நண்பர்களே, இந்த “தமிழர்-அறிவியல்” தேடுதலில் முக்கியமாகப் பட்ட சில புரிதல்கள், விளக்கங்களை சில தேடலுக்குப்பின் பகிர்கின்றேன். நான் ஓர் ஆர்வலன்தான், அறிவியலாளன் அல்ல. எனக்கும் புரியாத சில அறிவியல் விசயங்களை உங்களோடு சேர்ந்தே தேடுகிறேன். குறைகள் இருக்கலாம், வாருங்கள் இணைந்தே தேடுவோம்.
 இப்பதிவின் முதல் பாகம் காண:

 1. ராகு, கேது என புதிய இரண்டு கோள்கள்.

கீழ்க்காணும் தலைப்புகளில் இவை பற்றிய தேடுதலைத் தொடங்குவோம்.

 1. சூரியன்-பூமி-சந்திரன் இவைகளுக்கிடையே ஆன சுழற்சி உறவு
 2. ராகு-கேது கிரகங்களின் தேவை என்ன? 
 3. ராகு-கேதுவும் சூரிய-சந்திர கிரகணங்களும் 
 4. தொன்மக்கதையான ராகு-கேது என்ற தமிழரின் வானியல் அறிவியல்.
 5. ராகு-கேதுவில் தமிழர்களின் வானியல் அறிவு.


ராகு-கேது வில் தமிழர்களுக்கு இருந்த வானியல் அறிவை நாம் கண்டுகொள்ள முதலில்  

சூரியன்-பூமி-சந்திரன் இவைகளுக்கிடையே ஆன சுழற்சி உறவை புரிந்து கொள்வது மிக மிக அவசியம்.


 1. சூரியன்-பூமி-சந்திரன் இவைகளுக்கிடையே ஆன சுழற்சி உறவு:

நாம் பொதுவாக சூரியன்-பூமி-சந்திரன் இவைகளுக்கிடையே ஆன சுழற்சி உறவை இரண்டே வரிகளில் சொல்லிவிடுவோம்.

 1. பூமி சூரியனை சுற்றுகிறது.
 2. சந்திரன் பூமியை சுற்றுகிறது.

உண்மையில் பூமி சூரியனை 4 விதமாக சுற்றுகிறது. இதனை விளக்க பம்பர உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
பம்பரத்தை தரையில் சுற்றும் போது, அது நான்கு விதமான இயக்கங்களைக் காட்டும் என்பார் தமிழறிஞர் இராம.கி.

பூமியின் முதல் இரண்டு இயக்கங்கள் நமக்கு நன்றாகத்தெரியும்.

1.  ஆணி என்ற அச்சில் இருந்த வாறே தன்னைத்தானே பம்பரம் சுற்றுதல். (பூமி தன்னைத்தானே சுற்றுதல்- அதாவது ஒரு நாள்-24 மணி நேரம்) [Rotation]
2. பம்பர ஆணி தரையில் ஒரு இடத்தில் நிற்காது பரவி ஒரு முழு வட்டமோ, பாதி வட்டமோ போடும். (பூமி சூரியனை சுற்றி வருதல்-அதாவது ஒரு வருடம்- 365 நாள்) [Ecliptic Revolution]

3. மூன்றாவது விதமான இயக்கம் கிறுவாட்டம் (gyration). பம்பரம் ஆடி ஓயும் நேரம் வருகையில் தலையாட்டம் போடும், கீழே உள்ள படம் விளக்குவது போல. நமக்கு தலை கிறு கிறுன்னு சுத்துது அப்படின்னு சொல்வோம்ல அது போல. வானியலில் இந்த கிறுவாட்டம் [Precession] எனப்படுகிறது. ஏன் இந்த கிறுவாட்டம் ?

இந்த கிறுவாட்டம் ஏற்படக்காரணம் 23.5 பாகை (டிகிரி) பூமி சாய்ந்திருப்பதே.
இந்த கிறுவாட்டத்தில் ஆடும் பூமி அந்தக் கிறுவாட்டத்திலும் ஒரு சுற்று சுற்றுகிறது (Precession). அந்த கிறுவாட்ட சுற்றில் வானில் உள்ள ஒட்டுமொத்த நட்சத்திரக்கூட்ட வளையத்தை ஒரு முறை சுற்றி முடிக்க (Sidereal Year)ஆகும்  காலம் 26,000 வருடங்கள். அதாவது கீழுள்ள படத்தில் பூமிக்கு மேலுள்ள சிவப்பு வளையத்தில் 0 பாகையில் ஆரம்பித்து 360 பாகையை பூர்த்தி செய்ய 26,000 வருடங்கள் எடுக்கிறது. [2012 டிசம்பர் 21 ல் ஒரு சுற்று முடிந்தது.]

இந்த 26,000 வருடக்கணக்கில் தற்சமயம் கிறுவாட்ட துருவ மையம் போலாரிஸ் (Polaris) என்ற நட்சத்திரத்தினை நோக்கி உள்ளது. பூமியின் துருவ மையம் “ஆல்பா திரகோனிஸ்” ல் இருந்தபோது எகிப்து பிரமிடு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது, கி. மு. 2750 ல். அதுபற்றி விளக்கமாக வேறு ஒரு பதிவில் காணலாம்.

