வெற்றி கொடி கட்டு திரைப்படத்தில், முகவரி கேட்கும்போது சொல்லப்படும் இது, நமக்கெல்லாம் தெரிந்த பிரபலமான வடிவேலு-பார்த்திபன் நகைச்சுவை.

நம்பர் 6,

விவேகானந்தர் தெரு,

துபாய் குறுக்குச்சந்து,

துபாய் மெயின் ரோடு,

துபாய்.

நம்மகிட்டயும் யாராவது முகவரி கேட்டல் என்ன சொல்வோம். ஒரு உதாரணத்துக்கு:

1. பொதுவான முகவரி

சீனிவாசன்,

147, பொன்மொழி நகர்,

குருசாமிபுரம்,

சேலம். 627007

இதுபோல ஒரு முகவரி.

சரி இதே முகவரிக்கு அடுத்த மாநிலத்திலிருந்து கடிதம் எழுதினால், கூடுதலாக

2. தமிழ்நாடு என்று மாநிலத்தைச் சேர்ப்போம்.

அதே சமயம் இன்னொரு நாட்டிலேருந்து எழுதினால் கூடுதலாக

3. இந்தியா என்று நாட்டையும் சேர்ப்போம். அவ்வளவுதான். இதற்கு மேல் தேவைப்படாது.

இவ்வளவு தான் நம்ம முகவரியா. நம்ம முகவரிக்கு எல்லை அவ்வளவுதானா?

ஏன் இதுக்குமேல எழுத முடியாதா?

எனக்கு ஒரு சின்னச்சின்ன ஆசை. இதை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தி எழுதிப்பார்க்க, நீங்க உத்தரவு கொடுத்தீங்கன்னா … சரிதான்.

இந்தியா என்கிற இந்த நாட்டை அடுத்து

4. இந்த பூமி

நம்ம நிலாவோட சேர்த்து பூமியப் பார்த்தா அது ஒரு அழகுதான்

இந்த பூமிக்கு அடுத்து என்ன

5. நமது சூரிய மண்டலம்.

3 வது தாங்க நம்ம பட்டாணி பூமி. பட்டாணியாவது கொஞ்சம் பெரிசா இருக்கும் போலிருக்கு

நம்ம பட்டாணிய பக்கத்துல உள்ள கிரகங்களோட வச்சுப்பார்த்தா… அட கெரகமே இவ்வளவு தானா நம்ம பூமி.

நம்ம பட்டாணிய சூரியனோட வச்சுப்பார்த்தா…

என்னங்க நம்ம பட்டாணியக் காணோம்.

அந்த வெளிர் ஊதாவுக்கு கீழ…

அடக்கொடுமையே அதுக்குள்ளதானா இவ்வளவு நம்மோட ஆட்டமும்.

நம்ம சூரியனுக்கு அடுத்து வேறென்ன இருக்கு


அடுத்த பகுதிக்குள்ள போறதுக்கு முன்னாடி மீண்டுமாய்

ஒரு சிறிய விளக்கம் ஒளி ஆண்டு பற்றி.

நாம் பொதுவாக தூரங்களை கிலோமீட்டரில் அளக்கிறோம். 

(நமக்குத் தெரியும் 1 கி. மீ. – 1,000 மீட்டர்)

கடல் தூரங்களை நாட்டிகல் மைல் என்பார்கள். 

1 கடல் மைல் = 1,852 மீட்டர்.

விண்வெளியில் தூரம் அதிகம் என்பதால் கிலோமீட்டரில் சொல்ல இயலாது. கோடி, கோடி, கோடி ன்னு சொல்லவேண்டி இருக்கும் என்பதால் ‘ஒளி ஆண்டு’ என்ற பதம் பயன்படுத்துகிறார்கள்.

ஒலி-(சப்தம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 340 மீட்டர் 

(அதாவது அரை கிலோமீட்டர் கூட இல்லை) ஆனால்

ஒளி-(வெளிச்சம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 3,00,000 கிலோமீட்டர். (3 லட்சம் கி.மீ)

அப்படின்னா 

1 நிமிடத்துக்கு (3,00,000 X 60)

1 மணி நேரத்தில (3,00,000 X 60 X 60)

1 நாளைக்கு (3,00,000 X 60 X 60 X 24)

1 மாதத்திற்கு (3,00,000 X 60 X 60 X 24 X 30)

1 வருடத்திற்கு (3,00,000 X 60 X 60 X 24 X 30 X 12)

இந்த பெருக்குத்தொகைதான் ஒரே ஒரு ஒளி ஆண்டு. (ஏறக்குறைய 10 லட்சம், கோடி கிலோமீட்டர்)

இப்ப மீண்டும் நமது பயணத்தைத் தொடர்வோம்.

