நான் ஒன்றும் திரைப்பட தொழில் நுட்பவியலாளனும் அல்ல, நுணுக்கமான திரை விமர்சகனும் அல்ல. சாதாரண ரசிகன். என்னுடைய பார்வையில் சிறந்த பத்து தமிழ் படங்கள்.

10. மகாநதி

படம் வந்த நேரத்திலேயே பார்த்தவுடன் பிடித்துப்போன கமல் நடித்த படம். நடுத்தர வர்க்கத்து மனிதனின் இயலாமை கதையின் கரு. தொழில் சூழ்ச்சியில் சிதிலமாகிப்போன குடும்பத்தில் தான் பெற்ற மகள் பாலியல் தொழில் செய்யும் கோலம் பார்த்த ஒரு தந்தையின் மனநிலை நினைத்தால் இன்றும் சமூகக் கோபம் கொள்ள வைக்கும் திரைப்படம். எனக்குத் தெரிந்து சிறைச்சாலையின் கொடிய சூழலை கொஞ்சம் விவரமாய் சொன்ன முதல் படம்.

9. தமிழ்படம்.

தமிழ்படங்களின் அர்த்தமற்ற காட்சியமைப்புகளை கேள்விக்குள்ளாக்கிய கேலிப்படம். எவருக்கும் இல்லாத தைரியம் இருந்த இயக்குனர் அமுதன். அவரது இரண்டாவது படத்தின் பெயரே இரண்டாவது படம். எதிர்பார்ப்போம். அர்த்தமற்ற தமிழ்ப் படங்களின் பாடல் வரிகளை மட்டுமே கொண்ட ஒரு முழுப்பாடல் ‘ஓ மக சீயா’ கேலியின் உச்சம்.

8. முன்டாசுப்பட்டி 

நகைச்சுவை படம் தான். நகைச்சுவை 7ல்1சுவைதானே. ஆனால் இச்சுவை கலந்த விசயம் வித்தியாசமானது. மூடநம்பிக்கை களைதல். நடிகர் ராமதாஸ் இயல்பான ஆனால் ஆர்ப்பாட்டமான நகைச்சுவையில் களைகட்டுவார். நடிகர் காளியின் ஆங்காங்கே வரும் உரிய நேர நகைச்சுவை பங்களிப்பும் சிறப்பாய் இருக்கும். கதாநாயகன் விஷ்ணு குள்ளநரிக்கூட்டம் படத்தைப்போலவே இதிலும் மிக மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

7. சலீம் 

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாய். ‘நான்’ மற்றும் அதன் இரண்டாம் பாகமான சலீம். சமூகக் கருத்துக்களை வலியத் திணித்திருப்பார்கள் சில படங்களில் (சிவாஜி போன்றவை). நாயக மைய வழிபாடு கொண்டவை அவற்றில் பல (முதல்வன் போன்றவை). வியாபார நெருக்கடிகளுக்கு மத்தியில் சொல்லும் கருத்தில் நேர்மையும், மக்களின் மனங்களில் உணர்ச்சிப்பிரவாக தூண்டுதலுக்கு பதிலாக ஒரு உத்வேகத்தையும், கூடுமானவரையில் இயல்புத்தன்மையும் கொண்டு செல்கிறது.

6. பேராண்மை 

சமூகக் கோபம் கொண்ட இயக்குனர் எஸ். பி. ஜனநாதனின் ‘ஈ’ மற்றும் இந்தப்படம். வித்தியாசமான கதைக்களம். இந்திய விண்ணியல் செயற்கைக்கோளை அழிக்க நினைக்கும் அன்னியரை அழிக்கும் கதை நாயகன். ஆதிக்க சாதியம் அழிக்க நினைக்கும் அடித்தட்டு நிலை முயற்சிகளை வெளிக்காட்டும் திரைப்படம். இந்த இரு நோக்கங்களுக்கு மத்தியில் கதாநாயகியற்ற நேரிய நாயகன், பெண்களின் பங்களிப்பு, போர்த்திட்டமிடல் என வித்தியாசமான களம்.

5. மெளனகுரு 

மென்மையான மனிதன் வன்மையான சூழலில் சிக்கிக்கொள்ளும் நிலை கதைக்கரு. இயக்குனர் சாந்தகுமாரின் திரைக்கதை தான் படத்தின் வலிமையான பலம்.

4. இம்சை அரசன் 23 ம் புலிகேசி

அன்றைய அந்நிய ஆங்கில ஆதிக்கத்தை மட்டுமல்ல மறைமுகமாக நுழையும் 21 ம் நூற்றாண்டு பன்னாட்டு ஆதிக்கத்தையும், இன்றைய எட்டப்பர்களான அனைத்துக்கட்சி கைக்கூலிகளையும் அரசியல் பகடி செய்யும் படம். என்னவொரு துர்ப்பாக்கியம் இதில் வடிவேலுவின் நகைச்சுவை ஆளுமை முழுமையாய் வெளிப்பட்டதால், மையக்கருத்து விளிம்பாகிப் போனது.