 1. நாலாவது விதமான இயக்கம் நெற்றாட்டம். பம்பரம் ஆடி ஓயும் நேரம் வருகையில் தலையாட்டம் போடுவதோடு முன்னும் பின்னுமாக ஒரு இழுப்பு இழுக்கும். அதை நெற்றாட்டம் என்பர் (nutation).

சூரியனை சுற்றி வருவது தவிர மீதமுள்ள 3 வகை சுற்றுக்களையும் கீழேயுள்ள படம் விளக்கும்.
(நெற்று = nut, இந்த nut -ல்இருந்துதான் nucleus, nuclear science எல்லாம்பிறந்தன என்பார் தமிழறிஞர் இராம.கி)
சூரியனைச் சுற்றிவரும் புவியும் பம்பரத்தைப்போல தன்னுருட்டல், வலைத்தல், கிறுவாடல், நெற்றாடல் என நான்கு வகை இயக்கங்கங்களைக் காட்டுகிறது.
1. பூமி தன்னைத்தானே சுற்றுவதில் காலை, பகல், எற்பாடு, மாலை, யாமம், விடியல் என்ற தமிழர் குறிக்கும் ஆறு சிறு பொழுதுகள்.
2. பூமி சூரியனை வலம் வருவதால் ஏற்படுவது இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என தமிழர் குறிக்கும் ஆறு பெரும் பொழுதுகள்.
மீண்டும் சூரியனைச்சுற்றும் பூமிக்கு வருவோம்.

நம்ம பூமியின் 23.5 பாகை சாய்வு தான் சூரியனை பூமி சுற்றிவருவதிலும் நமக்கு பருவகால மாற்றத்தை பெற்றுத்தருகிறது என்பது நாம் அறிந்த ஒன்றே. அதை தெளிவுபடுத்தும் விதமாக ஒரு படவிளக்கம்.
இப்ப அப்படியே சூரியனிலிருந்து சந்திரனுக்கு போவோம்.
பூமி சூரியனை சுற்றுவதில் 23.5 பாகை சாய்வு இருப்பதைப்போல (A)
சந்திரன் பூமியை சுற்றுவதில் 5 பாகை சாய்வு (B) இருக்கிறது. (5 டிகிரி)
இந்த 5 பாகை சாய்வு தான் “ராகு-கேது கிரகங்களின் தேவையை” நமது தமிழ் முன்னோர்களுக்கு உருவாக்கியது.

 1. ராகு-கேது கிரகங்களின் தேவை என்ன? 

ராகு-கேது கிரகங்களுக்கும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

இந்த 5 பாகை சாய்வு என்ன மாற்றத்தை உண்டுபண்ணுகிறது?

ஒரு சில அடிப்படை விசயங்கள்:

 1. ராகு-கேது என்பவை பூமி, வெள்ளி கிரகங்கள் போல உண்மையான கிரகங்கள் இல்லை. கற்பனை கிரகங்கள் தான், அல்லது நிழல் கிரகங்கள்தான், அல்லது சாயா (virtual) கிரகங்கள்தான்.

ஆனால் மிக மிக தேவையானவை. எதற்கு?
சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை கணக்கிட.

உதாரணமாக பூமியின் மீது அட்ச ரேகைகள் (Latitude),

தீர்க்க ரேகைகள் (Longitude) வரைகிறோம்.

இவையும் கற்பனைக்கோடுகள் தான். ஆனால் இவை இல்லாமல் உலகின் எந்த ஒரு இடத்தையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. நேரம் கணிக்க முடியாது. இவை பற்றி ஒரு சிறு குறிப்பு கீழே.

 1. அட்ச ரேகைகள் : (இடப்பக்கம்-வலப்பக்கம்) 180 கோடுகள் – காரணம் நில நடுக்கோட்டிலிருந்து வட துருவம் வரை 90 பாகை; தென் துருவம் வரை 90 பாகை. நில, கடல் இருப்பிடம் கண்டுபிடிக்க.

 1. தீர்க்க ரேகைகள் : (மேலிருந்து கீழ்) 24 கோடுகள் – காரணம் லண்டன் கிரீன்வீச்சை (0-பாகை) மையமாகக்கொண்ட ரேகைகள், பூமி உருளையாதலால் 360 பாகைகள்  கொண்டது. 15 பாகைக்கு ஒன்றாக 24 (360/15 = 24) 24 மணி நேரம் ஒரு நாள். நேரம் கணக்கிட.

அவை போலத்தான் நமது முன்னோர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இரண்டு கற்பனை கிரகத்தையே படைத்திருக்கிறார்கள்.
இவைகளின் தேவை பற்றி மேற்கத்திய நாடுகள் 1971 ல் தான் உணர்ந்து முதல் முறையாகக் குறிப்பிட்டிருக்கிறது. “Lunar standstill” was apparently first used by archeologist Alexander Thom in his 1971 book “Megalithic Lunar Observatories”. காண்க:

 1. ராகு-கேது சொல்லும் முடங்கல் அல்லது மேற்கத்தியம் சொல்லும் Lunar Standstill என்பது என்ன?

இதை எளிய விதத்தில் புரிந்துகொள்ள சூரிய முடங்கல் (Solar Standstill அல்லது Solstice) உதவும்.

