தொழில் புரட்சிக்குப்பின் முதலாளிகளால் தொழிலாளர்கள் கசக்கி பிழியப்பட்டனர். விடியல் முதல் இரவு வரை தொழிலாளர்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்ட போது 1866 ஆகஸ்ட் 20 ந்தேதி அமெரிக்க பால்டிமோர் நகரில் முதல் அமெரிக்க தேசிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.   

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, 1886 மே முதல் நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர். நியூயார்க், பால்‌டிமோர், வாஷிங்டன், டெட்ராய்டு‍, சிகாகோ ஆகிய நகரங்களில் மே முதல் நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது.

  1886 மே முதல் நாள் அமெரிக்காவின் பிற நகரங்களில் நடைபெற்றது‍ போலவே சிகாகோ நகரிலும் வேலை நிறுத்தம் தொடங்கியது. 40 ஆயிரம் பேர் கலந்து‍ கொண்ட பேரணி நடைபெற்றது. பலர் அன்று‍ காவல்துறையினரால் கைது‍ செய்யப்பட்டனர்.  

 

இதனால், மே 3, 1886 அன்று 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். தொழிலாளர்கள் மீது‍ காவல்துறை நடத்திய கொடூர நிகழ்வு  

ஹேமார்க்கெட் படுகொலை  என்று அழைக்கப்படுகிறது. அதில் பலியானவர்களின் இரத்தம் தோய்ந்த துணிதான் சிவப்பான பொதுவுடமைக்  கொடியாக மாறியது.

இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் 1886 மே 4 ஆம் நாள், இரவு 07.30 மணியளவில் சிகாகோவில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். காவல் துறை எல்லா நாட்டிலும் ஆள்வோரின் கையாட்கள்தான். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவலர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர்.

அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். 

7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த உழைப்பாளர்களின் தியாகத்தை நினைவு கூற சிகாகோவில் உள்ள நினைவுச்சின்னம்.

இதன் பிறகு பிரான்சின் பாரிஸில் மாநாடு:

பிரான்சின் பாரிஸில் 1789 ஜூலை 14 ல் நடைபெற்ற பிரெஞ்சுப்புரட்சிக்குப்பிறகு, அப்புரட்சியின் 100 ஆண்டு நினைவுக்கொண்டாட்டமாக, அதே பாரிசில் 1889 ஆம் ஆண்டு‍  ஜூலை 14 ல் நடைபெற்ற இரண்டாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் (International Workers Congress)  மாநாட்டில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

1. 1890 மே முதல் நாள் 8 மணி நேர வேலைக்காக இயக்கம் நடத்துவது‍.  

2. 1890 மே முதல் நாளிலிருந்து‍ மே முதல் நாள் தொழிலாளர்களின்  நாளாக அனுசரிப்பது. 

3. மார்ச் 8 ம் நாளை சர்வதேச பெண்கள் தினமாகக் கொண்டாடுவது.

                        உழைக்கும் மக்கள் வாழ்வு மேம்பட வாழ்த்துக்கள்.