3. நந்தலாலா

மிஷ்கினின் படைப்புகளில் இது முக்கியமானது. பலரும் அவர் பற்றி சிலாகித்திருக்கிறார்கள், விமர்சித்திருக்கிறார்கள். அவரின் கதை சொல்லும் பாணி தனித்துவமானது அவரது பரந்த காட்சிபடுத்துதல் போல. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மனிதம் தேடலில் ஒரு நிலை என்றால் – ஓநாயான ஆட்டுக்குட்டி மீண்டும் ஆட்டுக்குட்டியாதல், நந்தலாலா இன்னொரு நிலை-தாய்மைப்பற்று தேடும் முழு மதியற்ற ஒரு மனிதன் எளிய மனிதரில் எல்லாம் மனிதம் வெளிப்பட அதையே இறுதியில் குறையற்ற தாய்மையில் நிறைவாய்க் கண்டுகொண்டு பற்றற்ற மாமனிதன் ஆகிறான்.

2. ஆரண்யகாண்டம் 

இந்தியாவின் குவண்டின் டரன்டினோ, என்று முதல் படத்திலேயே சொல்லுமளவிற்கு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா “வன்முறையில் அழகியலை” சொல்லும் படம். ஜாக்கி செராப், சம்பத், சோமசுந்தரம், கொடுக்காப்புளி சிறுவன் வசந்த், யாஸ்மின் பொன்னப்பா என பங்களிப்பு கொடுக்க பின்னணியில் அழகியல் இசைத்தாண்டவம் ஆடியிருப்பார் யுவன். தமிழ்த் திரைக்கதையில் இது ஒரு மைல் கல்.

1. வாகை சூட வா

“நீ விதைக்கல ஆனா அறுக்கற” என்ற தைக்கும் வாக்கியம்-மையக்கரு. நாயகனின் இயல்பான நடிப்பு, இனியா என்ற நாயகி யின் ஈர்க்கும் நடிப்பும், முக பாவனைகளும், 1966 காலகட்டத்தை கண்முன் கொண்டுவரும் காட்சியமைப்புகள், ஜிப்ரான் என்ற புதுமுக இசையமைப்பாளரின் ரம்மியமான பாடலும், சூழலும், கிராமம்னா அதன் உண்மை இயல்பை காட்டும் வறட்சி, ஏழ்மை, அறியாமை, சிட்டுக்குருவிக்காய் கூடு தேடும் ஊர் போற்றும் முதிய இயற்கை சூழல்வாதி.

தேசிய விருது பற்றி பொதுவாக எதிர்மறை கருத்து இருந்தாலும், இதற்கு கொடுக்கப்பட்டதால் அதை நம்பவேண்டியதாகிவிட்டது. வாழ்த்துக்கள் சற்குணம்.

இவை தவிர வரையறைகளுக்கு அப்பாற்பட்டு அமர காவியங்களாய் வலம் வரும்

முத்தான நான்கு தமிழ்த் திரை ஓவியங்கள்.

4. பாரதிராஜாவின் 16 வயதினிலே,

இந்தப்படமே பல விதங்களில் தமிழுக்கு முன்னோடி:

முதலாவதாக ஆணாதிக்க சினிமா சிந்தனை உலகத்திலிருந்து விடுபட்ட ஒரு பெண்ணிய திரைப்படம்.

இப்படத்திற்கு  முதலில் வைக்கப்பட்ட தலைப்பு மயிலு.

மயிலு என்ற கிராமியப்பெண்ணின் பார்வையில் சொல்லப்படும் கதை.

அவள்தான் காதலனைத் தேர்ந்தெடுப்பாள், அவள்தான் பிடிக்காதவனை நிராகரிப்பாள். அது அந்த மாட்டு வைத்தியராக இருக்கலாம், பரட்டையாக இருக்கலாம் அல்லது சப்பானியாக இருக்கலாம், முடிவெடுப்பது அவள்தான்.

கிராமியத்துக்கு ஓங்கி அடித்தளமிட்ட திரைப்படம்.
சோளம் வெதக்கையிலெ என்ற தொடக்கப்பாடல் ஒலிக்கும் போதே படத்தின் வெற்றி தொடங்குகிறது.

இசையில் கிராமியம், சொலவாடைகளில் கிராமியம், சந்தைக்கு போகும் பயணத்தில் கிராமியம், டூரிங் கொட்டகை படத்துக்கு கிளம்புவதில் கிராமியம், மஞ்சத்தண்ணி தெளிக்கையில் கிராமியம், வீண் சண்டை வலிக்கையில் கிராமியம், ஊர் மைனருக்கு உடன் வரும் அல்லக்கைகளில் கிராமியம், மாட்டுவைத்தியரில், கிராமிய வைத்தியரில், அந்த பெட்டிக்கடையில், டீக்கடை பெஞ்சில் என ஒரே கிராமிய வாசம். சென்தூரப்பூவில், ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, செவ்வந்தி பூ முடிச்ச பாடல்கள் அந்தக்காலகட்டத்தில் கிராமிய தேசிய கீதங்கள்.