அதாவது கடக ரேகை மற்றும் மகர ரேகை களுக்கிடையே மட்டுமே காணப்படும் சூரியன், கடக ரேகை அல்லது மகர ரேகையை அடைந்தவுடன் திரும்புவதற்கு முன் இரண்டு நாட்கள் அங்கே நிற்பது போன்று தோன்றுவதே அவ்வாறு முடங்கல் அல்லது Solstice என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் சூரியன் பயணிப்பதில்லை பூமியின் 23.5 பாகை சுழற்சியால் அவ்வாறு உணரப்படுகிறது என்பது நமக்குத்தெரியும்.
The term “solstice“, which derives from the Latin solstitium: sol– (sun) + –stitium (a stoppage).
பூமியைப்போல சந்திரன் தன்னையே சுற்றிக்கொள்ளாது நம்ம பூமியை மட்டும் சுற்றுகிறது. இதனால் பூமியிலிருந்து நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். மறுபக்கம் நமக்கு தென்படவே தென்படாது. ஒரு எளிய உதாரணம் கீழே உள்ள படம்.
பூமியை 5 பாகை அளவு கோண மாறுபாட்டுடன் சுற்றுவதால்,

சூரியனை சுற்றும் பூமியின் சுற்றுப்பாதைக்கு மேலேயும் கீழேயுமாய்  கீழ்க்காணும் படம் சொல்வது போல சுற்றுகிறது. (சந்திரனின் இந்த மேல்-கீழ் சுற்றுப்பாதையை சூரியனின் கடக-மகர ரேகை சுற்றுப்பாதையோடு ஒப்பிடலாம்.) சூரியனை இவ்வாறு சுற்றுவது பூமிக்கு ஒரு வருடம் ஆகுவதைப்போல சந்திரன் பூமியைச்சுற்ற 28 நாட்கள் ஆகிறது.
சந்திரன் பூமியை மட்டுமே சுற்றுகிறது என்பது நமக்கு தெரியும். சந்திரன் பூமியை சுற்றுவதை சூரியனோடு இணைத்து பார்க்கும்போது சந்திரன் பூமியை சுற்றுவது கீழ்க்கண்டவாறு அமையும்.

இந்த சுற்றில் சந்திரனின் பௌர்ணமி எப்போதும் வெளிப்புறத்தில்; அமாவாசை உள்புறத்தில். ஏன்னா நமக்கு சூரியன் தெரியாத இரவில் தானே பௌர்ணமி காண முடியும். இரவில் நம் கண்களுக்கு புலப்படாத நிலவு தானே அமாவாசை.

ராகு-கேது என்பது பூமியின் வசிக்கும் நமது புரிதலுக்கு என்பதால், பூமியை மையமாகக்கொண்டே சூரியன் மற்றும் சந்திரனின் சுழற்சி கணிக்கப்படுகிறது.

நிலவு இருப்பது பூமியிலிருந்து 4 லட்சம் கிலோமீட்டர் தான்.

ஆனால் சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கிலோமீட்டர்.

தூர வித்தியாசம் அதிகம் இருந்தாலும் பூமியிலிருந்து காணும்போது இவை இரண்டு மட்டும் (சூரியன்-சந்திரன்) நம் கண்களுக்கு வெளிப்படையாய் தெரியும் வகையில் இருப்பதாலும், பார்வைக்கு இரண்டும் ஒன்றை ஒன்று சமமாக மறைக்கும் அளவிற்கு சம உருவ அளவில் குறுக்கீடு செய்வதாலும், கவனம் பெறுகிறது.

அந்த அடிப்படையில் சூரியனும் சந்திரனும் சந்தித்துக்கொள்ளும் இரண்டு புள்ளிகளும் ராகு மற்றும் கேது என அழைக்கப்படுகின்றன. கணிதத்தில் x மற்றும் y என்பதைப்போல தமிழர்கள் வைத்த பெயர்கள் அவை. மேற்கத்திய வானியலில் இவை Nodes (descending and ascending) என அழைக்கப்படுகின்றன.

சந்திரன் ஒவ்வொரு நாளும் 50 நிமிட தாமதமாக பூமியிலிருந்து காணும்போது தென்படுவதால் (காண்க:) சூரியனும் சந்திரனும் சந்தித்துக்கொள்ளும் புள்ளிகள் ஒவ்வொரு நாளும் சற்று தாமதமாக பின்தங்கியே நிகழ்வதால் அந்த சந்தித்துக்கொள்ளும் புள்ளிகளின் சுழற்சி இடஞ்சுழி (Anti-clockwise) திசையில் நடக்கிறது.

உண்மையில் அந்தப்புள்ளிகள் (ராகு-கேது) பிற கிரகங்கள் போல உண்மையில் நகர்வதில்லை. மாறாக சூரியன், சந்திரன் சந்தித்துக்கொள்ளும் நேரம் ஒவ்வொரு முறையும் பின் தங்குவதால், அப்புள்ளிகளின் இணைப்புத்தொடர்ச்சி ஒரு கற்பனையான பின்னோக்கிச்செல்லும் வளையத்தை உண்டுபண்ணுகிறது. இந்தக் கற்பனை வளையத்தின் ஒரு தொடக்கப்புள்ளி (ராகு) x ன் மீது தொடங்கி மீண்டும் அதே புள்ளிக்கு (x) வந்து சேர 18.6 ஆண்டுகள் ஆகிறது. எனவே ராகு சுற்றிவர 18.6 ஆண்டுகள் ஆகிறது என குறிப்பிடப்படுகிறது. 18.6 ஆண்டுகளுக்கு ஒரு முறை முடங்கல் (Lunar standstill) நடை பெறுவதாய் கணிக்கப்படுகிறது. (சூரியன் கடக ரேகையில் முட்டி (Solar standstill-Summer Solstice) மகர ரேகை நோக்கி திரும்புவதைப்போல, அல்லது மகர ரேகையில் முட்டி கடக ரேகைக்கு திரும்புவதைப்போல (Winter Solstice) )

