சுனாமி யில் சிக்கி ஆயிரக்கணக்கில் பலி.

புனித தளங்களுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் வாகனம் விபத்தில் சிக்கி பலி

இப்படி ஏராளமான அன்றாட செய்திகள், நடக்கும் நிகழ்ச்சிகள்.

கடவுளின் பக்தர்களையே கடவுள் காப்பாற்றவில்லையென்றால் மற்றவர்கள் கதி என்ன?

என்று கேட்டால் நாத்திகவாதி என்று முத்திரை குத்தப்படும்.

அதெல்லாம் சாமி குத்தம் என்று சொன்னால் அதே விபத்து  நம்ம குடும்பத்தில நடந்தா அப்படி சொல்வோமா ?

கடவுள் எப்ப தேவைப்படுறார்?

ஏதாவது முக்கிய, விலை மதிப்புள்ள பொருள் காணாமப் போனா கடவுள் தேவைப்படும்.

நோய் வந்தா, அதுவும் டாக்டரால குணப்படுத்த முடியலன்னா கடவுள் தேவைப்படும்.

நெருங்கின சொந்தம் செத்துப்போனா கடவுள் தேவைப்படும்.

நமக்கு வயசாகிப்போனா கடவுள் தேவைப்படுவார். காரணம் ஒரு பயம் வந்துரும். ஒரு வேளை கடவுள் இருந்துட்டாருன்னா செத்ததுக்கு அப்பறம் நம்ம நிலைமை. அதனால இருக்கிறார்னு சொல்லிட்டா யாருக்கும் பிரச்சினை இல்லை பாருங்க, அப்படின்னு நினைக்கிற ஒரு கூட்டம்.

கடவுள் இருக்கிறார்னு சொல்லும் போது மனித வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கை கிடைக்குது. கடவுள் இல்லைன்னா மனித இறப்புக்கு அப்புறம் ஒண்ணும் இல்லைங்கிற வெறுமை தான் இருக்கு. இந்த வெறுமைக்கு அந்த நம்பிக்கையே மேல் னு நினைக்கிற ஒரு கூட்டம்.

இதைத்தவிர

நிறைய பேர் சொல்லும் வார்த்தை நமக்கு மேல ஒரு சக்தி இருக்குது.

சரி அந்த சக்தி எங்க இருக்குது. குத்து மதிப்பா யாரும் சொல்லக்கூடாது இல்லையா?

ஏன் இந்த வார்த்தை “மேல ஒரு சக்தி” வருது.

நாம எல்லாருமே சவால்களை சந்திக்க விரும்புவதில்லை. பாதுகாப்பாகவே இருக்க பழகிவிட்டோம்.

1. பிறக்குமுன் தாயின் கருவறையில்

2. பிறந்தபின் பெற்றோர் அரவணைப்பில்.

3. நட்பின் சூழல், சொந்தங்களின் சூழல்.

4. தனிமையாய் இருப்பது நரகம்.

5. ஏதாவது ஒரு வகையில் ஒரு பாதுகாப்பு நமக்குத் தேவை.

6. நம் எல்லைக்குள் நடக்கும் தவறுகள், பிரச்சினைகளுக்கு பழி அடுத்தவர் மேல். அல்லது நமக்கு தெரியவில்லை என்றால் பெற்றோர், உயர் அதிகாரிகள், விபரம் தெரிந்தவர்களை நாடுகிறோம்.

6. நம் எல்லை மீறி நடக்கும் நிகழ்வுகளுக்கு, பிரச்சினைகளுக்கு யாரை நம்புவது.

ஒரே வழி இங்கு இல்லாத ஒருவரை நம்புவதுதான் ஒரே வழி.

அப்படியாவது ஏதாவது மாற்றம், நல்லது நடந்துவிடாதா என்ற ஒரு நப்பாசை.

7. அப்படி இங்கு இல்லாத ஒருவர் யார். 1. அதிர்ஷ்டம், 2. விதி, 3. ஜோசியம், 4. குறி சொல்லும் சாமியார், 5. கடவுள் அல்லது மேலுள்ள ஒரு சக்தி.

நிறைய பேர் சொல்லும் இன்னொன்று 

அறிவியல் பிரிச்சி பார்த்து ஆராயும். மூளை சார்ந்தது.

ஆன்மிகம் என்பது மனம், இதயம் சார்ந்தது. காரண காரியங்களை இணைக்க வல்லது. எல்லாத்துக்கும் அறிவியல் பதில் கொடுக்க முடியாது. அறிவியலுக்கு அப்பாற்பட்ட காரியங்கள் உண்டு: மன நிம்மதி, சந்தோசம்.

கடவுள் கிட்ட செபம் செய்யும் போது, தியானம் செய்யும் போது கிடைக்கும் தெய்வ அனுபவம் அதை அனுபவிச்சு பார்த்தால் தான் தெரியும்.

அறிவியல் என்றவுடன் பிப்பெட், பியூரெட், இரசாயன, நுண்ணோக்கி சமாச்சாரங்களோடு மட்டுமே இணைத்துப் பார்க்கிறோம்.

சின்னக்குழந்தை கேட்கும் ‘நிலா ஏன் வெள்ளையா இருக்கு’? போன்ற கேள்விகளும் அறிவியலே.

இப்ப சாப்பிடுற சாப்பாட்டுல ஏன் உப்பு குறவா இருக்குது கேட்டோம்னா அதுவும் அறிவியலே.

நாசமா போற கவெர்மெண்டு கரெண்டயாவது ஒழுங்கா போட்றாங்களா, ன்னு கேட்டோம்னா அதுவும் அறிவியலே.

ரேடியோ வில பாட்டு எப்படி கேட்குதுன்னு தெரிஞ்சிக்க விரும்புறோம். மருத்துவர்கிட்ட ஏன் நமக்கு காய்ச்சல் வந்துச்சின்னு தெரிஞ்சிக்க கேட்கிறோம். அதுபோலத்தான் கடவுள் ன்னா என்னான்னு தெரிஞ்சிக்க விரும்புறதும். நம்ம அறிவுக்கு அப்பாற்பட்டது, கேள்விக்கு அப்பாற்பட்டது என எதுவும் கிடையாது. எல்லாம் நம்மளா உருவாக்கினதுதான்.

அறிவியலின் அடிப்படையே தேடலும், தெரிந்துகொள்வதும்தான். (Science ன் இலத்தின் மூலச்சொல் scire – to know). ஒன்றைப்பற்றிய கேள்வியிலிருந்து தொடங்கி கருதுகோள், தரவுகள், ஆய்வு, பின்பு இறுதியில் அது பற்றிய உறுதியான, நிச்சயமான முடிவுக்கு வருதல்.

