நீங்களும் தீவிரவாதிதான்.


முதலில் கௌகாத்தி விரைவு தொடர்வண்டி விபத்தில் மரணமடைந்த சுவாதி அவர்களுக்கு அஞ்சலி.


எவ்வளவு காவலர், சிறப்புப் படைகள், மத்தியப் படை, புலனாய்வு அமைப்புகள், அதிகாரிகள்.

மக்களை எப்போதும் புது புது பிரச்சினையில் ஈடுபடுத்தி அவர்களின் வாழ்வாதாரப்பிரச்சினைகளைப்பற்றியே சிந்திக்க விடாமல் செய்யும் அரசியல் பத்திரிகை கூட்டு சதி.

இவ்வளவு காவல், படை, புலனாய்வுகள், 

2G ஊழலில் 1,76,000 கோடி என்ற போது எங்கே போனாங்க இவ்வளவு பேரும்?

வருமானத்துக்கு அதிகமான சொத்து வழக்கு 15, 20 வருசமா இழுக்குதே அதை முடிக்காம எங்க போனாங்க இவங்கெல்லாம்? 

தினகரன் அலுவலகத்தில் 3 இளம் உயிர்கள், கோவை வேளாண்மைக்கல்லூரி பேருந்து எரிப்பில் 3 இளம் உயிர்கள் இவர்களுக்கான நீதி இன்னும் கிடைக்கலியே. இந்தப்படுகொலைகளில் யாருங்க தீவிரவாதி ?

கடந்த ஆண்டு ஹரித்வார் திருயாத்திரை போன சமயத்தில் கடும் மழை, நிலச்சரிவில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் காணோமே. அவர்களை முன்னேற்பாடாக காப்பாற்றாமல் கைவிட்ட தீவிரவாதிங்க யாருங்க? அப்பறம் என்ன…அத்தனை கோடி செலவு பண்ணி செய்மதி, சாட்டிலைட் டுண்ணு அனுப்புறாங்க. 

தமிழ்நாட்டில் ஆங்காங்கே பரவலா மழை பெய்யலாம்னு எதுத்த வீட்டு 80 வயசு பாட்டிகூட வீட்டுக்குள்ளேருந்து சொல்லலாமே. இவ்வளவு வளர்ச்சிக்குப்பின்னையும் 1970 பாட்டையே வானிலை அறிக்கை பாடுச்சுன்னா விவசாயி எதை நம்பி விதைக்க முடியும். விவசாயம் பாழ் பட்டு எல்லாரும் நிலங்களை வித்துட்டு நகரங்களுக்கு போறாங்கன்னா யாருங்க தீவிரவாதி?

தஞ்சை விவசாயத்திலும் அந்நிய நாட்டு மீத்தேன் வாயு நிறுவனம் கொள்ளையடிக்க அனுமதிக்குதே இங்கே யாரு தீவிரவாதி?

வானத்துல 15 கோடி கிலோமீட்டரில் இருந்து வரும் நியூட்ரோன் கதிர்களை ஆராய்ரதுக்கு 5000 கோடி செலவு செஞ்சு 20 கிலோமீட்டர் சுற்றளவுக்கு தேனியிலே 2 கிலோமீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைக்கும் அரசுகள் மக்களின் அன்னாட பிரச்சினை மின்சாரம் இல்லை, அதனால படிக்க முடியல, தொழில் பாதிக்குது, விவசாயத்துக்கு ஒழுங்கா மின்சாரம் கிடைக்கல, எத்தனை கோடி பேருக்கு பாதிப்பு. இவ்வளவு பாதிப்புகளை செய்ற தீவிரவாதிகள் யாருங்க?

எல்லா இடத்துலயும் அதனால அழிவுன்னு தெரியும். தெரிஞ்சும் ஒண்ணுக்கும் ஒதவாத காயலாங்கடை ரசிய அணுஉலைய அத்தனை ஆயிரம் உள்ளூர் மக்களின் ஓராண்டுக்கு மேலான எதிர்ப்பையும் மீறி இன்னும் ரெண்டு உலை கொண்டு வந்து வைப்பேன்னு 2 கோடி தென் தமிழக மக்களின் வாழ்க்கையோட விளையாடுரான்னா எவன்ய்ங்க தீவிரவாதி?