 1. ராகு-கேதுவும் சூரிய-சந்திர கிரகணங்களும் 


* நம் விஞ்ஞானிகளான வராக மிகிரர் போன்றவர்கள் சந்திரன்/ பூமியின் இருவகை நிழல்களால் கிரகணம் என தெரிவித்துள்ளனர்.

 1. உள் நிழல் – Umbra
 2. வெளி நிழல் – Penumbra

* சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் போகும் போது,
* சந்திரனின் “உள் நிழல்” பூமி மேல் விழும் பகுதியிலிருந்து சூரியனை நோக்கும்போது, சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்தால்
* அதுதான் சூரிய கிரகணம்-ன்னு எல்லாருக்குமே தெரிஞ்ச ஒன்று தான்.

ஆனால் ஏன் அமாவாசை அன்னிக்கி மட்டும் சூரிய கிரகணம் நடக்கிறது? 

அதான் மாசா மாசம் அமாவாசை வருதே! அப்புறம் ஏன் மாசா மாசம் சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை?
ஏன் அமாவாசையன்று மட்டும் ? 
இந்தியாவில் அமாவாசை என்றால் அன்றைய இரவின் ஆரம்பத்தில் சந்திரன் இந்தியாவிற்கு எதிர்திசைப் பகுதியில் பூமியின் மறுபக்கம் சென்றுவிடும். ஆனால் பகல் முழுக்க இந்தியாவின் பார்வையில் தான் காணப்படும். அதன் காரணமாக பகலில் ஏறக்குறைய சூரியனின் பாதையை ஒட்டியே சந்திரனும் பயணிக்கும். சூரியனை மறைக்க வாய்ப்பு அதிகம்.
அதான் மாசா மாசம் அமாவாசை வருதே! 

அப்புறம் ஏன் மாசா மாசம் சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை?
சூரியன்-பூமி மற்றும் பூமி-சந்திரன் இவைகளின் சுற்றுப்பாதைகளைப் பொறுத்தே சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அவைகளின் சுற்றுப்பாதை எப்படி இருக்கிறது?

 1. சூரியன்-பூமி-மற்றும் பூமி-சந்திரனின் சுற்றுப்பாதைகள் கீழ்க்காணுமாறு

மேலும் கீழுமாக மற்றும் கிடை மட்டத்தில் இருந்தால், சூரிய மற்றும் சந்திர கிரகணம் ஏற்பட வாய்ப்பே இல்லை. இடையில் ஏதாவது கிரகம் வந்தால் தானே நிழல், கிரகணம்.

அல்லது

 1. சூரியன்-நிலவு-பூமியின் சுற்றுப்பாதைகள் சமதள நேர்கோட்டில் கீழ்காணுமாறு இருக்கிறதா?

இல்லை.
சமதள நேர்கோட்டில் இருந்தால்

எல்லாப் பௌர்னமி அன்றும் முழு சந்திரகிரகணம் ஏற்பட வேண்டும்,  
அதாவது ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இரவில் பூமியிலிருந்து சந்திரனை நோக்கும்போது சூரிய ஒளி பூமியால் தடுக்கப்பட்டு பூமியின் நிழலில் சந்திரன் இருக்கும் அந்த கொஞ்ச நேரம் சந்திர கிரகணம் ஏற்பட வேண்டும், கீழ்க்காணும் படம் சொல்வது போல.
அதே போல் எல்லா அமாவாசைநாளிலும் முழு சூரிய கிரகணம் ஏற்பட வேண்டும்.
அதாவது ஒவ்வொரு அமாவாசையன்றும் பகலில் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து (உள்நிழல் பகுதி) சூரியனை நோக்கும்போது நிலவு குறுக்கே வருவதால் கொஞ்ச நேரம் நிலவானது  சூரியனை மறைக்க வேண்டி இருந்திருக்கும் கீழ்க்கண்ட படம் சொல்வது போல.
மாறாக

 1. பூமி-நிலவின் சுற்று வட்டப் பாதையும், சூரியன்-பூமியின் சுற்று வட்டப் பாதையும் ஒரு 5 டிகிரி சாய்வில் சுற்றுகிறது. 

அதுனால முக்கால் வாசி நேரம், இந்த நிழல் விழாம நாம தப்பித்து விடுகிறோம். இந்த தப்பித்தல் எப்படி என்பதை இப்படியும் காணலாம்.
ஆனால், வருசத்துக்கு ரெண்டு முறையாச்சும், எப்படியோ நிழல் எங்கேயாச்சும் விழுந்துடுது! அதுனால அப்படி விழுந்த இடத்தில் மட்டும் கிரகணம் தெரியுது!
* உள் நிழல் விழுந்தா முழு கிரகணம்! (Total Eclipse)
* வெளி நிழல் விழுந்தா முழுமையற்ற கிரகணம்! (Partial Eclipse)

 1. முழுமையற்ற சூரிய கிரகணம்.
 1. முழுமையற்ற சந்திர கிரகணம்.