6. நமது சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரக்குழு (Inter Stellar Neighborhood)

நம்ம சூரியன் மட்டும் என்ன தனியாவா இருக்குது அதுக்கு பக்கத்துல உள்ள சூரியன்களை (அதாவது நட்சத்திரங்களை) கொஞ்சம் பக்கத்துலதான் போய்ப்  பார்ப்போமே.

படத்துல உள்ளது போல, இவை எல்லாம் 10 ஒளி ஆண்டு தூரத்துல உள்ள நட்சத்திரங்கள். சரி அப்ப ரொம்பவும் கிட்ட உள்ள நட்சத்திரம் எது.

ஆல்பா செந்தௌரி (Alpha Centauri) என்ற நட்சத்திரம்தான் கிட்டக்க இருக்கு. சூரியனிலிருந்து ஆல்பா உள்ள தூரம் 4.24 ஒளி ஆண்டுகள்.

(சூரியன்லேருந்து வர்ற ஒளி நம்ம பூமிக்கு 8 நிமிசத்துல வந்துருது. ஏன்னா 15 கோடி கிலோமீட்டர் தூரம்தான்.)

ஆனா இந்த ஆல்பா நட்சத்திரத்திலேருந்து கிளம்பற வெளிச்சம் நம்ம பூமிக்கு வந்து நம்ம கண்ணுக்கு தெரியணும்னா 4 வருசம் 2மாசம் 4 நாள் ஆகும். நாம பார்க்கிற நட்சத்திர ஒளி 4.24 வருசத்துக்கு முன்னாடி கிளம்புனதுதான்.

போதுண்டா சாமி… நில்லுங்க அதுக்குள்ள கிளம்புனா எப்புடி

சரி … நம்ம சூரியனுக்கு பக்கத்துல இவ்வளவுதானா நட்சத்திரங்கள்?

இவ்வளவும் 10 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள நட்சத்திரங்கள் மட்டும்தான்.

மொத்தம் ஒரு லட்சம் ஒளி ஆண்டு தூரம் வரை இருக்குதுங்க நம்ம குடும்பத்துல உள்ள நட்சத்திரங்கள் மட்டும்.

நம்ம சூரியன் போல 40,000 கோடி (400 பில்லியன்) நட்சத்திரங்கள் உள்ளதுதாங்க நம்ம பெரிய குடும்பம்.

நம்ம பெரிய குடும்பத்துக்கு பேரு “பால்வெளி வீதி” (Milky Way)

7. பால்வெளி வீதி அண்டம் (Milky Way) விண்மீன் திரள் அ விண்மீன் பேரடை.

கீழே உள்ள நம்ம “பால்வெளி வீதி” ங்கிற பெரிய குடும்பத்துல இருக்கிற 40,000 கோடி நட்சத்திரங்களில் ஒன்னே ஒன்னுதான் நம்ம சூரியன். அம்புக்குறி காட்டும் ஒரு சின்ன புள்ளி தான் நம்ம கிழக்கே உதிக்கும் சூரியன். அதுக்குள்ளதான் நம்ம பூவுலகும்.

இந்த சூரியன் (அதோட நாமளும்தான்) நம்ம பெரிய குடும்பத்தின் மையத்திலேருந்து எவ்வளவு தூரத்தில இருக்குன்னு பார்க்கலாம்.

28,000 ஒளி ஆண்டுகள் தூரத்துல. அந்த மையத்த (bulge ) ஒரு தடவ நம்ம சூரியன் சுத்திவர 25 கோடி வருடங்கள் (250 Million Years) ஆகும்.

இப்ப இந்த நம்ம பெரிய குடும்பத்துல உள்ள 40,000 கோடி நட்சத்திரங்கள்ள நம்ம சூரியனைத்தவிர வேற ஒரே ஒரு நட்சத்திரத்த மட்டும் பார்ப்போம்.

அதன் பெயர் V Y Canis Majoris.

நம்ம பூமியிலேருந்து 5,000 ஒளி ஆண்டுகள் தூரத்துல இது இருக்கு. காண்க:

இந்த நட்சத்திரத்துக்கு பக்கத்துல நம்ம சூரியனை வச்சா எப்படி இருக்கும். அதையும் பார்ப்போமே.

அட ங்கொக்க மக்கா

இவ்வளவு சின்னதா நம்ம சூரியன்.

அப்ப அந்த Canis எவ்வளவு பெருசு?

நம்ம பூமியின் குறுக்களவு அ விட்டம் – 12,756 கிலோமீட்டர்.

