குமரிக்கண்டம்: உண்மையா? பாகம் 1

நாம் இதுவரை அங்கோர்வாட் உள்ளடங்கிய தென்கிழக்காசிய குமர் நாகரீகம், ஈரான், காஷ்மீர் உள்ளடங்கிய சுமேரிய நாகரீகம், மெசொபடோமிய நாகரீகம், எகிப்திய நாகரீகம், மாயன் மற்றும் இன்கா நாகரீகங்களைப்பற்றி குறிப்பிடத்தக்க வகையில் தமிழரோடு, தமிழோடு தொடர்புள்ளதை விவாதித்துள்ளோம்.

இனி  இவை எல்லாவற்றுக்கும் மூலமும் தொடக்கமுமாய் இருந்த தமிழரின் பூர்வீகம் பற்றித் தேடுவோம்.

எந்தச்சூழ்நிலையிலும் இந்தக்கட்டுரைகள், தமிழரின் பழம்பெருமை பேசி நிகழ் காலத்தை மறக்கச்செய்யவோ,

வீண் பெருமை அரிப்புக்குத் தீனி போடுவதோ அல்ல.

உலகின் எல்லா இனங்களும் தங்களது வரலாற்றை மறக்காதவை, அவற்றை பாதுகாப்பவை,  தமிழினம் தவிர.

தமிழினம் மட்டுமே தன் அழிவில் பெருமை கொள்கிறது. எனக்குத் டமில் வராது என தமிங்கிலம் பேசுவதை ஒரு இயல்பான பரிணாமமாக கருதுவது ஒரு குழு.  தாய் மொழி தெரியாததை பெருமையோடு அறிக்கையிடும் கேவலம் எனக்குத்தெரிந்து தமிழர்களிடம்(?)தான் இருக்கு. மொழி என்பது தொடர்புகொள்ள ஒரு வழி தானே எதுவாயிருந்தால் என்ன என இன்னொரு குழு. தமிழில் பேசினாலே தீவிரவாதியாய் பார்ப்பது இன்னொரு குழு, தமிழ் நாட்டில் இருந்துகொண்டே தமிழருக்கெதிராய் பேசும் தினமலர், சோ போன்ற குழுக்கள் இன்னொரு பக்கம்.

தமிழரின் வரலாற்றை மறைத்து திரித்து அழித்து ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாய் அடிமைப்படுத்தி வந்திருக்கும் ஆரியக்கூட்டம், இன்றும் கூட

பூம்புகார் கடலாய்வு நடத்தி பாதியில் மூடியது,

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கையை முடிந்து பல வருடங்கள் ஆன பின்னும் இன்னும் வெளியிடாமல் மறைப்பது,

சிந்துவெளி, துவாரகை ஆய்வு முடிவுகள் தமிழருடையதா, ஆரியருடயதா என்ற கேள்விக்கு மழுப்பலாக அது இந்தியருடையது என்ற முரளி மனோகர் ஜோஷி பா.ஜ.க. சொல்வது,

என தன் முகத்தை தெளிவாகவே காட்டுகிறது.

இதற்கு சரியான பதிலை, வரலாற்றுப்பூர்வமாக, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கவேண்டிய தமிழன் எப்படி இருக்கிறான்?

டாஸ்மாக் தமிழன், ரசிகர் மன்றத் தமிழன், கடலைத்தமிழன், எதையும் கலாய்க்கும் தமிழன், வெட்டிபேச்சு பேசியே காலம்போக்கும் தமிழன், தமிழ், தமிழனுக்கெதிராகவே பேசித்திரியும் எட்டப்பத்தமிழன், சாதியத்தமிழன், தமிங்கிலத்தமிழன், 9-5 அலுவல் தமிழன், இந்தியத்தமிழன், இவர்களை மறைமுக ஆரியக்கூட்டம் எனலாம்.

அவர்கள் அங்கிருந்து செய்ய வேண்டிய வேலையை, உள்ளிருந்தே செய்பவர்கள் (பல நேரங்களில் அறியாமலேயே).