இது பற்றி மேலும் தெளிவு பெற விரும்பினால் கீழ்க்காணும் கானொளிகளைக் காணலாம்.
காணொளி 1:

காணொளி 2: 
இப்ப இந்த சூரிய மற்றும் சந்திர கிரகனங்களில் ராகு-கேதுவின் பங்கு என்ன?
ஒரு 5 டிகிரி சாய்வாக உள்ளதால்தான் ராகுவும் கேதுவும் தேவைப் பட்டார்கள்.

இங்கு படத்தில் ராகு, கேதுவுக்கு முறையே பச்சை, சிவப்பு நிறம் கொடுத்து ஒரு சிறிய உருவமும் கொடுக்கப்பட்டுள்ளது. அவை எல்லாம் எளிதில் நாம் புரிந்து கொள்வதற்குத்தான். உண்மையில் அப்படி ஏதும் நிறமோ வடிவமோ கிடையாது, முற்றிலும் கற்பனைதான்.
இதில் ராகுவும் கேதுவும் சந்திரனின் வட்டப் பாதையில் இருப்பதால் ஒவ்வொரு சுற்றின் போதும் சந்திரன் ராகுவையும் (ஏற்றப் புள்ளி, Ascending node) கேதுவையும் (இறங்குபுள்ளி Descending node) ஒருமுறை சந்தித்து விட்டுத்தான் வருகிறது.
இந்த சந்திப்புகள் எல்லாம் ”விழுங்குதல்” கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. ஆனால் எப்பொழுது, சூரியன், பூமி, சந்திரன், ராகு கேது இவை ஐந்தும் நேர்கோட்டில் வருகிறதோ அப்பொழுதுதான் ”விழுங்குதல்” என்ற கிரகணம் ஏற்படும்.
அதாவது,
கேது என்ற புள்ளியை சந்திரன், பௌர்ணமி தினத்தில் சந்திக்கும் போது, அது சந்திர கிரகணம்.
இராகு என்ற புள்ளியை சூரியன், அமாவாசை அன்று சந்திக்கும் போது, அது சூரிய கிரகணமாகும்.

 1. தொன்மக் கதையான ராகு-கேது என்ற தமிழரின் வானியல் அறிவியல்.

நம் அனைவருக்கும் சற்று நன்கு அறிமுகமான தொன்மக்கதை அ புராணம்: அசுரர்களும், தேவர்களும் பாற்கடல் கடைந்தது.

இப்புராணம் பற்றி அறியாதவர்கள் இங்கே காணலாம். இந்தத் தொன்மக்கதையில் உடன் வரும் இணைப்புக்கதை ஒன்று இருக்கிறது. திரு. சந்துரு இது பற்றி சொல்லுவார்.
அதாவது அசுரர்களும் தேவர்களும் கடைந்ததால் கிடைத்த அமுதத்தை தேவர்கள் வைத்திருந்தனர்.

சமயம் பார்த்து அவர்களிடமிருந்து பிடுங்கி ஸ்வர்ணபானு என்ற அசுரன் அருந்திவிட்டான்.
பின்னர் திருமால் அமுதத்தை முதலாவதாக தேவர்களுக்கு தந்துகொண்டிருந்தார். ஸ்வர்ணபானு என்ற அசுரன் தேவர்கள்  அசுரர்களுக்கு அமுதம் தராமல் ஏமாற்றி விட்டாலும் விடுவார்கள் என்ற பயத்தில் தேவராக உருமாறி தேவர்கள் வரிசையில் சூரிய சந்திரர்களுக்கு அருகில் உட்கார்ந்து விட்டான். சூரிய, சந்திரன் இதனைக் கண்டுபிடித்து திருமாலிடம் சொல்லிவிடவே திருமாலும் தனது கையில் வைத்திருந்த சக்ராயுதத்தால் ஸ்வர்ணபானுவை வெட்டியதால் தலை வேறு முண்டம் வேறாக வீழ்ந்தான்.
(அவர்கள் உருவாக்கிய புராணக்கதையிலும் கூட பாதிக்கப்படுகிறவர்கள் மற்றும் தவறான முன்னுதாரணத்திற்கு அசுரர்கள் எனப்படும் தமிழர்களே உள்ளாக்கப்படுவதை கவனிக்கத் தவற வேண்டாம்)
ஆனால் அமுதம் பருகிய காரணத்தினால் சாகா வரம் பெற்றதால் தலையும் உடலும் தனித்தனியே உயிருடன் இருந்தது. திருமாலின் சக்ராயுதத்தால் வெட்டினால் ஒட்டுவதற்கும் வாய்ப்பு கிடையாது. அதே சமயம் அமுதம் அருந்தியவருக்கு மரணமும் கிடையாது. இப்பொழுது அசுரனின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாகி விட்டது.