நம்ம சூரியனின் குறுக்களவு-ஏறக்குறைய 14 லட்சம் கிலோமீட்டர். சூரியனிலிருந்து கிளம்பும் தீ சுவாலையின் நீளம் மட்டுமே இரண்டரை லட்சம் கிலோமீட்டர்.

ஆனா இந்த ‘Canis Majoris’ நட்சத்திரத்தின் குறுக்களவு 198 கோடி கிலோமீட்டர். காண்க:

இந்த நட்சத்திரம் எவ்வளவு பெரியது என்பதற்கு ஒரே ஒரு சிறு விளக்கம்.

நாம் பயணம் செய்யும் விமானத்தின் சராசரி வேகம் மணிக்கு 900 கிலோமீட்டர். (2004 ல் இந்தோனேசியாவில் ஏற்பட்டு இந்தியாவுக்கு வந்த சுனாமியின் வேகமும் மணிக்கு 900 கிலோமீட்டர்.) சரி, சென்னையில் ஒரு விமானத்தில் ஏறி மாறாத அதே வேகத்தில் (மணிக்கு  900 கி.மீ.) மேற்கு திசையில் அரபிக்கடல் வழியாக உலகத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு வங்காள விரிகுடா வழியாக மீண்டும் சென்னைக்கு வந்து சேர சரியாக 48 மணிநேரம் ஆகும். அதாவது இரண்டு பகல், இரண்டு இரவு. ஆக உலகத்தை ஒரு முறை சுற்றிவர 2 நாள் எடுக்கிறது.

அதே விமானம், அதே வேகம் (மணிக்கு  900 கி.மீ.) இந்த ‘Canis Majoris’ நட்சத்திரத்தில் ஒரு முனையில் கிளம்பி மீண்டும் அதே முனைக்கு திரும்ப வந்து சேர ஆகும் காலம் 1,100 வருடங்கள். நன்கு கவனியுங்கள், 1,100 மணி நேரமல்ல, வருடங்கள்.

இது உண்மைதானா என்று சந்தேகம் கொள்பவர்கள் இந்த காணொளி யைக் காணலாம்.

இந்த ‘Canis Majoris’ நம்ம பால்வெளி வீதி குடும்பத்திலுள்ள 40,000 கோடி நட்சத்திரங்களில் ஒன்னே ஒன்னுதான். இதுபோல சிறிய, பெரிய இன்னும் 39,999 கோடி நட்சத்திரங்கள் இருக்கு. விடிஞ்சது போ…

இந்த அண்டவெளியில் நம்ம பால்வெளி வீதி குடும்பம் மட்டுமா இருக்கிறது. நம்ம குடும்பத்துக்கு மிக அருகில் இருக்கக்கூடிய ஒரு சில குடும்பங்களை (அதாவது, விண்மீன் திரள் அ பேரடைகளை) இணைத்து ஒரு குழு ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதற்குப் பெயர் “Local Galactic Group” நெருங்கிய விண்மீன் பேரடைக் குடும்பங்கள்.

8. “பால்வெளி வீதி” க்கு அருகில் உள்ள அண்டங்கள் (Local Galactic Group)

நமது பால்வெளி வீதி தவிர்த்து, மிக அருகில் உள்ள வேறு விண்மீன் பேரடை குடும்பங்களில் M 32 என்ற இலக்கம் கொண்ட விண்மீன் பேரடை அண்ட்ரோமேடா ‘Andromeda’ முக்கியமானது. மேலே நீல வண்ணத்தில் உள்ளது.

நமது ‘பால்வெளி வீதி’ யைவிட “அண்ட்ரோமேடா” மிகப்பெரியது.

1. நமது பால்வெளி வீதி யின் குறுக்களவு 1 லட்சம் ஒளி ஆண்டு தூரம்.

அண்ட்ரோமேடா விண்மீன் பேரடையின் குறுக்களவு 25 லட்சம்  ஒளி ஆண்டுகள் தூரம். (2.5 மில்லியன்)

2. நமது பால்வெளி வீதி யில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை 40,000 கோடி. (400 பில்லியன்)

அண்ட்ரோமேடா விண்மீன் பேரடையில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை 1 லட்சம் கோடி.

(1 ட்ரில்லியன்)

(அட போங்கப்பா நீங்களும் ஒங்க விண்வெளியும் இப்பவே கண்ண கட்டுதே…)

இப்ப ஒரு பயங்கரமான செய்தி சொல்லப்போறேன்

அண்ட்ரோமேடா விண்மீன் பேரடை நமது பால்வெளி வீதி குடும்பத்திலிருந்து 25 லட்சம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்குதுன்னாலும் அது நம்மை நோக்கி மிக வேகமா வந்துகிட்டு இருக்கு, வினாடிக்கு 140 கி.மீ. வேகத்துல, அதாவது மணிக்கு 5 லட்சம் கி. மீ. வேகத்துல, நம்ம பால்வெளி வீதி யோட மோதுவதற்கு.