பல்லாயிரம் ஆண்டுகளாய் தமிழர்கள் கட்டிக்காத்த பாரம்பரியம், ஆயிரக்கணக்கில் சித்தர்களும், அறிஞர்களும், கணியர்களும் உருவாக்கிய, வானியல், இலக்கியம், மருத்துவம், கட்டடக்கலை, விவசாயம், மற்றும் தமிழ்த்தாத்தா வ.வே.சு. சேகரித்த ஓலைச்சுவடிகள், பாவாணர் கண்டுபிடித்த வேர்ச்சொல் விளக்கவுரைகள் இன்னும் பிற வீனாகப் போய்விடக்கூடாதல்லவா.

தமிழர் வரலாற்றை உணர்ச்சிப்பூர்வமாய் அல்ல, அறிவியல் பூர்வமாய் அணுகுவோம். உண்மை எது என்பதைத் தேடிக் கண்டுபிடிப்போம். தெரிந்த உண்மையை பகிர்வோம், அறிவிப்போம், அதன் மூலம் தமிழரின் சுமரியாதையை, தன்னம்பிக்கையை மீட்போம். தமிழால் பன்னெடுங்காலமாய் முடிந்தது, இன்றும் முடியும், தமிழ்வழிக் கல்வி, தமிழ்வழி வேலைவாய்ப்பு, தமிழ்வழி அரசாங்கம், தமிழ்வழி தமிழர் மேம்பாடு என ஆங்காங்கே சிறு சிறு முயற்சிகளாய்.

அந்த வகையில் மிகச்சிறிய ஓர் அறிவியல்பூர்வ ஆய்வுத் தேடல் முயற்சிதான் இது.

குமரிக்கண்டம் கற்பனையா? உண்மையா?

ஒரு சிறிய சூழல் அறிமுகம்:

நமது பூமியின் மேல்புறம் 72 % கடல்நீரால் சூழப்பட்டுள்ளது நாம் அறிந்ததே. இந்தப் பெருங்கடல்களில் 5 % மட்டுமே அறிந்து கொள்ள  முடிந்துள்ளது. மீதி 95 % இந்த 21 ம் நூற்றாண்டிலும் அறியப்பட இயலாத புதிர்தான். காண்க:

பூமியின் நிலமட்டத்திலிருந்து பூமியின் மையத்திற்கு உள்ள தூரம் 6371 கி.மீ.

பூமியின் ஒரு பக்கம் நுழைந்து மறுபக்கம் வரவேண்டுமென்றால் 12,742 கி.மீ. (6371 x 2).

அதாவது அதுதான் பூமியின் குறுக்களவு அல்லது விட்டம்.

இந்த 6371 கி.மீ. வரை மையம் கொண்டுள்ள பூமியின் நில உட்பகுதியில் கடலின் அதிகபட்ச ஆழம் வெறும் 11 கி.மீ. மட்டுமே. கால்பந்தின்மேல் ஒரு குன்டூசியை மெதுவாகப் போட்டால் கால் பந்தில் என்ன பள்ளம் உண்டாகுமோ அவ்வளவுதான் கடல் ஆழம். உலகில் உள்ள கடல்களில் மிக மிக ஆழமான அந்த இடத்தின் பெயர் மரியானா படுகுழி (Mariana Trench) பிலிப்பைன்ஸ் நாட்டுக்கருகில் பசிபிக் பெருங்கடலில் உள்ளது.

 

இந்த மரியானா படுகுழிக்குள் எவரெஸ்ட் சிகரத்தை (9கி.மீ. உயரம்) வைத்தால் சிகரத்திற்குமேல் 2 கி.மீ.  உயரத்திற்கு கடல் நீர் இருக்கும்.

1) கடல் அகழ்வாய்வில் குமரி நாடு:

இப்ப இந்தியாவிற்கு வருவோம். தெற்கே இந்தியப்பெருங்கடலில் (அதிகபட்ச ஆழம் (Sunda Trench) சுண்டா படுகுழி 8 கி. மீ. அல்லது 7,725 மீட்டர், சராசரி ஆழம் 4 கி. மீ.) உள்ள நீரையெல்லாம் அகற்றினால், (உடனே மத்த கடலேருந்து தண்ணீ வந்துரும்னு சொல்லாதீங்க) தரை எப்படி இருக்கும். குமரிக்கண்டம்னு சொல்லப்படும் பகுதி எவ்வளவு பெருசா இருக்கும். அதையும்தான் பார்க்கலாமே. கடல் நீர் அகற்றப்பட்ட இந்தியப்பெருங்கடல் தரை.