அசுரன்(கள்) திருமாலிடம் சரணடைந்து தனக்கு விமோச்சனம் வேண்டி நின்றான். திருமாலும் அண்டி வந்தவனுக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு பாம்பை அதே அமுதம் பரிமாறிய சக்ராயுதத்தால் இரண்டாக வெட்டி அசுரனின் தலைக்கு பாம்பின் உடலையும், பாம்பின் தலைக்கு அசுரனின் உடலையும் சேர்த்துக் கொள்ளுமாறு அருளினார். இங்கு அமுதத்தின் பலன் பாம்புக்கும் கிட்டியது. ஒருவனாக இருந்த அசுரன் இருவராக மாறிவிட்டான். ஸ்வர்ண பானு இப்பொழுது ராகு, கேது என சாகா வரம் பெற்ற இருவராக மாறிவிட்டான்.
இப்பொழுது அவர்கள் சூரிய சந்திரர்களை பழி வாங்கும் பொருட்டு தவம் இருந்தனர். முடிவில் ஈஸ்வரனிடம் இருவரும் சூரியனையும் சந்திரனையும் விழுங்கு வதற்கான வரத்தைப் பெற்றனர். இதையறிந்த சூரிய சந்திரர்கள் ஈஸ்வரனிடம் தஞ்சம் அடைந்து, உபாயம் அருளுமாறு வேண்டினர். அவரும் அசுரர்கள் விழுங்கினாலும் 3 3/4 நாழிகையில் நீங்கள் வெளிவந்துவிடலாம் என்று அருளினார். ஆகவே அது முதல் அந்த அசுரன் இருவராக மாறி ராகு, கேது என இரு பெயர் பெற்றான். எப்பொழுது எல்லாம் பொழுது போகவில்லையோ அப்பொழுதெல்லாம் சூரிய சந்திரர்களை விழுங்கி விளையாடுவார்கள்.
சூரிய, சந்திர கிரகண வானியல் உண்மை தொன்ம அ புராணக்கதையாக மாற்றப்பட்ட கதை இது.
இந்தத் தொன்மக்கதையில் தமிழர்கள் அறிந்து கொள்ளவேண்டிய ஓர் உண்மை:

2000 வருடங்களுக்கு முன்பாகவே தமிழர்கள் கிரகணம் பற்றி மட்டுமல்ல, ராகு, கேது பற்றியும் அறிந்துள்ளார்கள் என்பதே. 
ராகு, கேது பற்றி சோதிடம் தான் ஏதோ சொல்கிறது என்று கேள்விப்பட்டிருப்போம்.

 

உண்மையில் அப்படி கிரகங்கள் உண்டா?
தேடித்தான் பார்ப்போமே தமிழர்கள் உண்மையிலேயே விஞ்ஞானிகள் தானா என்று ?
4.1 தமிழர் இலக்கியத்தில் வானியல் குறிப்புகள் 
இலக்கியம், செய்யுள் என்றாலே நமக்கு வெறுப்புத்தான். அப்படி உருவாக்கிவிட்டார்கள். ஆனால் அவற்றிற்குள் எவ்வளவு விசயங்கள் வானியல், அறிவியல், மருத்துவம், கட்டடவியல், இலக்கணம், கணிதம் பொதிந்திருக்கிறது என்று பார்த்தால் வியப்புதான். அவை அத்தனையையும் உரைநடையில் எளிமைப்படுத்தினால் உலக அறிவுக்களஞ்சியமே இங்குதான் இருக்கிறது என்பதை அன்றுதான் நாம் உணர்வோம். சரி இப்ப நம்ம தலைப்புக்குள்.

1 ) பரிபாடல் 11: 1-15 வரிகளில் 
விரி கதிர் மதியமொடு, வியல் விசும்பு, புணர்ப்ப,

எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,

தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்

உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,

வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி 5
புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்

அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்

இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்

வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை

மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த  10
பொதியில் முனிவன் புரை வரைக் கீறி

மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்

எதிர் வரவு மாரி இயைக என இவ் ஆற்றால்

புரை கெழு சையம் பொழி மழை தாழ,

நெரிதரூஉம் வையைப் புனல். 15
இதற்கான பொருள்:

 • வானில் உள்ள இருபத்தேழு நட்சத்திரக்கூட்டங்கள்.
 • இந்த 27 நட்சத்திரக்கூட்டங்களும் 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 • அதன்படி  ஒவ்வோர் ராசியிலும் இரண்டே கால் நட்சத்திரக்கூட்டங்கள். (12 x 2 1/4=27)
 • இந்த 12 ராசிகளும் நான்கு ராசிகள் அடங்கிய மூவகை வீதிகளாகப் பிரிக்கப்பட்டு

3 வகை வீதிகள்:

 1. இடப வீதியில்  – கன்னி, துலாம், மீனம், மேடம் என 4 இராசிகள்.
 2. மிதுன வீதியில்  – தேள், வில்லு, மகரம், கும்பம் என 4 இராசிகள்.
 3. மேட வீதியில்  – இடபம், மிதுனம், கற்கடகம், சிங்கம் என 4 இராசிகள்.
  • வெள்ளியாகிய சுக்கிரன் இடபத்திலும் 
  • செவ்வாய் மேடத்திலும்
  •  புதன் மிதுனத்திலும்
  • ஆதித்தன் சிம்மத்திலும்
  • வியாழனாகிய குரு மீனத்திலும்
  • திங்களும் சனியும் இராகுவும் மகரத்திலும்
  • கேது கடகத்திலும் செல்லக்கூடிய
  • ஆவணித்திங்கள் அவிட்டநாளில்,
  • திங்களை இராகு தீண்டுகின்ற சந்திர கிரகணம் நேருமாயின்