இது தான் அறிவியலின் வேலையே தவிர நாம் விரும்புகின்ற விசயங்களுக்கெல்லாம் பலனையோ, நம்முடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வுகளையோ தருவதல்ல அதன் நோக்கம்.
எதனையும் கேள்விக்குள்ளாக்கி மெய்ப்பொருள் காண்பதே அறிவும், அறிவியலும், பகுத்தறிவும்.

அதே நேரம் அறிவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத எந்தக் கொள்கையும், கோட்பாடும், ஒவ்வொரு நாளுக்குரிய செயல்பாடும் மூடத்தனத்தின் வழி சேர்ந்ததே.

செபம், தியானம், வழிபாடு செய்யும் போது மன நிம்மதி கிடைக்குதுன்னா அது எல்லா மதத்திலயும்தான் கிடைக்குது. ஏன் மதத்திற்கு அப்பாற்பட்டு யோகா (யோகம்-ஏகம்-மனம் ஒன்றிய நிலை) செஞ்சாலும்தான் கிடைக்கும். அது நாம் எந்த அளவிற்கு மனதை ஒருமிக்கிறோம் என்பதைப்பொருத்ததே. நிம்மதி என்பது மனம், உடல், சிந்தனை, செயல்பாடு ஒருங்கிணையும் போது கிடைக்கக்கூடிய ஒண்ணே தவிர இதில ஏன் கடவுளை கொண்டுவந்து திணிக்கணும்.

ஆன்மிகம் அல்லது ஆத்மீகம் என்பதன் மூலச்சொல் என்ன​?

ஆத்மா + ஏகம், அகத்துமம் +ஏகம் =  அகம் என்ற மனம் சார்ந்த விசயங்களை அலைபாய விடாமல் ஒரே, ஏக நிலையில் வைத்திருத்தல் என்பதே.

இந்த ஆத்மா சாகும்போது உடலை விட்டு பிரிஞ்சி போவுது,

சாவுக்கு பின்னால் அலையுது,

கூடு விட்டு கூடு பாயுது

என்பதெல்லாம் மனக்கவலை, பயம், துயரங்களால் ஏற்படுவது என்பதைத்தவிர வேற ஒன்றுமில்லையே.

எல்லாரும் சொல்லும் இன்னொன்னு கடவுள் மேலேருந்து எல்லாரையும் பார்த்துக்கிட்டு இருக்கார்.

இருந்தால் அவருக்கு வேற வேலை இல்லையா?

சுதந்திரமா மக்கள் இருக்க படைச்சார்னு சொல்றாங்களே. அப்ப இது மனித சுதந்திரத்துல தலையிடுற வேலை இல்லையா?

எல்லாத்தையும் பாத்துக்கிட்டுக்கிற கடவுள் எப்படி கொலை, கொள்ளை, ஊழல், பாலியல் பலாத்காரத்தை பாத்துக்கிட்டு இருக்கார்?

சுனாமி, வெள்ளம் வரும்போது எப்படி பாத்துக்கிட்டு இருக்கார் அமைதியாக?

லட்சக்கணக்கில் ஈழத் தமிழர்கள், ஹிட்லரிடம் செருமானிய யூதர்கள், அணுகுண்டால் சப்பானியர்கள், அமெரிக்காவினால் ஈராக்கியர்கள், இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்துக்கள், இசுலாமியர்கள் சாகும்போது எப்படி பாத்துக்கிட்டு இருந்தார்?

இது ஒரு கிரேக்க வழிமுறை. குடிமக்களை தனது அதிகாரக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, மக்களை பயமுறுத்த பயன்படுத்திய வழிமுறை: கடவுளின் கண் மேலேருந்து பார்க்கிறது, அரச கட்டளைகளை தனிப்பட்ட அளவில் மீறினாலும் அது ராஜ துரோகம் என்று மக்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்க பயன்படுத்திய கொடூர சிந்தனை. காண்க:

எல்லா மதத்திலேயும் கடவுள் காட்சி கொடுக்கிறார். அது ஏன் ஒன்னு ரெண்டு பேருக்கு மட்டும் காட்சி கொடுக்கிறார். பொதுக்கூட்டம் நடக்கும் நேரத்தில, மெரீனா கடற்கரையில, பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுற நேரத்துல காட்சி குடுத்தா எல்லாரும் நம்புவாங்க இல்லையா?.

கேள்வி கேட்க யாருமில்லாத, ஒளிப்பதிவு செய்ய முடியாத காலத்துல தான் காட்சியெல்லாம் நடந்திருக்கு.

பால் குடிக்கிறது, கண்ணுல இரத்தம் வர்றது, மேலேருந்து கீழ வந்து உருவச்சிலைகள் நிக்கிறது, கடல்ல நடக்கிறது, நெருப்புல நடக்கிறது இப்படிப் பட்ட விட்டலாச்சார்யா வேலையெல்லாம் பண்ணித்தான் கடவுள் தன் இருப்பை நிரூபிக்கனுமா?

கடவுளை ஏன் இப்படி சிறுமைப்படுத்தனும் கடல்ல போய் கரைக்கிற மாதிரி.

கடவுள் பற்றி சொல்லப்படும் இன்னொரு கருத்து:

கடவுளை மனிதன் புரிந்துகொள்ள முடியாது. மனிதனுக்கு அப்பாற்பட்டவர் கடவுள்.

இதை வேறு மாதிரி சொல்வதென்றால்,

மனிதனால் கடவுளை புரிந்துகொள்ள முடியுமென்றால் அவர் கடவுளாயிருக்க முடியாது.

மனிதனால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால்தான் அவர் கடவுள்.

கடவுளை மனிதனுக்கு அப்பாற்பட்டவராக புரிந்துகொள்ள மட்டும் எப்படி மனிதனால் முடிந்தது.

அப்ப மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டதெல்லாம் கடவுளா?

கடவுள் அப்படின்னா

வெற்றுக்கருத்தும் இல்லை, வாழும் உயிரும் இல்லை.

உயிர்னா ஒரு பிறப்பு-இறப்பு இருக்கணும்.

கருத்து: வெறும் எண்ணம் மட்டுமில்ல கடவுள் என்பது.

கடவுள் என்பது செயல்பாட்டுக்கு உட்படக்கூடிய ஒரு ஒட்டுமொத்த கருத்தாக்கம்.