கவலைப்படாதீங்க நம்ம பால்வெளி வீதி பேரடையோட மோதி இரண்டும் ஒன்றாக கலப்பதற்கு இன்னும் 400 கோடி (4 பில்லியன்) வருடங்கள் ஆகும்.

இந்த சின்னத்தொகுப்போடு கூட இணைந்த, ஒரு பெரிய தொகுப்பு இன்னொன்னு இருக்கு அதன் பெயர் “விர்கோ அண்டங்களின் தொகுப்பு”.

9. விர்கோ அண்டங்களின் தொகுப்பு (Virgo Super Cluster)

சுமார் 1 கோடி ஒளி ஆண்டுகள் இடைவெளியில் உள்ள நம்ம பால்வெளி வீதி போல உள்ள 100 விண்மீன் பேரடைகளின் தொகுப்பு. இதுல அந்த ‘local group’ க்குள்ளதான் நாம இருக்கோம்.

இந்த ரெண்டு தொகுப்புகளையும், இன்னும் பிறவையையும் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய தொகுப்பு இருக்கு அதன் பெயர் “அண்மையிலுள்ள அண்டங்களின் பெருந் தொகுப்பு”

10. அண்மையிலுள்ள அண்டங்களின் பெருந் தொகுப்பு (Local Super Clusters)

இதுல நாம எங்க இருக்கோம். நடுவுல தெரிகிற ‘Virgo Super Cluster’ அங்கதான், அதுக்குள்ளதான்.

அடுத்து எல்லாமும் ஒன்னு சேர்ந்த அண்டம்தான்.

11. இதுவரை காணமுடிந்த ஒட்டு மொத்த அண்டங்கள் (Observable Universe)

இதுவரை நமது மனிதகுல வானியல் அறிவால் கண்டுபிடிக்க முடிந்த அண்டங்களின் ஒட்டுமொத்த தொகுப்பு.

9300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தை உள்ளடக்கியது.

அவ்வளுதாங்க நம்மோட ஒட்டுமொத்த முகவரி.

அமெரிக்கா அனுப்பிய ஹப்பிள் தொலை நோக்கி (Hubble Telescope) அனுப்பிய புகைப்படங்களிலேயே மிகச்சிறந்தது என்று சொல்லப்படும் விண்மீன் பேரடைகளின் (Galaxies) புகைப்படம்.

12. என்ன கிளம்பிட்டீங்க இன்னும் ஒன்னே ஒன்னு மிச்சம் இருக்கு.

உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

இவ்வளவு நட்சத்திரங்களும் ஒட்டு மொத்த பேரண்டத்தில் எத்தனை சதவிகிதம் தெரியுமா?

அட பரிதாபமே…

இவ்வளவு கோடாணு கோடி நட்சத்திரங்களும், கிரகங்களும், விண்மீன் பேரடைகளும் சேர்ந்து
மொத்தமே 0.4 சதவிகிதம் தான். 1 சதவிகிதம் கூட இல்லை.

மத்ததெல்லாம் 99.6 சதவிகிதம் கருமையான அண்ட இடைவெளி மற்றும் வாயு மட்டுமே.

இந்த கொடுமையை நான் எங்க போய் சொல்ல ?

ஆக இந்தப் பேரண்டத்துல தான் நாம என்னமா கோலோச்சிக்கிட்டு இருக்கோம்.

எவ்வளவு சாதாரணமானவர்கள் நாம் என்பதைவிட

நீ பெரியவனா, நான் பெரியவனா

படிப்பு தோல்வி, காதல் தோல்வி, தொழில் தோல்வி

சொத்து தகராறு

சின்ன விசயத்துக்கு கொலை

பதவிப்பித்து, பணத்துப்பித்து

குடி, போதை, காம அடிமைத்தனம்

என் சாதி, என் மதம்

எல்லாத்தையும் விட்டுட்டு

முடிஞ்சவரை

பிறருக்கு கெடுதல் நினைக்காமல்,

பிறரை வாழவிட்டு

நல்லதே நினைச்சு

நாமும் வாழ்ந்து

கடைசியில

இந்த

பரந்துபட்ட அண்டவெளியோட

நாமும் ஒருநாள்

ஐக்கியமாவோம்.

ஏன்னா

வாழ்வது ஒரே ஒரு முறைதான்

அதை முடிஞ்சவரை

அர்த்தமுள்ளதாக்குவோம்.