மழைபெய்யுமென்ற வானியல் விதிப்படி, கோள்கள் கூடினமையால்

மேற்குத்தொடர்ச்சி மலையில் மழைபெய்து வைகை ஆற்றில் வெள்ளம் புரண்டதென்பது அப்பரிபாடலின் பொருள்.
[இந்த இடத்தில் நம்ம தொலைக்காட்சியில் வரும் திரு. இராமனின் வானிலை முன்னறிவிப்பை நினைவு கூர்வோம்: தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக தூறலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என அதே பழைய தேய்ஞ்சு போன தகவல். என்னைக்குத்தான் இன்று தஞ்சை நகரத்திலும், மேட்டுப்பாளையம், தூத்துக்குடி, மற்றும் பெரியகுளத்தில் மழை பெய்யும் என்று சொல்லப்போகிறார்களோ தெரியல.

ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் என்னவொரு உறுதியான, நிச்சயமான வானிலை அறிவிப்பு, வானியல் கணிப்பு. எதுக்குத்தான் கோடி, கோடியா மக்கள் பணத்தை செலவு பண்ணி செய்மதி அனுப்புறாங்களோ தெரியல… அந்த அம்பானி ரிலையன்சுக்கே வெளிச்சம்.]
2 ) நற்றிணை 377, மடல் பாடிய மாதங்கீரனார், குறிஞ்சித் திணை

”அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த

பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல ”

பொருள்:
அகன்ற கரிய ஆகாயத்தின்கண்ணே (அரவினாற்) பாம்பினால்  சிறிது விழுங்கிக் குறை படுக்கப்பட்ட பசிய கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல;
4.2 இந்த இடத்தில் கிரகணம் பற்றி வருவதால் அதுபற்றிய ஒரு சிறு குறிப்பு:
கிரகணம் என்று வடமொழிச்சொல்லாக்கப்பட்ட சொல்லின் மூல வார்த்தை ஒரு தமிழ் வார்த்தை.

அது கரவணம். கரத்தல் = மறைத்தல்!
காக்கை “கரவா” கரைந்துண்ணும் என்பது குறள் அதாவது உணவை மறைக்காது பிற காக்கைகளை அழைத்து உண்ணும்.
நிலவோ, பூமியோ சூரியனை மறைப்பதால் (கரத்தலால்) = கரவணம்.

அதனால்தான் பகலில் மறைந்து திரியும் பூச்சி “கரப்பான்” எனப்பட்டது.

மறைவாக ஒன்றைக் கவரும் “திருட்டு”ம் “கரவு” எனப்பட்டன. திருடர்கள் “கரவடர்” எனப்பட்டனர். கரவு களவு ஆனது.
அதுபோல ஞாயிறும் திங்களும் வானில் மறைபடும் நிகழ்வு “கரவணம்” எனப்பட்டது. இந்தக் “கரவணம்” என்ற சொல்தான் “கரகணம்” எனத் திரிந்து வடமொழியில் “கிரகணம்” என்று வழங்கிவருகிறது. காண்க:

 1. ராகு-கேதுவில் தமிழர்களின் வானியல் அறிவு.
 1. ராகு, கேது என்பவை கிரகங்கள் அல்ல சாயா கிரகங்கள் என்று குறிக்க பட்டுள்ளது. சாயா என்பதன் தமிழ் விளக்கம் கண்களுக்கு புலனாகாத (கற்பனை – மெய்நிகர் – virtual) என்பது ஆகும். அதாவது ராகு, கேது என்பவை மெய்நிகர் கற்பனை புள்ளிகள். காண்க:
 2. ராகு-கேதுவுக்கு தமிழர்கள் கொடுத்துள்ள விளக்கம் நிறத்தோடு குறிப்பிடப்படுவது அறிவியல் பூர்வமானது. அவைகளுக்கு இயற்கையான மூலப்பொருள் அடையாளங்களையும் அதே நிறங்களில் கொடுத்துள்ளனர்.

[பின்னால் வந்த சோதியம் (ஜோசியம்) அதனை வியாபாரமாக்கியது வேறு கதை.]

 1. ராகு (Raghu) – கருநாகன்
 2. கேது (Kethu) -செந்நாகன். காண்க:

ராகு – கருப்பு – கோமேதகம் – கருங்கல்

கேது – சிவப்பு வைடூரியம் – துருக்கல்
இதில் உள்ள தமிழரின் அறிவியல்:
ராகு என்ற கருப்பு நாகத்தால் அல்லது கருப்பு சாயா கிரகத்தால் ஏற்படும் 

சூரிய கிரகணத்தின் நிறமும் கருப்புதான்.
கேது என்ற சிவப்பு நாகத்தால் அல்லது சிவப்பு சாயா கிரகத்தால் ஏற்படும் 

சந்திர கிரகணத்தின் நிறமும்  சிவப்புதான்.

 1. தொன்மக்கதையில் பாம்பின் பங்கு என்ன?

பாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும்.
ராகுவும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனை “விழுங்கியவுடன்” சிறிது நேரத்திலேயே வெளியே வந்து விடுகிறது.