அப்ப கடவுள் இருக்காரு அப்படிங்கிறீங்களா? ன்னு கேட்காதீங்க. முழுசா அலசிப்பாத்துட்டு அப்பறம்  சொல்வோம்.

உதாரணமா, அன்பு உலகத்துல இருக்கா? இல்லையா?

இருக்குன்னா எங்கே இருக்கு. தனியா வாழுதா? அன்புக்கு உயிர் இருக்கா?

இல்லைன்னும் சொல்ல முடியாது. ஏன்னா கண்கூடா பாக்கிறோம்.

தாயின் பாசம், தந்தையின் கண்டிப்பு, சில ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பெற்றோரின் தியாகம், நண்பர்களின் நட்பு இப்படி பலவற்றில் வெளிப்படும் அன்பு.

இதுபோலத்தான் கடவுள் என்று சொல்லலாம்.

ஆனா அன்பு, நீதி, உண்மை இதெல்லாம் செயல்படுத்தப்படும் போது பார்க்கிறோம், உணர்றோமே அப்படி கடவுளை உணர முடியலையே அப்படின்னு கேட்கலாம்.

கடவுள் என்பது ஒட்டுமொத்த நன்மைத்தனத்தின், மதிப்பீடுகளின் குறியீடு எனலாம்.

அப்படினா தீமை என்ன குறியீடு ன்னு கேள்வி வருதே.

தீமை என்பது குறியீடு அல்ல, குறையீடு அதாவது நன்மைத்தனம் இல்லாமல் இருப்பதே தீமை, என்ற ஒரு விளக்கம் வரும்.

அவர் நன்மைத்தனத்தின் முழுமைன்னா தீமையே இல்லாம உருவாக்கி இருக்க வேண்டியது தானே? ஏன் தீமை.

அவர் தீமையையும் உருவாக்கவில்லை, நன்மையையும் உருவாக்கவில்லை. அதனால் தீமையையும் அழிக்க அவர் வர மாட்டார். காரணம் அவர் ஒரு தனி நபர் அல்ல. ஒரு சூப்பர் ஹீரோ அல்ல. நம்ம நினைப்பு அப்படி அல்லது நாம உருவாக்கப்பட்ட விதம் அப்படி அல்லது நமக்கு சொல்லி கொடுத்தவர்கள் தப்பு தப்பா சொல்லி கொடுத்துட்டாங்க.

தீமையை அழிக்காத கடவுள் எனக்குத்தேவையில்லைன்னு நீங்க சொன்னா நீங்க நியாயமாத்தான் பேசுறீங்கன்னு சொல்வேன். ஆனா பாதி நியாயம்தான். இன்னொரு பாதி நியாயம், அது நீங்கதான். நீங்கதான் கடவுள், “அகம் பிரம்மாஸ்மி,” “தத்வமசி” You are that,  “நீங்களே உலகின் ஒளி, உப்பு”. கடவுள் ஒரு தனி நபர் அல்ல. கடைசி நாள் வரை பார்த்துகிட்டே இருந்துட்டு ஒரு நாள் கெட்டவங்களை அள்ளி நரகத்துல போட்டுட்டு, மத்தவங்களை மோட்சத்துக்கு கூட்டிட்டு போக.

அப்படின்னா யாரவர்?

இறைவனைக்குறிக்கும் “கடவுள்” என்ற மிகச்சிறந்த அவருக்கான விளக்கச்சொல் போல உலகில் வேறு எந்த மொழியில் உள்ள கடவுளுக்கான வார்த்தையிலும் இல்லை.

எல்லாவற்றையும் கடந்தவர், எல்லாவற்றுள்ளும் இருப்பவர்.

அதாவது, பண்புகளின், மனித மதிப்பீடுகளின் பொதுமை அவர்.

இந்த பொதுமைப்பண்பு இல்லையென்றால் ஆளாளுக்கு அவரை சுருக்கி விடுகிறோம், அல்லது ஒவ்வொரு மதமும் காலகாலமாய் அதது விருப்பத்துக்கு வசதிக்கு கடவுளுக்கு வரையறை கொடுத்துக்கொண்டது. இப்படி, இப்படி இருப்பார், இந்த ஆடை, இந்த நிறம், இப்படி பேசினார், நல்லது செஞ்சார், புதுமை நடத்தினார், ஏழு கடல் தாண்டினார், உயிரோடு திரும்ப வந்தார்.

மத்த மதத்திலுள்ள மூட நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகள் என்று சொல்லும் நாம், நம் மதத்திலுள்ள மூட நம்பிக்கைகளை மட்டும் அதான் கடவுள், அல்லது அதெல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டது, ஐதீகம், நம்பிக்கை, விசுவாசம். என கொஞ்சமும் கூசாமல் 21ம் நூற்றாண்டிலும் சொல்கிறோம்.

கடவுளின் மதம் என்ன?

அவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றால், பிற மதங்களை ஏன் தவறுள்ளதாய் நினைக்க வேண்டும். தத்துவமசி அதாவது நீதான் கடவுள் என்று ஒவ்வொருவரும் தன்னை நினைத்தால், அது முன்னிறுத்துவது உனக்கு அடுத்து இருப்பவனும் கடவுளே, ஏன் உனக்கு அடுத்த அனைத்து உயிர்களும் கடவுளே.

அப்ப எல்லாம் கடவுளா? (Pantheist)

சாமிதான் பூதம், பூதம்தான் சாமி. (பூதம்-ஐம்பூதம்)

இதற்கு பதிலாக கடவுள் என்கிற பதம் சொல்லப்பட்டாலே

அது வரையரைகளால் சிறை படுகிறது. இந்த வரையறைகள் மதங்களால் கொடுக்கப்பட்டது என்று சொல்லுவதை விட மத நிறுவனங்களில் இருந்த ஒருசில தனி நபர்களால், அவர்களது தனிப்பட்ட விருப்பங்களுக்காக, ஆதிக்கத்திற்காக, பிறரை, பிற இனங்களை, பிற நாடுகளை அடிமைபடுத்துவதற்காக உருவானதே, அதையே நாம் இன்னமும் பிடித்துக்கொண்டு, அதில் உள்ள மிக மிகச்சில நல்ல விசயங்களை தேடிப்பிடித்துக்கொண்டு அவைகளுக்காக ஏதோ நாம்தான்  நம் மதத்தின் காவல்

காரர்கள் போல் நினைத்துக்கொண்டு செயல்படுவது அறிவீனம் என்று உணர நமது சமூகக்கட்டுமானம், நமது பாரம்பர்ய கட்டுப்பாடுகள், குடும்ப சூழல், ஊறிப்போன மத நம்பிக்கை வாழ்க்கை முறை, அல்லல் நிறைந்த அன்றாட வாழ்க்கை விடுவதில்லை. இப்படியே வாழ்ந்து தொலைய பழக்கப்பட்டுவிட்டோம், நாட்டின் எதெற்கெடுத்தாலும் ஊழல், குண்டுங்குழியுமான சாலை, வீதியெல்லாம் குப்பை, குழாயடிச்சண்டை, விதி முறைகளற்ற சாலைப்போக்குவரத்து, சாக்கடைகளோடு நாம் வாழப் பழக்கப்பட்டுவிட்டதைப்போல.

