உலகின் எல்லா மொழிகளிலும் மக்களுக்கு பிடிக்காத ஒரு வார்த்தை மரணம்.

கொஞ்சம் நினைச்சு பாத்தோம்னா மனித வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்பது புரியும்.

என்ன ஒரு கொடூரம், மிகச்சின்ன உறுப்பான மனிதக் கழுத்து அறுபட்டால் உயிர் இல்லை, மனுசனே இல்லாம போயிடறான்.

விபத்து ஏற்பட்டு ஒரு கம்பியில் மோதினால் உயிர் போயிருது.

புற்று நோய் போன்று ஏதாவது வந்தால் வாழ்க்கையே முடிஞ்சு போயிருது.

என்ன ஒரு மானங்கெட்ட உயிர்டா இது.

இது ஒரு வாழ்க்கை.

மனித வாழ்க்கையை போல உண்டா ன்னு சொல்றதுக்கு வேற சில மதங்கள்.

வாழ்க்கைக்கு 1008 விளக்கங்கள் கொடுக்கலாம்.

ஆனா அடிப்படையில்

அர்த்தங் கெட்ட வாழ்க்கை இது.

எதுக்கு ஒரு பிறப்பு, கொஞ்ச நாளைக்கு ஒரு வாழ்க்கை, பரதேசி போல ஒரு சாவு.

என்னைப்பொருத்தவரை

மனுசன்

பிறக்கிறதுக்கும் அர்த்தமில்லை,

இறக்கிறதுக்கும் அர்த்தமில்லை.

ஆனா இருக்கிறதுக்கு அர்த்தம் இருக்கா?

நாமலா கொடுத்தாத்தான் உண்டு.

(Between meaningless birth and death, life is a search for meaning)

(முயலாத பிறப்புக்கும் விலகாத இறப்புக்குமிடை வாழ்க்கை ஒரு முடியாத தேடல்)

மரணத்தை இப்படியும் புரிஞ்சிக்கிறாங்க:

# மத ரீதியாக விண்ணில் பிறப்பு 

# தர்க்க ரீதியாக சிந்தனை நிறுத்தம் 

# உடல் ரீதியாக 

   1. நுரையீரல் சுவாசிக்க மறுப்பு 

   2. இதயம் துடிக்க மறுப்பு 

   3. மூளை செயல்பட மறுப்பு 

# எதார்த்த ரீதியாக ஒட்டு மொத்த மனித இயக்கம் செயலிழப்பு

ஒரு சில கல்லறை இடங்களில் இந்த வார்த்தையை பார்த்தாலே பயம் வரும்.

இன்று நான்… நாளை நீ…

மனித வாழ்க்கையின் நிலையாமையை இது சொன்னாலும் வாழ்கையை பற்றிய பயம்தான் முன் நிற்கும்.

மனித உடம்புன்னா இவ்வளவுதான்

1. நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை,

2. இரண்டு நீச்சல் குளங்களை சுத்தப்படுத்த தேவையான குளோரின்,

3. 3 கிலோ கால்சியம்,

4. 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்கக் கூடிய அளவிற்கு பாஸ்பரஸ்,

5. இரண்டு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு,

5. 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு (என்ன, சில பேருகிட்டேருந்து இன்னும் கொஞ்சம் சோப்பு அதிகமா கிடைக்கும்)

மனித உடம்புன்னா இவ்வளவுதானா ?

அதையும் தாண்டி…, அதுக்கும் மேலே… ன்னு சினிமாவில் சொல்லலாம். நடைமுறையில் …

தன்னிலே வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை. விரும்பினால் நாம்தான் அர்த்தம் கொடுக்க முடியும்.

எப்படி ?

வாழ்க்கையை:

கருப்பு – வெள்ளையில் பார்க்கலாம்.

ஈஸ்ட்மென் நிறத்தில் பார்க்கலாம்.

பல வண்ணத்தில் பார்க்கலாம்.

முப்பரிமாணத்தில் கூட பார்க்கலாம்

வாழ்க்கைக்கு நாம் தரும் பிம்பம் நம் அங்கமாக மாறும்.

அலெக்சாண்டர் போல எடுத்துச்செல்வது எதுவுமில்லை எனலாம்.

கலிங்கப்போரால் மாறிய அசோகர் போல புத்த ஜீவி-புத்தி ஜீவி ஆகலாம்.

என்னைப்பொறுத்தவரை மரணம் என்பது ஒரு தொடர்ச்சி. 5 க்கு அடுத்து 6 என்பதைப்போல.

இயற்கையானது. ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு.

ஒரு பேருந்தில் ஏறி பயணித்து இறங்கி விடுவதைப்போல ஒரு நிகழ்வு அல்ல மரணம்.

அது பயணம் போன்ற ஒரு தொடர்ச்சி.

1. திருமணம் முடித்து நான் இன்னொரு பிறப்பை உருவாக்கலாம், இது ஒரு தொடர்ச்சி.