இந்தியப்பெருங்கடலின் சராசரி ஆழம் 4 கி. மீ. ஆக இருந்தாலும் பல இடங்களில் 2 கி.மீ. க்கும் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரியை ஒட்டி 300 கி. மீ. தூரம் வரை கடலின் ஆழம் அரை கி. மீ. தான்.

இந்தப்பகுதியில் குமரிக்கண்டம் என்று சொல்லப்படும் பகுதியில் எத்தனை தமிழ் நாடுகள் இருந்தன என்றால் மொத்தம் 49 நாடுகள்:

1. ஏழ்தெங்க நாடு,

2. ஏழ்மதுரை நாடு,

3. ஏழ்குணகாரை நாடு,

4. ஏழ்பின்பாலை நாடு,

5. ஏழ்குன்றநாடு,

6. ஏழ்குணகாரை நாடு, 

7. ஏழ்குறும்பனை நாடு

இவற்றின் அறிவியல் தன்மை பற்றி விளக்குகிறார் திரு. தென்காசி சுப்பிரமணியன்

  

இவை ஒன்றும் அறிவியல் தன்மை அற்றது அல்ல.


ஏழ்குணகாரை நாடு – கரை என்பதால் கீழக்குக்கடல் பகுதியில் இவை இருந்திருக்கும்.


ஏழ் குன்ற நாடு – குன்றம் என்பது மலையை சுற்றியுள்ள நாடுகள். குமரியில் மேரு என்றதொரு மலை இருந்ததை ஒப்பிட்டுப் பார்க்க.

இந்தியப்பெருங்கடலுக்குள் இரு பெரும் மலைத்தொடர்கள் இருப்பதைப்படத்தில் காணலாம். மேலே உள்ள படத்திலும் இது தெரியும்.

இந்த மலைத்தொடரில் எப்படி நாடுகள் இருந்திருக்கும் என்று நம்பாதவர்களுக்கு,


படத்தில் உள்ள மேற்குப்புற மலைத்தொடரில் தான், நம்ம ஊரு லட்ச தீவுகள், மினிகாய் தீவுகள், மாலைத்தீவு என்று தமிழ்ப்பெயரிலேயே உள்ள தீவுக்கூட்டம், அமெரிக்காவின் கப்பற்படை, விமானப்படை கொண்ட டியூகோ கார்சிகா தீவு என இத்தனை நாடுகளும் உண்டு.   

தஞ்சை பெரிய கோயிலின் உயரம் 66 மீட்டர். ஜப்பானின் சுனாமி உயரம் அதிகபட்சம் 3 மீட்டர். கி. மு. 10,000 ல் ஏற்பட்ட கடல் கோளின் காரணமாக கடல் மட்டம் உயர்ந்தது 120 மீட்டர். காண்க நாசா அறிக்கை: 1 அல்லது 2 முறை அல்ல, 3 முறை (500 மீட்டர்). கடல் மட்டம் 400 அடி (120 மீட்டர்) உயர்ந்த பின்னும் மேற்சொன்ன தீவு நாடுகள் இங்கு இருக்கிறது என்றால், 120 மீட்டர் குறைந்தால் எவ்வளவு பெரிய நாடுகள் கிடைக்கும்.

மாலைத்தீவுகளை செய்மதியிலிருந்து (satellite) எடுத்த புகைப்படத்தில் காணலாம்.

இந்த மாலைத்தீவின் தலைநகரம் மாலை (Male) ஒரே ஒரு சின்ன தீவு. சுனாமியில் எப்படி தப்பிச்சதுன்னு தெரியலையே. உசிலம்பட்டியாவது கொஞ்சம் பெரிசா இருக்கும் போல.


ஏழ் மதுர நாடுகள் – தென்மதுரை குமரியின் கடைத் தலைநகரம் என்பதால் இந்நகர் சுற்றி அமைந்த நாடுகள் இவை.


ஏழ்தெங்க நாடு – தென்னை மரம் ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென்கிழக்குத் தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப் படுவதும், குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடிருந் தமையும், தென் என்னுஞ் சொல் தென்னை மரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.