நிறுவனமான மதங்களை அழிக்க முடியாதா?
முடியவே முடியாது.

நம்ம கண்ணு முன்னாடியே உதாரணமாக ரெண்டு நிறுவனங்கள்.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.

ரெண்டும் நம் மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கிதுன்னு நமக்கு தெரியுது. நம்ம விரலைக்கொண்டே நம்மக் கண்ணைக்குத்துராங்கன்னு தெரிஞ்சே ஓட்டு போட்டு நம்ம அழிவை நாம தேடிக்கிறோமே.

இந்த ஜெயலலிதா நம்ம மக்களின் பணத்த எல்லாம்  கொள்ளை அடிச்சது உண்மைன்னு நீதி மன்றமே சொன்ன பிறகும் அதற்கும் வக்காலத்து வாங்கும் மக்கள் இருக்கும் போது எப்படி நாடு உருப்படும். ஜெயலலிதாவே 100 சதவிகிதம் அ.தி.மு.க. வை அழிக்க நினைச்சாலும், அந்த அ.தி.மு.க. நிறுவனம் அழியாது. 2G வழக்கில் 1,76,000 கோடி கொள்ளையடிச்ச கருணாநிதியே நினைச்சாலும் தி.மு.க. அழியாது. ஏன்னா அவை நிறுவனங்கள். அதனாலதான் 3வது நிறுவனம் குறுக்க வந்துராம ரெண்டுமே திறமையா காய் நகத்தி விளையாடுது.

இப்ப 30, 40 வருசங்களுக்கு முன்னாடி வந்து நிறுவனமாக்கப்பட்ட இந்த கட்சி நிறுவங்களே இவ்வளவு வலிமையா இருக்கும்போது, 2000, 3000 வருசமா நிறுவனமாக்கப்பட்ட மத நிறுவனங்கள் எவ்வளவு வலிமையா இருக்கும். கடினம்தான். எத்தனை மார்ட்டின் லூத்தரோ, பெரியாரோ, புத்தரோ, டார்வினோ, ரிச்சர்ட் டாகின்சோ வந்தாலும் சிறிய பெரிய சலசலப்புகள் மட்டுமே உருவாக்க முடியும். எதிர்ப்புகள் கிள்ளி எறியப்படும், இல்லைன்னா அப்படியே உள்வாங்கப்படும் புத்த மதம் உள்வாங்கப்பட்டது போல,

ஒரு வாகன ஓட்டுனர் முன்பக்க சாலையை பார்த்து ஓட்டாமல், அவரது இருக்கைக்கு அருகிலுள்ள பின்னால் வரும் வாகனங்களை பார்க்க உதவும் கண்ணாடியை மட்டுமே பார்த்துக்கொண்டு, வண்டியை முன்பக்கம் ஓட்டினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் மதங்களும் 1000, 2000, 3000 ஆண்டு முந்தைய பாரம்பரியம் என்பதை மட்டுமே அளவீடாகக்கொண்டு நடத்துவது.

என்ன, மக்களின் மனங்களிலும், வாழ்க்கையிலும் கடவுள் என்ற பிம்பம் கேள்விக்கே உட்படுத்தக்கூட முடியாத வகையில் ஒரு நம்பிக்கையை, ஒரு பயத்தை, ஒரு அடிமைத்தனத்தை அவனது நாடி, நரம்புகளிலும், ரத்த ஓட்டத்திலும், மூளையின் செல்களிலும் விதைத்து ஆக்கிரமித்திருக்கிறது. காந்தியின் 3 குரங்கு சிலையைப்போல கடவுள் மற்றும் மதத்திற்கு எதிரா எதையும் பார்ப்பதும் பாவம், கேட்பதும் பாவம், பேசுவதும் பாவம், ஏன் எதிரா நினைப்பதே, விவாதிப்பதே கூட பாவம் என்றுதான் நினைக்கிறோம். இது ஒரு கற்பிதம், உடைக்கப்படவேண்டிய சமூகத்திணிப்பு (Taboo), கடவுளும், மதமும் விவாதிக்கப்படவேண்டிய விசயங்களே. இதைத்தவிர மதங்கள் எதோ பள்ளிக்கூடம், மருத்துவமனை, ஒரு சில சமூகநல காரியங்கள், ஆன்மீக முயற்சிகள் செய்தால் போதும் என்ற நிலைக்கு மனிதன் வந்துவிட்டான்.

ஹரித்துவாரில் சிவனின் சிலை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.

பிரான்ஸ் லூர்து மாதா கெபியில் வெள்ளம் புகுந்தது.

இந்தோனேசிய சுனாமியில் மசூதி இடிந்தது.

இந்த இயற்கைப் பேரழிவுகளுக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா?

“அய்யய்யோ எனக்குப் பாதிப்பே,”

என எந்தக் கடவுளாவது வருத்தப்படப் போவுதா?

இதுல சில சமயம் வாக்குவாதம் அந்த மதத்திற்கு பாதிப்பு அதிகம், நம்ம கடவுள் வலிமையானவர் இல்லையா? அப்படின்னு

வேளாங்கண்ணியில் தான் சுனாமி, திருச்செந்தூருக்கு ஏன் சுனாமி வரலை?

ஏன்னா இலங்கை தீவு கடல் அலை வேகத்தை தடுத்துருச்சு. அவ்வளவுதான்.

இந்துவோ, இசுலாமியனோ, கிறித்தவனோ, புத்தனோ எங்க செத்தாலும் செத்தவன் மனுசன் இல்லையா?

தன்னை நம்பும் மக்களையே கடவுள் ஏன் காப்பாற்றவில்லை?