உலகத்துலேயே 4 காவது பெரிய ராணுவம் இந்திய ரானுவம்னு சொல்லிக்கிட்டு 500 மீனவர்கள் கொல்லப்பட பாத்துக்கிட்டுருந்தாங்கன்னா யாருங்க கொடூரமான தீவிரவாதி. 

போதையில சாலை விபத்துக்கள், தாரம் யார், தாய் யார்னு தெரியாம கள்ள உறவுக்கொலைகள், சின்ன, சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் கொலை, ரௌடிகள், ஆயுதம் உள்ளவன் தான் வாழ முடியும்னா அனைத்துக்கும் காரணம் குடி, டாஸ்மாக் னா யாருங்க அடிப்படை தீவிரவாதி. 

தீவிரவாதி ஓடுறான், ஓடுறான், பிடி, பிடி, ன்னு சொல்லிக்கிட்டே பின்னால் ஓடுகிற அவனுங்களை பிடிங்க முதல்ல.

சும்மா எதுக்கெடுத்தாலும் ஐ. எஸ். ஐ, பாகிஸ்தான், முஜாகிதீன், அல் கொய்தா அப்படின்னு தூக்கத்துல கூட உளர்ற தின மலர், துக்ளக் பத்திரிகைகள் மாதிரி உள்ளவங்கதான் முதல் தீவிரவாதிங்க. அவங்களை பிடிச்சு உள்ள போடுங்க, நாட்டுல சட்டம் ஒழுங்கு அமைதியா இருக்கும்.

ஒரு வருடத்தில் 1,60,000 கொலை நடக்கிறது. ஒரு மணி நேரத்தில் 40 கொலைகள். எங்கே? இந்திய சாலைகளில். உலகிலேயே சாலை விபத்துக்கள், மன்னிக்கணும், சாலை மனிதப்படுகொலைகள் மிக மிக அதிகம் நடக்கும் அளவில், சாலை நிர்வாகம், ஆட்சி நிர்வாகம் இந்தியாவில நடக்குதுன்னா யாருங்க தீவிரவாதி? 

யூதர்கள் மன்னிக்கணும், ஹிட்லர் கூட இவ்வளவு கொலைகள் செய்யலீங்க. பாடாவதியான மக்களாட்சி அரசாங்கங்கள் செஞ்சுக்கிட்டு இருக்கும்போது யாருங்க தீவிரவாதி?


 அயர்லாந்துக்கருகில் கடலுக்குள்ளே ஒரு இங்கிலாந்துக் கப்பல் மூழ்கிக் கிடப்பது பற்றி ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வந்த செய்தி பற்றி படித்திருப்பீர்கள். அதை மீட்க இங்கிலாந்து அரசு முயற்சி எடுத்தது. காரணம், 1940 களில் இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவிலிருந்து சென்ற கப்பல் அது. ஜெர்மனியப்படையால் அது மூழ்கடிக்கப்பட்டிருந்தது. 

முக்கிய விசயம் என்னன்னா அந்தக்கப்பலில் இருந்தது இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கொள்ளையடிக்கப்பட்ட 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள வெள்ளிக்கட்டிகள். (1 டாலர் 60 ரூபாய்; 1 மில்லியன்- 10 லட்சம்) கணக்கு போட்டு பாருங்கள். நம் நாட்டை ஏறக்குறைய 300 ஆண்டுகள் ஆண்டான். எத்தனை கப்பல்களில் எவ்வளவு கொள்ளை போயிருக்கும். நினைச்சாலே வேதனை தரும் செய்தி.

இந்த ஐரோப்பியர்கள் கிட்டேயிருந்து நீதி, சமத்துவம் எதிபார்க்க முடியுமா.

 

இன்னைக்கும் சுவிஸ் வங்கிகளில் மட்டும் இந்தியப்பணம் 100 லட்சம் கோடி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். அந்த நாடு உலக அமைதி விரும்பும் நாடா. இத்தனை நாட்டு மக்களின் இரத்தப்பழியை சுமந்து கொண்டல்லவா இருக்கிறது. அந்தப்பணம் திரும்ப இந்தியாவிற்கு வந்தால் இந்தியா எவ்வளவு பெரிய வளமான நாடு.