ஏழ் குறும்பனை நாடு – மேற்சொன்ன தென்னை போலவே பனையும் தென்னகத்திலே அதிகம். ஏழ் பனை நாடு யாழ்ப்பானத்தைக் குறிக்கும் என்கிறார் இராம கி.

பனை மரம் தெற்கத்திய நாடுகளின் மரம். தெற்கே செல்லச்செல்ல எண்ணிக்கை அதிகரிப்பதாக விக்கிபீடியா சொல்கிறது. 

“கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்ந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவானதே.”


குணகரை தெங்க பனை இவை எல்லாம் திசை குறித்திருக்க, பாலை நாடுகள் மட்டும் முன் பின் எனக்கூறுவானேன். அவற்றையும் குணப்பாலை குடப்பாலை தென்பாலை வடபாலை அல்லது நடுப்பாலை என கூறாமல் விட்டதன் அர்த்தம் என்ன?


இங்கு தான் நாம் இக்குமரி நில நடுக்கோடு தாண்டி பரந்திருந்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.


“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”


ஆக இங்கு முன் பின் பாலை நாடுகள் எனக்கூறியது


சூரியனின் மகர ரேகை பயண காலத்தில் ஒரு ஏழு  நாடுகள் வறட்சி கண்டு அவை முன்பாலை எனவும்,


சூரியனின் கடக ரேகை பயண காலத்தில் மற்றொரு ஏழு நாடுகள் வறட்சி கண்டு அவை பின்பாலை எனவும் கூறப்பட்டிருக்கலாம், கீழே உள்ள உலக உருண்டையில் காணப்படுவது போல.


குமரி முனைக்குத் தெற்கே 5,300 கி.மீ. தொலைவில் பிரான்ஸ் நாடு எடுத்துக்கொண்ட ஆம்ஸ்டர்டம் தீவில் (மேலே உலக உருண்டையில் குறியீடு காட்டும் தீவு) நடத்தப்படும் ஆராய்ச்சி, தொல் தமிழர் தொடர்பான மேலும் பல தகவல்கள் தரும் என்கிறார் இது தொடர்பான கடலாய்வு செய்துவரும் திரு. பாலு அவர்கள். காண்க: தீவு பற்றிய தகவலுக்கு:


2) சங்கத் தமிழ் இலக்கியக் குறிப்புகளில் குமரி நாடு:

 • 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இளங்கோவடிகள்எழுதிய சிலப்பதிகாரத்தில் “பஃறுளியாறும்”, “பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்” “கொடுங்கடல் கொண்டது” பற்றிக் கூறுகின்றது.
 • அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
  வடிவே லெறிந்த வான்பகை பொறாது
  பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
  வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
  தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
 • பாண்டியனை வாழ்த்தும் பொழுது
  “செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
  முந்நீர் விழவின் நெடியோன்
  நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” (புறம் 9)
 • “தொடியோள் பௌவம்” என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் “தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க.”
 • இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, “வட வேங்கடந் தென்குமரி” குறிப்பதாகக் கருதுகின்றனர்.
 • தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்”
  “குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி” (புறம் 6:67)
 • “மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
  மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட” (கலித். 104)
  என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.
  காண்க :


இந்தக் குமரிக்கண்டத்தில்

பஃறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!
குமரிக்கோடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! 

தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

கோடு என்றால் மலை என்று பொருள். குமரிக் கண்டத்தில் குமரிகோடு என்ற மலை இருந்ததாக வரலாறு. இதையொட்டிதான் தற்போதைய குமரி மாவட்டத்தில் விளவன் கோடு, அதன்கோடு, ஆண்டுகோடு, இடைகோடு, மெக்கோடு, நெட்டன்கோடு, திருவிதாங்கோடு, பரகோடு, வெள்ளைக்கோடு, கட்டிமன்கோடு என்று ஊர்களுக்கு பெயரிடப்பட்டது. வட தமிழ்நாட்டில் உள்ள திருச்செங்கோடு என்பதும் மலை உள்ள ஒரு ஊர். 

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் 

மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். 

1. தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440-ல் 4449 புலவர்களுடன், 39 மன்னர்கள் வழிநடத்த இணைந்து நடத்தப்பட்டுள்ளது. 

இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.

2. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700-ல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. 

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. 

3. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில் கி.மு 1850-இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. காண்க:


 3) ஆடு மேய்ச்சான் பாறை:


குளச்சல் துறை முகத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் கடலில் ஒரு சிறிய பாறை தென்படும். இதை ‘ஆடு மேய்ச்சான் பாறை’ என்று கூறுகிறார்கள். கடல் வழியாக எப்படி ஆடுகளை கொண்டு செல்ல முடியும்? அப்படியென்றால் பல வருடங்களுக்கு முன்பு அந்த இடம் தரையாக இருந்திருக்கும். மக்கள் ஆடுகளை மேய்த்திருப்பார்கள். கடல் கொண்டு விட்ட பின்னரும் இன்னும் ஆடு மேய்ச்சான் பாறை என்றே வழங்குகிறது. ஆடு மேய்ச்சான் பாறை 


படத்தை உருப்பெருக்கிக்காண:


இன்னும் அருகில் சென்று பார்த்தால்: (படத்தில் இருப்பவர் கடலியல் ஆய்வாளர் திரு. பாலு )
4) தமிழகத்தின் கடலில் மூழ்கிய நிலப்பகுதி:


கன்னியாகுமரிக்குத் தெற்கே 300 கி.மீ தொலைவு வரை கடலில் மூழ்கிக் கிடக்கும் தமிழர் நிலம்.

எவரும் கூகுள் நிலப்படத்தில் (Google Earth) பார்க்கலாம்.


5) பூம்புகார் சமீபத்திய ஆய்வில்  கிரஹாம்: காண்க: 

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் – இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.


ஆய்வுகள் குறித்து தமிழர்களின் சிந்தனைக்கு:


1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற காரணம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. உண்மையில்  துவாரகை என்பதும் என்பதும் தமிழர் வாழ்ந்த பகுதி தான். அதுபற்றி பின்னர் பகிர்வோம்.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.

பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)

இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
1. பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 2001-02ல் ஆய்வு மேற்கொண்டார்.


2. அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.


3. பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).

காண்க: மலையமான்: நன்றி முகம் மாத இதழ் ஏப்ரல் 2010.


4. மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது. அந்தக் கடலில் மூழ்கியுள்ள மகாபலிபுரம் கோயில் உச்சிப்பகுதி:பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும். இது நிறைவேறினால் தொல் தமிழரின் தொன்மை தெளிவாகும்.


5. “Underworld: The mysterious origins of civilization” என்ற நூலில் பூம்புகார் மாமல்லபுரம் துவாரகை ஆகிய இடங்களில் நடந்த ஆய்வுகளில் பங்கேற்ற கிரகாம் ஆன்காக் (Graham Hancock) தன் பட்டறிவை பகிர்ந்துள்ளார். கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை கடலில் மூழ்கி இருத்தல் வேண்டும் என்றார். இதுபற்றிப் பெருமையோடு அட்டைப்படக் கட்டுரையாகச் செய்தி வெளியிட்ட தி இந்தியாடுடே சிந்துச்சமவெளி நாகரிகம் கி.மு.2500 என்றும், அதைக்காட்டிலும் பழமையானதாக கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை இருந்தது என்றும் பதிவு செய்தது.


6. இதே குழு பூம்புகாரிலும் மாமல்லபுரத்திலும் ஆய்வில் ஈடுபட்டது. இலண்டனில் இருந்து வந்திருந்த கடலுள் மூழ்கித் தேடும் கலை அறிந்தோருடன் தாம் கண்டறிந்தவை பற்றி கிரகாம் ஆன் காக் டர்காம் பல்கலைக்கழகத்தின் புவிஅறிவியல் துறைப்பேராசிரியர் டாக்டர் கிரௌன்மில்ன் அவர்களிடம் கருத்துக் கேட்டார். உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக் கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் கிரௌன் மில்ன். மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளை பார்த்து விட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால் மாமல்லவுரம் கடலில் மூழ்கியது என்று உறுதிப்படச் சொன்னார்.