கடவுளுக்கு காப்பாற்ற வலிமை இல்லையா?

அல்லது எல்லாம் திருவிளையாடல்களா? கடவுள் சித்தமா?

மேலே நடந்தது எல்லாம் கடவுள் சித்தம் என்றால் அந்த கடவுள் எனக்குத் தேவை இல்லை என்று பாதிக்கப்பட்டவன் சொன்னால் நம்ம பதில் என்ன?

மத ரீதியான தனி நபர் கடவுள்களுக்குப்பதில் பொதுமையான இறைவன் (Impersonal God) இருந்தால் என்ன நன்மை.

1. இயற்கைப்பேரழிவுகளை இயற்கையின் கண்ணோட்டத்தோடு பார்க்க முடியும்.

2. சமூகக் கொடுமைகளுக்கு திடீர்ப் புதுமைகளை நம்பாமல்,  கடவுள் மேல் பழியைப்போடாமல், விதி விட்ட வழி, மரத்தை நட்டவன் தண்ணி ஊத்துவான்னு சொல்லாம பிரச்சினைகளுக்கு தீர்வு காண மனிதன் சுயமாக நிற்கவும், சேர்ந்து நின்று குரல் கொடுக்கவும் தொடங்குவான்.

தெரியாமத்தான் கேட்குறேன் சுத்திவளச்சு அப்படி ஏன் பொதுமையான கடவுள்னு ஒன்னு கொண்டு வரணும். அதுவுமே இல்லைன்னு சொன்னா கொறஞ்சா போய்டும்னு ஒரு கேள்வி வரும்.

ஏன் திரும்பத்திரும்ப கடவுள்னு ஒரு கற்பிதத்தை கட்டாயப்படுத்தி தினிக்கனும்.

உண்மை தான்,

கடவுள் என்ற சொல்லுக்குப்பதில் பொதுமை, இயற்கை, அப்படின்னு கூட வச்சுக்கலாம் தான்.

ஏன் கடவுள் ங்கிற கருத்து மனிதனுக்கு வந்தது.

1. மனித ஆசைதான்.

எதற்கு?

தான் சாகக்கூடாது அப்படிங்கிற அடிப்படையான மனித ஏக்கம்தான் காரணம். தான் சாகக்கூடாதுன்னா எப்படியாவது வாழனும், இங்க வாழ முடியலைன்னா குறைந்த பட்சம் அடுத்த பிறவியிலாவது வாழனும். அது ஏழ் பிறவியாக இருந்தாலும் சரி அல்லது மறுபிறப்பாக இருந்தாலும் சரி. அப்படி அடுத்த பிறவி இருக்கணும்னா அதுக்கு கடவுள் தேவை, அந்தக்கடவுள் யாரு, என்ன செயுராருன்னு சொல்ல மதம், சட்ட திட்டம் தேவை.

2. மற்ற காரணங்கள் எல்லாமே சப்பைக்கட்டு கட்டும் காரணங்களே. உலகம் எப்படி உண்டானது? மனிதன் எப்படி உருவானான்? எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கம் தேவை, அந்த தொடக்கப்புள்ளி கடவுளே.

3. அந்த தொடக்கப்புள்ளி கடவுளே அப்படின்னு மதவாதிகள் சொல்ல, சரி அந்த கடவுளுக்கு தொடக்கப்புள்ளி எதுன்னு அறிவியலாளன் கேட்க இந்த விவாதம் பல்லாண்டு பழமை வாய்ந்தது.

 • விரிந்து கொண்டே இருக்கும் இந்த பரந்து பட்ட உலகின் தொடக்கம் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் (1300 கோடி ஆண்டுகளுக்கு முன்) நடந்த ஒரு பெருவெடிப்பு (Big Bang). காண்க:
 • சூரியன் உருவானது 457 கோடி வருடங்களுக்கு முன். (4.57 பில்லியன் வருடங்கள்) காண்க:
 • நம்ம பூமி சூரியனிலிருந்து பிரிந்து பிறந்தது 454 கோடி வருடங்களுக்கு முன்னர்.
 • நம்ம பூமியிலேருந்து நிலா உருவானது 453 கோடி வருடங்களுக்கு முன். காண்க:
 • இந்த பூமியில் மனிதன் (Homo Sapiens) உருவானது 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன். காண்க:

என ஆய்ந்த அறிவியல் உலகம் சொல்ல,  நீ சொல்றத சொல்லிக்க நான் அப்படித்தான், நான் புடிச்ச முயலுக்கு ரெண்டரை கால் தான் என மத உலகம் சொல்லிகொண்டிருக்க.

5. விவாதம் என்றால் இருபக்கமும் திறந்த மனதோடு, உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தோடு வருவதே. ஏற்கனவே இதுதான், இந்த புத்தகம் சொல்வதுதான், பாரம்பரியம்தான், 1000, 2000, 3000 வருசமா இப்படித்தான் என்று சொன்னால் அது விதண்டாவாதம். உண்மைக்கு அருகில் வர பயம்.

4. பூமி சுற்றுவதை மறுத்து பிறகு ஏற்றுக்கொண்டாச்சு, சூரிய மைய உலகம் மறுத்து பிறகு ஏற்றுக்கொண்டாச்சு, டார்வினை மறுத்து பிறகு இப்ப ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டாச்சு,

பிறகென்ன?

1. 9 கிரகங்களோடு நம்ம சூரிய குடும்பம்,

2. நம்ம சூரியன் மாதிரி 40,000 கோடி சூரியன்கள் உள்ளது நமது பால்வெளி.

3. நம்ம பால்வெளி மாதிரி 100 பால்வெளிகள் உள்ளது விர்கோ கூட்டம்.