சுவிஸ் அரசு கேட்டும்  ஒரு கடிதமும் இந்திய அரசு போடவில்லை. (டைம்ஸ் ஆப் இந்தியா 22.05.2008). ஏன்னா பணம் போட்டவனே எப்படிக்கேட்பான். காங்கிரஸ், பி.ஜே.பி. ரெண்டும் கூட்டுக் களவானிங்க. தமிழ்நாட்டுல, தி.மு.க. வும் அ.தி.மு.க. வும் போல. வெளியில அடிச்சிக்கிறமாதிரி இருக்கும். ஆட்சி மாற்றம் வந்தவுடனே எதிர்க்கட்சி கைது, வாய்தா, போராட்டம், இப்படி இருக்குமே ஒழிய யாருக்காவது தண்டனை கிடச்சிருக்கான்னு பார்த்தா ஒன்னும் இருக்காது. மக்களுக்குத்தான் 1008 பிரச்சினைகள் இருக்கே, மானாட மயிலாட முதல், நடிகர், நடிகையின் 10 வது காதல் பிரிவு வரை வருத்தப்பட. மறப்பதற்கே பிறந்தவர்கள் நாம்.

சரி, இந்தியர்களின் கள்ளப்பணம் இந்தியாவிற்கே வந்தால் என்ன செய்ய முடியும்.

1. நமது அயல் நாட்டுக்கடனை 13 தடவை திருப்பி அடைக்கமுடியும்.

2. 5 ஆண்டுகளுக்கு வரியே இல்லாத பட்ஜெட் போட்டு மக்கள் வரியில்லாமல் பொருள் வாங்கிச்செல்லலாம்.

3. 45 கோடி ஏழைக்குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கலாம்.

இந்த கருப்புப்பணக்கொள்ளைத் தீவிரவாதத்தை 100 கோடி மக்களுக்கு எதிரான தீவிரவாதத்தை என்னன்னு சொல்ல?

வட இந்தியாவில ராணுவ நடவடிக்கையாக “பச்சை வேட்டை நடவடிக்கை” (Operation Green  Hunt) அப்படிங்கற பேர்ல மாவோயிஸ்ட அழிக்கிறோம்னு சாதாரண, அப்பாவி மக்களை கொன்னுகிட்டிருக்குதே நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசு பயங்கரவாதம். எதுக்கு இப்படி சொந்த மக்களையே தன் ராணுவத்தை வச்சு இந்தியா கொல்லுது. 

அருந்ததி ராய் சொல்றாங்க: 

ஒரிசாவில் உள்ள பாக்சைட், இரும்பின் மதிப்பு சுமார் 4 டிரில்லியன் டாலர்கள் (சுமார் 200 இலட்சம் கோடி ரூபாய்). இந்த நான்கு டிரில்லியன் டாலர்களோடு, சட்டீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் புதைந்திருக்கும் பலகோடி டன் உயர்தர இரும்புத்தாதுவின் மதிப்பையும்

யுரேனியம், சுண்ணாம்புக்கல், டாலமைட், நிலக்கரி, வெள்ளியம், மார்பிள், செம்பு, வைரம், அதங்கம், குவார்ட்சைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்ட்ரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் போன்ற 28 வகை அரிய கனிமப் பொருட்களின் பல மில்லியன் டாலர் மதிப்பையும் கூட்டிக் கொள்ளுங்கள். 

அவற்றோடு கையெழுத்திடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் (ஜார்க்கண்டில் மட்டும் 90 ஒப்பந்தங்கள்) இணைந்த பகுதியாக அம்மாநிலங்களில் கட்டப்படவிருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள், அணைகள், நெடுஞ்சாலைகள், இரும்பு, எஃகு மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகள், அலுமினிய உருக்காலைகள் ஆகியவற்றோடு பிற உள்கட்டுமானத் திட்டங்களின் பண மதிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்”. 

இது இப்பச்சை வேட்டையின் பிரம்மாண்டத்தையும், முதலீடு செய்திருப்பவர்களின் அவசரத்தையும் புரிந்து கொள்ள உதவும்.  

வேதாந்தா, போஸ்கோ, ஜிண்டால், டாடா, ஸ்ஸார் போன்ற உள்நாட்டு, பன்னாட்டு பண முதலைகளுக்கு உதவ, சல்வாஜூடும், ஹர்மத் வாஹினி, சாந்தி சேனா, வேட்டை நாய்கள், கோப்ரா இப்படி பல பெயர்களில் செயல்படும் சிறப்புக் காவல் படைகள், சட்டவிரோத கூலிப்படைகள் மற்றும் சி.ஆர்.பி.எஃப்., பி.எஸ்.பி., நாகா பட்டாலியன் போன்றவற்றின் மூலம் நடத்தப்பட்டுவரும் தாக்குதலில்,

பழங்குடிப் பெண்களைக் கும்பலாக வன்புணர்ச்சி செய்தல், மக்களைக் கொலை செய்தல், கிராமங்களைத் தீக்கிரையாக்குதல் என்பதைத் தவிர வேறோன்றுமில்லை. 