 1. தமிழர்கள் பூமியின் பார்வையில் முக்கிய நிகழ்வுகளான சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் இரு குறிப்பிட்ட புள்ளிகளில் நிகழ்வதை கண்டறிந்தனர்.
 2. இந்த கிரகணங்கள் வருடம் ஒரு முறையாவது நிகழ்வதை கண்டறிந்தனர்.
 3. இந்த புள்ளிகளின் சுழற்சி 18.6 வருடங்களுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வந்து நிறைவடைவதை கண்டறிந்தனர்.
 4. இந்த புள்ளிகள் ஒன்றுக்கொன்று 180பாகையில் [எதிரெதிர் திசையில்] உள்ளதை கண்டறிந்தனர்.

 காண்க:

 1. உலகம் முழுவதும் பயன்படுத்தும் ஓர் ஆண்டு என்னும் காலக்கணிப்பிற்கு (வருட நாட்காட்டிக்கு) மிக முக்கியமான நாள் என்னும் அடிப்படையான வானியல் தத்துவத்தை வழங்கியவர்கள் தமிழர்கள்.

எப்படி?
மனிதனுக்குள்ள ஐம்புலன்கள் கண், காது, மூக்கு, வாய் மற்றும் செவி ஆகியவை.

மனித உடல் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றின் கலவையால் ஆனது.
வானியல், சோதிடத்தில் பஞ்சாங்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. பஞ்சாங்கமும் ஐந்து என்ற எண்னோடு தொடர்பு உடையது.

1) திதி

2) வாரம்

3) நட்சத்திரம் (27 நட்சத்திரக்கூட்டங்கள்)

4) யோகம் (சந்திரன் 27 நட்சத்திரக்கூட்டங்களில் ஒவ்வொன்றையும் கடக்கும் காலம்)

5) கரணம் (ஒரு திதியின் முன்பகுதி மற்றும் பின்பகுதி)
ஆகிய ஐந்தும் சேர்ந்ததுவே பஞ்சாங்கம் (அஞ்சு+அங்கம்). காண்க:

இவை ஐந்தும், சூரியன், மற்றும் சந்திரனோடு தொடர்புடையன.
திதி என்றால் என்ன?
விண்வெளியில் பூமியைச் சுற்றிவரும் சந்திரனின் (மதியின்) 28 நாட்களைக் குறிக்கப் பயன்படும்  வார்த்தையே திதி எனப்படுகிறது. திதி என்பது நாம் இன்று பயன்படுத்தும் தேதி தான். திதி மொத்தம் 14 நாட்கள் தான். வளர்பிறை 14, தேய்பிறை 14 என 28 நாட்களைக் குறிக்கிறது.
14 திதியின் பெயர்கள் என்ன?
(1)பிரதமை, (2)துவிதியை, (3)திருதியை, (4)சதுர்த்தி, (5)பஞ்சமி, (6)சஷ்டி, (7)சப்தமி, (8)அஷ்டமி, (9)நவமி, (10)தசமி, (11)ஏகாதசி, (12)துவாதசி, (13)திரயோதசி மற்றும் (14)சதுர்த்தசி.
இவைதான் உலகளவில் காலக்கணிப்பிற்கு அடிப்படை என்பதை (1)இங்கேயும், (2)இங்கும் காணலாம்.
வளர்பிறையில், 15வது திதியாக வருவது பௌர்ணமி. தேய் பிறையில் 15 வது திதியாக வருவது அமாவாசை.
-வளர்பிறை என்பதை சுக்கில பட்சம் அதாவது சுடரான ஒளியின் பக்கம் என்றும்,

-தேய்பிறை என்பதை கிருஷ்ண பட்சம் அதாவது கருத்த அ இருண்ட பக்கம் என்றும் கூறுவார்கள்.
இன்று கொண்டாடப்படும் பண்டிகைகள் யாவும் தமிழர்கள் கண்டுபிடித்த திதிகளின் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகின்றன. உதாரணத்திற்கு:
வைகுண்ட ஏகாதசி(1), துவாதசி(2), அட்சய திருதியை(3), பிள்ளையார் சதுர்த்தி(4), நாக பஞ்சமி(5), கந்த சஷ்டி(6), ரத சப்தமி(7), கோகுலாஷ்டமி(8), ராம நவமி(9), விஜய தசமி(10).
அமாவாசை:  அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது.
பௌர்ணமி: அமாவாசைக்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது.
இப்படி ஏராளமான வானியல் விசயங்களை 21 ம் நூற்றாண்டிலும் கண்டுபிடிக்கக் கடினமான வானியல் நுட்பங்களை கண்டுபிடித்ததோடு சாயா (Virtual) கிரகங்களை கணித்து உருவாக்கி, முப்பரிமாண வானியல் கணிப்புகளை மனதளவில் கற்பனையாக ஏற்படுத்தி அதன் மூலம் உயரிய வானியல் கண்டுபிடிப்புகளை சாத்தியமாக்கிய நம் தமிழர்களின் வானியல் நுட்ப அறிவை எப்படித்தான் பாராட்ட?
புதைந்திருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் இன்னும் ஏராளமான தமிழரின் அறிவுச்சொத்துக்களை (Intellectual Properties) மீண்டுமாய் வெளிக்கொணர்வோம். அனைத்தும் வளமான, அறிவார்ந்த எதிர்கால தமிழ்ச் சமூகத்துக்காகவே.

(உதவிய அனைத்து மூலங்களுக்கும், குறிப்பாக திரு. சந்துரு அவர்களின் சில படங்களுக்கும் மிக்க நன்றி)

தொடர்ந்து தேடுவோம்…