4. விர்கோ மாதிரி 500 கோடி கூட்டம் உள்ளது இதுவரை நாம் காண முடிந்த அண்டவெளி, காண்க: ஆக

 • சூரியக்குடும்பம் உருவானது ஒரு இயற்கை விபத்து,
 • சூரியக்குடும்பத்தில் பூமி உருவானது ஒரு ஒரு இயற்கை விபத்து,
 • பூமி  23.5 பாகை சாய்ந்து காலநிலை மாற்றம் ஏற்பட்டது ஒரு இயற்கை விபத்து.
 • உயிர் இந்த பூமியில் உருவானது ஒரு இயற்கை விபத்து,
 • உயிர் உருவாகி பல கோடி வருடங்களுக்குப்பின், இன்றிலிருந்து  2 இலட்சம் வருடங்களுக்கு முன்  மனிதன் உருவானது ஒரு இயற்கை விபத்து.
 • இதை எழுதிய நானும், வாசிக்கும் நீங்களும், பல லட்சம் உயிர் அணுக்களின் போட்டியில் வென்று இந்தப்பூமியில் பிறந்தது ஒரு இயற்கை விபத்து. மேலும்
 • நம்ம சூரியன் போல 40,000 கோடி சூரியன்கள் உள்ள நமது பால்வெளி வீதியில் (Milky Way Galaxy) மட்டுமே குறைந்த பட்சம் 170 கோடி பூமிகளில் உயிர் வாழ வாய்ப்பு மிக அதிகம். காண்க: ஆகவே
 • இந்த அண்டவெளியின், படைப்பின்  மையம் என்பது நமது சூரியக்குடும்பமோ, பூமியோ, மனிதனோ அல்ல.

என்று ஒரு வானியல் விஞ்ஞானி கேட்கும் கேள்விக்கு நமது பதில் என்ன?

5. மக்களினம் முன்பு போல் இல்லை. கேள்வி கேட்கிறார்கள், சொல்லும் பதிலில் திருப்தி அ உறுதி ஏற்படவில்லை என்றால் விலகி போய்க்கிட்டே இருக்கிறான். உண்மை சொல்லப்பட வேண்டும். இனியும் ஒளித்து மறைத்து பயனில்லை, நமக்குத் தெரியவில்லை என்பதற்காகவோ, தெரிந்துகொள்ள விருப்பமில்லை என்பதற்காகவோ, தெரிந்தும் வெளிப்படுத்த விருப்பமில்லை என்பதற்காகவோ, சூழல், மக்களின் நம்பிக்கை, சமூகக்கட்டமைப்பு, பல்லாண்டு பாரம்பரியம், என்று பொய்க்காரணங்களை இன்னமும் கூறிக்கொண்டிருக்க முடியாது. மதங்களிலேயே ஊறிப்போன, குதிரைக்கண்ணி போல ஒரே பார்வைக்குள்ளாக இருக்குமாறு பழக்கவிக்கப்பட்ட மக்களுக்கு உண்மைகள் தெரிவிக்கப்பட்டே ஆக வேண்டும்.

சரி மோட்சம். மற்றும் நரகம் இருக்கா?

இருக்குதான்.

எங்க இருக்கு?

மோட்சம் என்பதன் மூலச்சொல் என்ன? முக்தி + அகம். வாழ்வின் நிறைவு முதிர்ச்சி கண்டவர்களின் இடம், அகம். நாம முழுமையா நிறைவா வாழ்ந்தா அதுதானே முக்தி, மோட்சம். அந்த வாழ்க்கையை இங்கே தானே வாழ முடியும்.

ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் மோட்சத்தின் பொருள் அகம் தான்.

சரி அப்ப நரகம்?

நரகம் என்பதன் மூலச்சொல் என்ன? நரன் + அகம். நரன் னா மனிதன் என்பதே பொருள். மனிதன் வாழும் இந்த உலகம்தானே நரகம். நரகம் என்றவுடன் பேய், சாத்தான், நெருப்பு, தண்டனை என்று நினைக்க பழக்கப்பட்டுவிட்டோம். உண்மையில் பார்த்தால் இந்த பூமிக்குள்ளே 40 கி. மீ. உள்ளாக நெருப்பு தானே உள்ளது. சூரியக்குழம்பாக, எரிமலையாக, நெருப்புப்பிழம்பாக தானே இருக்கிறது. சரியாகத்தானே முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் நரகம் என்று.

ஆங்கிலம் உள்ளிட்டபல மொழிகளிலும் நரகத்தின் பொருள் நெருப்புதான்.

இயற்கையான விசயங்கள் மதங்களின், தவறான மதவாதிகளின் கைகளுக்கு போனவுடன் பயமுறுத்தி வைக்கப்பயன்படும் விசயங்களாக மாறிப்போனது.

திடீர்னு இந்த வாரம் எல்லா மதங்களும் இணைஞ்சு (?) இந்த நாள் முதல் மோட்சம், நரகம் இல்லைன்னு அறிவிச்சா 99 சதவிகிதம் பேர் மதங்களில் இருக்க மாட்டார்கள். அந்த மோட்ச, நரக பயத்துல தான் மதங்களே ஓடுது.

மோட்சம், நரகம், மதம், கடவுள் இவைகள் இல்லாமல் மனிதன் நல்லவனாக வாழ முடியாதா? ஏன் இதையெல்லாம் நம்புவதாக சொல்லும் மனிதன் மட்டும் நல்லவனாக இருக்கிறானா?

மத நம்பிக்கை மனித வாழ்க்கைக்கு தேவையா?

எல்லா மதங்களும் நல்லது தானே சொல்லுது, நல்ல திட்டங்கள் தானே செயல்படுத்துது. நீயும் அதன்படி நல்லவனா இருந்துட்டு போக வேண்டியது தானே? என்ற கேள்வி வரும்.

ஒழுக்கத்தில் இரண்டு வகை உண்டு.

1. தனிநபர் ஒழுக்கம்.

தனி நபர்கள் அன்பாய் பழகுவது, அடுத்தவர் மீது பொறாமை கொள்ளாதிருப்பது போன்றவை.

2. சமூக ஒழுக்கம்.

லஞ்சம் தலைவிரித்தாடும் சமூகம், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சமூகம், மதுவை  அடிப்படையாக்கிவிட்டு கல்வியை, குடி நீரை வியாபாரமாக்கும் அரசு சமூகம். உழைப்பேயில்லாத, பிறர் உழைப்பை உறிஞ்சிக்குடிக்கும் பண முதலைகளுக்கு லட்ச லட்சமாய் சம்பளம், அன்றாடும் உழைக்கும் விவசாயிக்கு அறைவயித்து கஞ்சி. இவை போன்றவை சமூக ஒழுக்கத்துக்கு எதிரானவை.

தனி நபர் திருந்தினால் நாடு திருந்தும் என்ற பயங்கரமான பொய்யை நம்ப வைக்கிறார்கள்.

நாட்டில் தனி நபர் ஒழுக்கத்தை விட சமூக ஒழுக்கமே, சமூகத்தை உயர்ந்த சமூகமாக பண்பாடுள்ள சமூகமாக வைத்திருக்கும். சமூக ஒழுக்கம் சிறந்திருந்தால் தனி நபர் ஒழுக்கம் தானாய் அமையும். எங்கெங்கும் லஞ்சமே  இருக்கும்போது தனி நபர் தனி ஆளாய்த்தான் நிற்க வேண்டி வரும்.