7. மாமல்லபுரத்தில் இத்தகவலை வெளியிடமுடியாத அவலம். எனவே 10 ஏப்ரல் 2002-ல் இலண்டனில் 8 தெற்கு ஆட்லித் தெருவில் நேரு நடுவத்தில் செய்தியாளர்களிடம் கிரகாம் ஆன்காக் இதைப் பதிவு செய்தார்.  “தமிழ் நாட்டின் மாமல்லபுரம் அருகே கடற்கரையில் இருந்து 5-7 மீட்டர் தூரத்தில் தொடங்கி கடற்கரையில் ஓரு மைல் தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதையுண்ட நகரத்தின் சான்றுகள்; காணப்படுகின்றன. இலண்டனில் உள்ள அறிவியல் தேடுதல் சங்கத்தினரும் இந்தியக் கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித் தேடும் நிபுணர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இது வெளிப்பட்டது.


8. பிரிட்டனில் உள்ள சானல் 4 தொலைக்காட்சி 2002 பிப்ரவரி 11, 18, 25 ஆகிய நாட்களில் Flooded Kingdoms of Ice Age என்ற தலைப்பில் ஒளிபரப்பியது.


9. பென்ங்குவின் நிறுவனம் 7 பிப்ரவரி 2002-ம் Underworld : The Mysterious Origins of Civilization என்ற கிரகாம் ஆன்காக்கின் நூலை  வெளியிட்டது.


10. அந்நூலில் பூம்புகார் ஆய்வில் தான் ஈடுபட்டக் காரணத்தை கிரகாம் ஆன்காக் விவரிக்கிறார்.


“1991 மார்ச்சு 23-ல் மூவர் பூம்புகார் அருகே கடலடியில் ஆய்வு செய்தபோது குதிரைலாட வடிவிலான கற்சுவரை கண்டுபிடித்தனர். 

கடலியலுக்கான தேசிய நிறுவனம் 23 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்த இச்செய்தியை இலண்டனில் உள்ள கிராகாம் ஆன்காக் அறிந்தார். அந்த ஆய்வில் ஈடுபட்ட எசு. ஆர். இராவைத் தேடி 2001-ல் பெங்களூர் வந்தார் கிரகாம் ஆன்காக். அவருக்கும் இராவுக்கும் நடந்த உரையாடலை கிரகாம் ஆன்காக்கின் நூல் பதிவு செய்கிறது. எவ்வாறு கால நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதற்கு கார்பன் 14” அளவு கோல்படி கணக்கிட்டோம் என்றார் கிராவ். ஒரு கட்டிடம் கடலில் 23 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது. அவ்வளவு உயரம் கடல் மட்டம் உயரக் கடலியல் நிபுணர்களைக் கொண்டு கணக்கிட்டீர்களா? என்றார் கிரகாம் ஆன்காக். பிறகு மீண்டும் பூம்புகார் ஆய்வு நடக்கிறது. அதன் முடிவுகளை அறிவிக்க ஆய்வாளர்களிடையே கருத்து மோதல். கி.மு 2 (அ) 3 நூற்றாண்டுக்கும் மேலாக பூம்புகாரின் காலத்தை ஒப்புக் கொள்ள இந்திய ஆய்வாளர்கள் தயங்குகின்றனர். எனவே பெங்களூர் சென்று அங்கு மிதிக் சொசைடியில் பூம்புகார் கடலடியில் கண்டெடுத்தவைகளை – ஒளிப்படங்களை காட்சியாக்கிவிட்டு பூம்புகார் கடலுள் கி.மு. 9500 அளவில் மூழ்கியதென கிரகாம் ஆன்காக் அறிவித்ததை தினமணி நாளோடு செய்தியாக்கியது.


அப்படியென்றால், 11,500 ஆண்டுகளுக்கு  முன்பு பூம்புகார் கடலில் மூழ்கியது.


12. 1970 முதல் நிகழ்ந்த ஆய்வுகள் உலகில் மூன்று காலக் கட்டங்களில் கடற்கோள்கள் நிகழ்வதாகச் சொல்கிறார்கள்.