2. திரை, இலக்கியம் போன்ற துறைகளில் படைப்பை உருவாக்கலாம்,

இது ஒரு வகை தொடர்ச்சி.

3. மண்டேலா, மாவோ போல தன் வாழ்க்கைக்கு சிறப்பை உருவாக்கலாம், இது இன்னொரு தொடர்ச்சி.

1. டிசம்பர் 25 இயேசு பிறந்த நாளல்ல. அவர் செத்த நாள் தான் அவர் பிறந்த நாள்.

2. இன்று (மார்ச்-23) பகத்சிங் பிறந்த நாள். காரணம் தூக்கிலே போடப்பட்ட நாள், (ராஜகுரு, சுகதேவ் உடன்) அவர் பிறந்த செப்டம்பர் 27 ஐ யாரும் நினைப்பதில்லை. சாவுதான் பிறப்பிற்கு அங்கீகாரம் தருகிறது.

3. முதல் கரும்புலி கேப்டன் மில்லர் எனப்படும் வல்லிபுரம் வசந்தன் 1987 ஜூலை 5 ல் மரணத்தை நேரில் சந்தித்த முதல் உயிர்க்கொடையாளன். வாகனத்தில் சென்று வெடிகுண்டு கோட்டையை தகர்த்தவர். சாவை மரணிக்கச் செய்தவர்.

4. போராளியாய் போராடி விடுதலை பெற்றுத்தந்து அதே நாட்டின் (கியூபா ) அமைச்சராய் இருந்துவிட்டு மீண்டும் பொலிவியா நாட்டு மக்களுக்காய் போராளி ஆன உலகின் ஒரே மனிதன் சே குவேரா. (1967 அக்டோபர் 9)

5. ஒரு நாட்டின் பெயரையே நேரியவர்களின் நாடு (Burkina Faso) என்று மாற்றிக்காட்டி, காலனியாதிக்க வாதிகளுக்கு சவாலாய் இருந்ததால் 37 வயதிலேயே கொல்லப்பட்ட தாமஸ் சங்கரா (1987 அக்டோபர் 15)

மறுபிறப்பு, உயிர்ப்பு, ஏழ்பிறப்பு என்று விசுவசிப்பவர், நம்புபவர் எல்லாம் சாவைக்கண்டு பயப்படும் போது மரணத்தை ஒரு தொடர்ச்சி ஆக்க வாழ்வதே வாழ்வு.

47 வயதில் சாவதோ, 90 வயதில் சாவதோ அது நாட்காட்டியில் தான் வித்தியாசம் காட்டும் முன்னே அல்லது பின்னே என்று. வேறு ஒரு மண்ணாங்கட்டி வித்தியாசமும் இல்லை.

நாம் இறந்தால் 5 நாளில் மறக்கத்தொடங்கி விடுவார்கள். 5 வருடம் கழித்து நெருங்கிய உறவினர் ஒருவேளை நினைக்கலாம். 50 வருடம் கழித்து, 500 வருடம் கழித்து ???

நாம் இருந்ததற்காண அடையாளமே இருக்கப்போவதில்லை.

(இராஜராஜன், திருவள்ளுவர் போன்ற விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் அந்த திருக்குறள் ஓலைச்சுவடிகள் மீட்கப்படாமல் அழிக்கப்பட்டிருந்தால் திருவள்ளுவரே கூட முகவரியே இல்லாமல் போயிருப்பாரே, அது போல எத்தனை திருவள்ளுவர்கள் அழிக்கப்பட்டு இருப்பார்கள் முதல், இரண்டாம், சங்கப்புலவர்கள். தஞ்சை கோவில் கல்வெட்டை படித்ததும் தானே கட்டியது இராஜராஜன் என்கிறோம், இல்லையென்றால் வரலாற்றையே மாற்றியிருப்பார்களே கைபர், போலன் கணவாய் மக்கள்)

தூக்கம் என்பது ஒரு குட்டி மரணம் தானே. மூளை, இதயம், நுரையீரல், இரப்பை எல்லாம் வேலை செஞ்சாலும் நாம் நினைவிழந்து, செயலிழந்து தானே கிடக்கிறோம்.

இதிலே செயற்கையாக வேறு நம்மை செயலிழக்கச் செய்து சுகம் கண்டு கொள்கிறோம், மது மற்றும் போதைகளில்.

நினைவு திரும்பாத தூக்கத்திற்கு நம்மை இட்டுச்செல்வதை விட நிச தொடர்ச்சியை உருவாக்க நமக்கு திராணி வேண்டும்.

அந்த நெஞ்சுறுதி இருந்ததால் தான் சாவைப்பார்த்து பாரதி சொன்னார்:

காலா (எமன் அதாவது யாமம் அல்லது காலம்) உன்னை சிறு புல்லெனவே மதிக்கிறேன் – என் 

காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்  

பாரதிதாசன் சொன்னார்:

“எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்

தனையீன்ற தமிழ்நாட்டு தனக்கும் என்னால்

தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்,

செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்”