தமிழ்நாட்டிற்கு 7 கோடி தமிழருக்கு ஒரே ஒரு சகாயம் என்பதைப்போல.


ஏன் ஒரு 10,000 சகாயத்தை நமது கல்வி, சமூகம் உருவாக்கவில்லை.

ஏன் நானும் நீங்களும் இந்தக்கூட்டணியை உருவாக்கக்கூடாது.

தெரு சுத்தமாய் இருந்தால் தனி நபருக்கும் குப்பை போட மனசு வராது இல்லையா? அவ்வாறு இல்லாமல் குப்பையாய் கிடப்பதால் தானே நான் போடலைன்னாலும் குப்பையாதான் கிடக்கும் என்று மேலும் போடுகிறோம்.

இந்த மதங்கள் தனி நபர் ஒழுக்கத்துக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றனவே தவிர சமூக ஒழுக்கம் பற்றி அறிக்கை விடுவதோடு சரி. அதனால்தான் உலகை தன் பண ஆட்சியில் வைத்திருக்கும் பன்னாட்டு முதலாளியத்திற்கு இப்படிப்பட்ட தனி நபர் பாவம் போக்கும் மதங்களே அவசியமாகிறது. மக்கள் சமூக பாவம், கொடுமைகள், வல்லாதிக்கம் பற்றி சிந்திக்க விடாமல், செயல்பட விடாமல் செய்ய அவை பணத்தை வாரி இறைக்கின்றன அத்தகைய மதங்களுக்கு.

உலக வரலாற்றில் போர்களைவிட, நோய்களைவிட, இயற்கை சீற்றங்களைவிட, விபத்துக்களைவிட, மதங்களால் அழிந்தவர்களே, அழிக்கப்பட்டவர்களே அதிகம்.

1. கடவுள் என்பது என்ன?

2. ஒவ்வொரு மதமும் கொடுக்கும் வரையறைதான் கடவுளா?

3. கடவுள் ஆணா? பெண்ணா? மூன்றாம் பாலா?

4. கடவுளுக்கு மதம் உண்டா? உண்டு எனில் எந்த மதம்?

5. இந்து எனில் சைவமா? வைணவமா? பெருந்தெய்வமா? சிறு தெய்வமா? தென்கலையா? வடகலையா? குலதெய்வமா? ஐந்து வர்ணத்தில் எந்த வர்ணம்?

6. இசுலாமியம் எனில் சியாவா? சன்னியா? சூபியா? இராவுத்தரா? பட்டாணியா?

7. கிறித்தவம் எனில் ஆர்.சி.யா? பிரிந்த சகோதரமா? மேற்கத்தியமா? கிழக்கத்தியமா? ஆவிக்குரிய பெந்தகோஸ்தா?

8. புத்தம் எனில் ஹீனயானமா? மகாயானமா?

1. உலகில் 70 சதவிகிதம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் வாழுகிறார்கள். எனவே கடவுள் இருக்க வேண்டும். அவங்களுக்கெல்லாம் தெரியாததா நமக்கு தெரிந்துவிடப்போகிறது – என்ற ஒரு அறியாமை, ஒரு செக்கு மாட்டு சிந்தனை, ஆட்டுமந்தை கூட்ட மனோபாவம் நமக்கு இயல்பிலேயே உருவாக்கப்பட்டு விடுகிறது.

புள்ளிவிவரப்படி ஒவ்வொரு மதத்திலும் சதவிகிதம் அதிகம் இருக்கும். ஆனால் நடைமுறையில் எத்தனை பேர் அம்மதங்களில் இருக்கிறார்கள், பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியே.
கடவுளை நம்புபவர்கள் இவ்வளவு பேர் என்றால் உலகில் ஒவ்வொரு நாளும் போர்களற்ற அமைதியும், ஏற்றத்தாழ்வற்ற சமத்துவமும், ஏழ்மை, பசியற்ற வளமான உலகமும் தானே இருக்கவேண்டும். இல்லையே?

2. பயம் என்னும் பெரும் மாயை:

இருளைக்கண்டால் பேய் பயம், இறப்பைக் கண்டால் மரண பயம், வயதானால் மரணத்துக்கு பின்னால் நடக்கப்போவதை நினைத்து பயம். நரகத்தை கண்டு பயம், நரக நெருப்பு, சாத்தான், அங்கு நடக்கும் தண்டனைகள் கண்டு பயம். வாழும் போது செய்யும் தவறுகள், பாவங்கள் இவைகளுக்கு கடவுள் தண்டித்து விடுவார் என்ற பயம். கோயிலுக்கு, சர்ச்சுக்கு, பள்ளிவாசலுக்கு போகலைன்னா கடவுள் தண்டிப்பார்னு பயம், கடவுளுக்கு காணிக்கை போடலைன்னா பயம்.

இப்படி பயத்திலேயே வாழ்வதுதான் கடவுள் நம்பிக்கையா? ஒர் அன்பான கடவுள் இப்படியா பயமுறுத்தி வைப்பார்?

அம்பானிகளும், அரசியல்வாதிகளும், கோடி கோடியாய் கொள்ளை அடித்துவிட்டு நிம்மதியாய் இருக்கும்போது, அப்பாவி குப்பனும், லட்சுமியும், அந்தோனிசாமியும், ஆரோக்கியமேரியும்,  பக்ருதீனும், பேகமும் ஏன் பயத்தை சுமந்தே வாழனும்?

நாத்திகவாதிகளும், பொதுடைமைவாதிகளும், ஏன் எல்லாருமே ஏற்கக்கூடிய ஒரு கடவுள் தன்மை உண்டு.

ஏன் கடவுள் கடவுள்னு எப்படியாவது கொண்டு வர நினைக்கிறீங்க ஏன் கடவுள் அப்படிங்கற கருத்தாக்கம் இல்லாமலே இருக்க முடியாதான்னு நீங்க கேட்கலாம். தேவை இல்லை தான்.

நம்ம வீட்டில நாம ஒண்ணா இருக்கோம்னா அது ஒரு குடும்பம் ங்கிற அமைப்பால.

பள்ளி, அலுவலகம்னு ஒண்ணா இருக்கோம்னா அது ஒரு தொழிலாளர் கூட்டமைப்பா இருப்பதால,

இது தவிர இனம் அடிப்படையில் ஒண்ணா இருக்கிறோம்னா அது பேசும் தாய்மொழி அடிப்படையால.