3. மகேந்திரனின் உதிரிப்பூக்கள்,

முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, மெட்டி என ஒவ்வொன்றும் முத்துக்களே. மனித உறவுகளை கொச்சைப்படுத்தாமல் மேம்படுத்திய காவியங்கள்.

முள்ளும் மலரும் – ஊரில் அடிதடியில் இறங்கினாலும் தாய், தந்தையற்ற தங்கைக்காய் வாழும் அண்ணன் காளி, காளியை விரும்பும் ஆதரவற்ற வாயாடி

படாபட், பெருந்தன்மையான மேலதிகாரி சரத்பாபு, அவர் நேர்மையாய் பெண் கேட்கும் காளியின் தங்கை ஷோபா, அண்ணனின் பாசத்தைவிடாத தங்கை, தங்கையை வெற்றி பெற வைக்கும் அண்ணனின் பக்குவம் என உணர்வுக்குவியல்.

உதிரிப்பூக்கள்: கிராமத்தில் தம்பதி, இரு அழகிய இரு குழந்தைகள், அமைதியான வாழ்வில் சூறாவளியாய் தந்தையின் வரம்பு மீறிய உறவினால் குடும்ப, ஊர் உறவில் பங்கம் ஏற்பட இறக்கும் தாய், மாய்த்துக்கொள்ளும் அவன், உதிரிப்பூக்களாய் குழந்தைகள்.

2. பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர்

80 களின் துவக்கத்தில் முரட்டுக்காளையாய் ரஜினியும், சகலகலாவல்லவனாய் கமலும் மசாலாத்தனத்தில் வலம் வர வியாபார புதைகுழியில் தமிழ் சினிமா உலகம் சிக்கித்திணறத் துவங்கியது. இந்த வியாபார போதை காலத்திற்கு சற்று முன்பாக 70 களின் பிற்பாதியில் சமூகம் சார்ந்த மக்கள் படங்கள் வந்த காலகட்டத்தில் கோமல் சாமிநாதனின் தண்ணீர்… தண்ணீர்… நாடகத்தை திரைத்தளத்தில் அரங்கேற்றினார் பாலச்சந்தர்.

தமிழில் மிகச்சிறந்த படங்களில் ஒன்று.

தண்ணீருக்காய் அலையும் கிராமத்திற்கு விடிவாய் ஒரு வெளியூர் மனிதன் அருகிலுள்ள அருவியிலிருந்து ஊருக்கு தண்ணீர் கொண்டுவர ஓடை வெட்ட, அதுவரை வராத அரசியல்வாதியும், காவல்துறையும் வந்து தடை போட பிரச்சினை நீண்டு கொண்டே…. இன்றைய கூடங்குளம் பேச்சிப்பாறை, தாமிரபரணி கொக்க கோலா, பெருந்துறை கொக்க கோலா என பிரச்சினைகள் செல்வது போலத்தான்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் மக்கள் போராடினால் தான் விடிவு கிடைக்கும் என்றால் மக்கள் தலைவர்கள் என்று மக்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும். பொது மக்களே பார்த்துக்கொள்ளலாமே?

1. ருத்ரையா வின் அவள் அப்படித்தான்

இயக்குனர் சேரன் கூட ஆட்டோகிராபில் ஆணாதிக்க காதல் கதையை சொல்லியிருப்பார். ஒரு ஆண் பல பெண்களை காதலித்தால் சமுதாயம் ஏற்றுக்கொள்ளும், பாராட்டும், படத்தை பெரிய வெற்றி பெறச்செய்யும்.

அதேநேரம் ஒரு பெண் இரு ஆண்களை காதலித்தால் கூட இழிவாகக் கருதும். படமும் வந்த இடம் தெரியாமல் திரும்பிப் போகும்.

1978 களிலேயே தான் விரும்பிய நல்ல வாழ்கையை வாழ விரும்பும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை அந்தப் பெண்ணின் கண்ணோட்டத்தில் வழங்கியிருப்பார் இயக்குனர் ருத்ரையா “அவள் அப்படித்தான்” படத்தில். ஸ்ரீ பிரியா நாயகியாக நடிக்க கமல், ரஜினி இருவரும் உடன் நடித்திருப்பார்கள்.

காலம் போற்றும் இசையை, பாடல்களை தந்திருப்பார் இளையராஜா: பன்னீர் புஷ்பங்களே…, வாழ்க்கை ஓடம் செல்ல…, உறவுகள் தொடர்கதை… என.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ருத்ரையா வின் “அவள் அப்படித்தான்” தமிழ்படங்களில் மிக முக்கிய இடம் வகிக்கும்.