வீரப்பனைப் பிடிக்கிறோம் என்ற பெயரில் தமிழக அதிரடிப்படை செய்த அப்பகுதி மக்கள் மீதான படுகொலைகள், வன்புணர்ச்சிகள், சித்திரவதைகளை நாம் எளிதில் மறந்திருக்க முடியாது. அரசு பயங்கரவாதத்தை எந்த தீவிரவாதத்தில் சேர்க்க?

இதையெல்லாம் பார்க்கும்போது பழைய கவிதை ஒன்னு நினைவுக்கு வருது.

வெகு நாட்களுக்கு முன்பாக எங்கோ கேட்ட ஒரு கவிஞனின் கவிதை. அவர் சிறையில் உள்ள கைதிகளிடம் பேசிவிட்டு வந்ததை ஒரு கவிதையாய் சொன்னார். ஞாபகம் வந்தது வரை முயற்சிக்கிறேன். அக்கவிதை இப்படிச்செல்லும:

 

நான் சிறைக்குச்சென்று சிறைக் கைதிகளிடம், அவர்கள் சிறைக்கு வந்த காரணத்தைக்கேட்டேன். ஒவ்வொருவராகச் சொன்னார்கள்.

முதலாமவர் சொன்னார்.

நான் வேலையில்லாப் பட்டதாரி என்னிடம் வருமானத்தைக் கேட்டார்கள். எனக்கு வேலையில்லை என்றேன். 

வருமானத்தை மறைத்ததாய்க் கூறி என் மீது வழக்குப் போட்டு விட்டார்கள்.

இரண்டாமவர் சொன்னார்.

நான் கரிமூட்டை தூக்கும் கூலியாள். கூலியாகக் கிடைத்த பணத்தில்,  கரி பட்டு பணம் கறுப்பாகி விட்டது.

கறுப்புப்பணம் வைத்திருந்ததாய்க் கூறி என்னைக் கைது செய்து விட்டார்கள்.

அடுத்தவர் 

நான் சொந்த வயலிலே வரப்பெடுத்துக்கொண்டிருந்தேன்.

பிரிவினைவாதி என்று சொல்லி என்னைப் பிடித்துக்கொண்டு வந்து விட்டார்கள்.

இன்னொருவர் 

அதிகாரி இலஞ்சம் வாங்கினான். தடுத்தேன். 

அரசு அதிகாரியைக் கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி என்னைத் தடுப்புக்காவலில் வைத்தனர்.

நான் “அலிபாபாவும் 40 திருடர்களும்” பட சுவரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்தேன்.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதித்தாய்க் கூறி என்னை அள்ளிக்கொண்டு வந்தனர்.


சாதி, மத பேதங்களை, குடியை ஒழிப்போம் என்றேன்.

அரசாங்கச்சொத்துக்கு சேதம் விளைவிப்பதாய்ச் சொல்லி அவசரச்சட்டத்தில் பிடித்துக்கொண்டு வந்தனர்.


பொதுக்கூட்டத்தில், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை நாடு கடத்துவோம் என்று பேசினேன்.

கடத்தல்காரன் என்று சொல்லி என்னைக் கைது செய்து விட்டனர்.


அக்கிரமத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தச்சொன்னான் கண்ணன் என்று யாரோ தெரு முனையில் கதாகலாட்சேபம் செய்து கொண்டிருந்தனர்.

என் பெயர் கண்ணன்.

பயங்கரவாதி என்று சொல்லி என்னைப் பிடித்து வந்து விட்டனர்.

எல்லோரும் ஜன கன மன பாடிக்கொண்டிருந்தனர். 

நான் ரெண்டு நாள் பசியில் சுருண்டு படுத்துக்கிடந்தேன்.

இந்திய இறையாண்மைக்கு எதிரானவன்னு என்னை இழுத்துக்கொண்டு வந்தனர்.

கவிஞர் முடிப்பார்:

நான் சிறையை விட்டு வெளியில் வந்தேன். 

நாடு ‘மயான அமைதி’யாய் இருந்தது.

Advertisements