இது தவிர நாடுங்கிற கட்டமைப்பு, நண்பர்கள் என்கிற கட்டமைப்பு

இப்படி ஒரு பொதுநோக்கினை, ஒரு குழுமத்தினை வகைப்படுத்த, குறித்துக்காட்ட ஒரு பெயர், வரையறை தேவைப்படுகிறது.

பிரச்சினையால பாதிக்கப்படுகிறவர்கள் ஒண்ணு சேர்கிறார்கள்; மீனவர்கள், விவசாயிகள், தலித்துகள், பெண்கள், அணுவுலை பாதிப்புக்கு உள்ளாவோர் என பல வழி முறைகளில்.

இத்தகைய நல்ல பொதுநல நோக்கத்திற்காக எதிர்கால சமுதாயத்துக்காக போராட இணைபவர்கள் தங்களுக்கு இடையிலான பிரிவினைக்குரிய விசயங்களை விலக்கிவிட்டு வருகிறார்கள். உதாரணமா,

– சாதி, மதம், செய்யும் தொழில் குறுக்கீடுகளைக்களைந்த,

– நேரடியாக பிரச்சினையில் பாதிக்கப்படாவிட்டாலும் போராட்டத்திலுள்ள நியாயம் கருதி,

– பாதிப்பின் கொடுமைகள் கண்டு துடித்து,

– தீமைகள் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்கோடு

என பல காரணங்கள்.

எல்லாவற்றுக்கும் அடிப்படை

நியாயம் சார்பாய் நிற்பது. அநியாயத்துக்கு எதிராய் போராடுவது. 

இந்த நேர்மையான நியாயமான மதிப்பீடுகளின் மீதான ஒட்டுமொத்த விருப்பு, இயல்பு, ஆதங்கம், ரௌத்ரம், சத்தியத்தின் மீதான பிடிப்பு, இவையே நல்ல மனிதரின் நேரிய வாழ்க்கை நெறி.

இந்த நேரிய மதிப்பீடுகளின் ஒட்டுமொத்த பொதுப்பண்புக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஏன்னா இந்த பண்புக்கு கடவுள்னு பேர் வைத்தால் மீண்டும் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களும் உடன் வந்து விடும். என்ன பேர் வைக்கலாம்.

 நாத்திக ஆத்திகம் (Atheistic Theism): 

இதன் நிலைப்பாடு கடவுள் இல்லை என்று சொல்வதில் கடவுள் இருக்கு. 

(s .j. சூர்யா மாதிரி பேசுறதா நினைக்க வேண்டாம்.)

ஏன் சொல்றேன்னா

1. கடவுள் இல்லைன்னு சொல்லும்போது கிடைக்கும் இறைமை, பொதுமை, இயற்கை, மனிதம் மிகப்பிரம்மாண்டமானது. எதனாலும் குறுக்க, சிறுமைப்படுத்த முடியாதது. பிரிவினைகளற்ற சமத்துவம், மூடத்தனமற்ற அறிவு, நல்ல மதிப்பீடுகளின் பொதுமை,  எல்லாம் கடந்த தன்மை, எல்லாவற்றிலும் உள்ளிருக்கும் தன்மை. வரையறைகளுக்கு அப்பாற்பட்ட தன்மை. வெறுமையின் முழுமை, தாய்மையின் .முதன்மை.

2. இவ்வுலக இயற்கை பேரழிவுகளுக்கு “இல்லாக்கடவுள்” பதில் சொல்லாவிட்டாலும் அவைகளை புரிந்துகொள்ள, உண்மை நிலவரத்த ஏற்றுக்கொள்ள நமக்கு உதவும்.

3. மனித குல பேரழிவுக்கு எதிராக, பொது சமூகக் கொடுமைகளுக்கு எதிராக மனித குலம் பிரிவினைகளின்றி ஒன்றிணைய, கூட்டொருமை முயற்சிக்கு அந்த “இல்லாக் கடவுள்” அர்த்தம் கொடுக்கும்.

இதற்கு எதிரான இன்னொரு நிலைப்பாடு இருக்கு.அது


ஆத்திக நாத்திகம் (Theistic Atheism): 


இதன் நிலைப்பாடு கடவுள் இருக்கு என்று சொல்வதில் கடவுள் இல்லை.

அதாவது கடவுள் இருக்காருன்னு சொல்லிக்கிட்டு அதுக்கு எதிரா செயல்படக்கூடிய அனைவரும் இதில் அடங்குவர். நாமும் இருக்கலாம். தெளிவற்ற குருட்டு நம்பிக்கையில் உள்ளோரும் இதில் அடக்கம். மதங்களால் கிடைக்கும் வசதி, வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் சுயநலப்பேர்வழிகள் அனைவரும் இதில் அடங்குவர்.

நித்தியானந்தா, பிரேமானந்தா முதல் ஹரியானா சாமியார் ராம்பாலா வரை (எல்லா மதத்திலும் இந்த போலி சாமியார்கள் உண்டு)

அதனால் தான் தந்தை பெரியார் சொல்வார்:

 • அரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன ஜனநாயகம்.
 • அதிகாரிகள் பொறுக்கித் தின்ன அரசாங்கம்.
 • சாமியாருங்க பொறுக்கித் தின்ன மதம்.

இன்றைய காலக்கட்டத்தில் உள்ள மதங்களை அதன் அடிப்படைகளை, வேர் மூலங்களை தேடி ஆராய்ந்து பார்க்கும்போது எவையும் தன்னிச்சையாக உருவாகவில்லை, திடீரென இன்னொரு கிரகத்திலிருந்து எவரும் வந்து தந்துவிட்டு போகவில்லை. பல நூற்றாண்டு காலமாக மனிதம் உருவாகி, பரவத்தொடங்கி பல கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்து அறிவானதாக, நம்பிக்கைகளாக, வரலாறாக, உருவாக்கப்பட்டவைகள் சில சுயநலமிகளால் மூட நம்பிக்கைகள் ஆக்கப்பட்டு திரிக்கப்பட்டு, கோட்பாடாக்கப்பட்டு மதங்களாக்கப்பட்டு மீண்டும் திணிக்கப்பட்டிருக்கிறது. இவை பற்றி பல்வேறு முந்தைய பதிவுகளில் காணலாம். குறிப்பாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு பதிவுகளில் தேடலாம்.


                                                                                           தொடர்ந்து தேடுவோம் Advertisements