15000-14000 ஆண்டு முன்பும்,

12000-11000 ஆண்டு முன்பும்,

8000-7000 ஆண்டு முன்பும்

முப்பெரும் கடற்கோள்களை உலகம் எதிர்கொண்டது.13. துவாரகையை கடலியல் நிபுணர்கள் ஆய்ந்து கடல் மட்டம் உயர ஆன காலத்தைக் கணக்கிட்டு அதன் காலம் கி.மு. 7500 ஆண்டுகள் என்றபோது எழாத எதிர்ப்பு பூம்புகார் கி.மு.9500 ஆண்டு என்று சொன்னபோது எழுந்தது என்றால் காரணம் என்ன? கடலை ஒட்டிய ஆய்வுகளுக்கே இவ்வளவு எதிர்ப்புகள் என்றால் கடலடியில் ஆராயச் சொன்னால் என்ன ஆகும்?6) தமிழகத்தில் உள்ள மிக முக்கிய தொல்லிடங்கள் 


தமிழகத்தில் மட்டும் மொத்தம் 500 க்கும் மேற்பட்ட தொல் இடங்கள் அகழ்வாய்வில் இருக்கிறது. காண்க:

அணைத்து இடங்களையும் விளக்கினால் ஆயுள் முடிந்துவிடும்.

மிக முக்கிய 3 இடங்கள் மட்டும்:


1. திருநெல்வேலிக்கருகில் உள்ள ஆதிச்சநல்லூர்

2. பாண்டிச்சேரி (புதுச்சேரி) க்கு அருகில் உள்ள அரிக்கமேடு

3. திருப்பூருக்கு அருகில் உள்ள கொடுமணல் 1. திருநெல்வேலிக்கருகில் உள்ள ஆதிச்சநல்லூர்உண்மையில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வின் காலம் கி. மு. 10,000. காண்க:  பல தொல்லியல் சான்றுகளை ஐரோப்பியர் கொண்டு சென்றுவிட்டனர்.  முதன்  முதலில் இங்கு ஆய்வு நடத்தியவர், ஜெர்மானிய Zuckerman என்பவர். 1876 ல் கண்டுபிடித்த அவர் பலவற்றை தனது ஜெர்மன் நாட்டிற்கு எடுத்து சென்று பெர்லின் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார். Louis Lapique என்ற பிரெஞ்சு நாட்டவரும் 1904 ல் ஆய்வு செய்ய வந்து நமது தமிழ் மக்கள் 10,000 வருடங்களுக்கு முன் பயன்படுத்திய பொருட்களை பாரீசுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். இழப்பதே தமிழன் வரலாறாகிவிட்டது. இன்னும் இருப்பதையாவது பாதுகாப்போம்.

ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 8000-ஆம் ஆண்டு காலத்தில் புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள், தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் அப்போதைய கல்வி நிலையைக்  காட்டுகிறது.

2. பாண்டிச்சேரி (புதுச்சேரி) க்கு அருகில் உள்ள அரிக்கமேடு

முதலாம் நூற்றாண்டு வரை ரோமானியர்களோடு கடல் வணிகம் செய்த மிகப்பெரிய துறைமுக நகரம் இன்று சிதிலமடைந்து கிடக்கிறது. இதையும் ஐரோப்பியர்தான் வந்து கண்டுபிடித்து சொல்லவேண்டி இருந்திருக்கிறது.

Excavations at Arikamedu, the once flourishing port town near Pondicherry (now renamed as Puducherry), for the first time provided datable evidences to confirm trade links with Rome that arched back to the first century CE and helped construct a proper chronology of south Indian history.The credit for establishing Arikamedu’s significance is often attributed to British archaeologist Mortimer Wheeler and his 1945 round of excavations.3. திருப்பூருக்கு அருகில் உள்ள கொடுமணல்

இவைகளோடு ஒரு பின்னிணைப்பு 2000 ஆண்டுக்கு முந்தைய திருபெரும்புதூர் இரும்பு தொழிற்சாலை 


7) தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடலில் 


18 மீட்டர் கடல் நீர் குறைந்தால் போதும் கிடைக்கும் நிலப்பரப்பைப் பாருங்கள். வாடகை சைக்கிளில் இலங்கை சென்று விடலாம். 20 கி. மீ. தூரம் தானே.


மன்னார் வளைகுடாவில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான 21 தீவுகள் இருக்கின்றன. இவை பழைய தமிழகம் கடலில்   மூழ்கியது போக மீதமுள்ள பகுதிகள்.மேலும் தனுஷ்கோடியிலிருந்து ஈழ தலைமன்னாருக்கு தரைவழித்தொடர்பே இருப்பதைக்காணலாம். இதை ராமர் பாலம், ஆடம்ஸ் பிரிட்ஜ் என எப்படி சொன்னாலும் அது இணைந்திருந்த தமிழ்-ஈழ நாட்டின் நிகழ்கால சாட்சியம். 

கீழ்க்காணும் அந்த மண் திட்டுப்பாலத்தின் நீளம் 30 கி. மீட்டர். காண்க: 

சேது கால்வாய் என்று வெட்ட நினைப்பது இந்த மண் திட்டைத்தான். கப்பல் செல்ல வழி ஏற்படுத்த நினைக்கிறார்கள்.

1. உண்மையில் கால்வாய் வெட்டப்பட்டாலும் அவ்வழியே பெரிய கப்பல் செல்ல வழியில்லை.

2. வெட்ட வெட்ட கடல் திரும்பத்திரும்ப மண்ணை கொண்டுவரும். மண் அகற்றுபவர்களுக்கு நல்ல வருமானம். திரும்பத் திரும்ப சாலை போடும் வகையில் அரைகொறை சாலை போடுவாங்கள்ளே அது மாதிரிதான்.

3. கப்பல் நிறுவனம் வைத்திருப்பவர் தி.மு.க. T.N. பாலு. காசு கொட்டும் தொழிலைக் கைப்பற்ற நினைக்கிறார்கள், அவ்வளவு தான்.


8) தனுஷ்கோடி 

1964 இல் அடித்த புயல் மற்றும் கடல் ஊழிக் காரணமாக தனுஷ்கோடி என்னும் ஊர் கடலினுள் மூழ்கியது. இந்தியப்பெருங்கடலில் 12,000 வருடங்களுக்கு முன் நிலப்பரப்பு மூழ்கியதை நம்பாதவர்கள் 50 வருடங்களுக்கு முன் மூழ்கிய தனுஷ்கோடியையாவது நம்புங்க.


தனுஷ்கோடியின் இன்றைய நிலை.


இதே தனுஷ்கோடி 1964 க்கு முன்னாடி எப்படி இருந்தது தெரியுமா ? தனுஷ்கோடி ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்ற ஒரு துறைமுக நகரம். தென்னந்தோப்புகளோடு இருந்த ஒரு ஊர். படத்தைப் பார்த்தாவது நம்புங்க.

காணும் தொடர்வண்டியின் பெயர் போட் மெயில் (Boat Mail).
 அந்த போட் மெயில் 1964 கடும்புயலில் பயணிகளோடு கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டது. எஞ்சியது இதுதான்.
9)  கடலாய்வுகள்

இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய இடத்தை, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழனின் பூர்வீக இடத்தை 

1. 19-ம் நூற்றாண்டில் சேலஞ்சர் என்ற கப்பல் கடலாய்வு செய்தது. 

2. 1889-ம் ஆண்டு ஜெர்மனின் பேஷல் என்ற கப்பலும், ரஷ்யாவின் வித்யசு என்ற கப்பலும் கடலாய்வு செய்தது.

3. இறுதியாக 1960-ம் ஆண்டு அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக குமரிக் கண்டத்தை ஆராய்ந்தது. அப்போது தான் கடலுக்குள் மலை இருப்பது தெரிய வந்தது. 

அதன் பிறகு 38 ஆண்டுகளாக குமரிக் கண்ட கடலாய்வு பணிகள் முடங்கி விட்டன  மத்திய மாநில அரசுகளால்.


சிறிதளவே செய்யப்பட்ட கடலாய்வு பூம்பூகார் நகரத்தின் பழைமையை கி. மு. 9,500 என்று சொல்லும் போது, குமரிக் கண்டத்தில் கடலாய்வு செய்தால் உலக வரலாறே ஒட்டுமொத்தமாக மாறும்.

இத்தோடு முடிவதில்லை நமது தேடல். ஏன் தமிழ்நாட்டை ஒட்டிய பகுதி மட்டும் தான் கடலில் மூழ்கியதா? இல்லையே. அந்த மூழ்கிய உலகின் பிற நாட்டு பகுதிகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்புகள் ஆச்சரியமானவை. 

                                                அடுத்த பதிவில் தொடர்ந்து தேடுவோம்.

Advertisements