நமது தொடர் தேடலில், இன்று எண்கள், காலம், கணக்கீடு வகையில் இத்தாலிய மற்றும் தமிழ் மொழியில் உள்ள தொடர்புகளைக் காண முயற்சிப்போம்.

 1. கணிதம், எண்கள், காலம்

நம்ம தமிழ் நாட்காட்டியைப் பார்த்தால், (எங்கே கல்யாண பஞ்சாங்கம் பார்க்கத்தான் அதனைப் பயன்படுத்துகிறோம்) குறிப்பாக தின நாட்காட்டியில் கீழ்க்கண்டவாறு கிழமைகளைப் போட்டிருப்பார்கள். பிரதமை, துதியை… என்று. இவை எல்லாம் வடமொழியோ என சந்தேகம் படும்படியாக வார்த்தைகள் இருக்கும். நிச்சயம் இல்லை. சுத்தமான தமிழ் வார்த்தைகள். அவற்றில் சரியாக 14 நாட்களுக்குக் கிழமைகள் போட்டிருப்பார்கள் 1 லிருந்து 14 வரை, அடுத்த நாள் பௌர்ணமி. திரும்ப அந்த 1 லிருந்து 14 கிழமைகள். அடுத்த நாள் அமாவாசை.

வேறு ஒன்றும் இல்லை. நிலவின் வளர்பிறைக்கு 1லிருந்து 14 வரை, தேய்பிறைக்கு 1 லிருந்து 14 வரை. காரணம் நிலா, மதி யை வைத்தே நாட்கள் கணக்கிடப்பட்டதால் மாதம் என்றே பெயர் பெற்றதை நாம் அறிவோம்.

அந்த கிழமை பெயர்கள் அப்படியே இத்தாலியில்.

இந்த கிழமைகளில் 4 என்ற எண்ணைத்தவிர பிற எண்கள் அப்படியே வருவதைப்பார்க்கலாம்.

 1. Primo (பிரிமோ)- பிரதமை
 2. Due (துவெ)- துதியை
 3. Tre (த்ரே)-திருதியை
 4. Quattro (குவாத்ரோ)- சதுர்த்தி
 5. Cinque (சின்க்வெ)-பஞ்சமி
 6. Sei, sesto (சேய்)-சஷ்டி
 7. Sette (செத்தே)- சப்தமி
 8. Otto (ஒத்தோ)-அட்டமி
 9. Nove (நோவே)-நவமி
 10. Dieci (தியெச்சி )- தசம் (இலத்தீனில் தெச்சம்). கணக்கில் தசமபின்னம்.1/10
 11. Undici (உந்திச்சி)-ஏகாதசி
 12. Dodici (தோதிச்சி)-துவாதசி
 13. Tredici (திரேதிச்சி)-திரயோதசி
 14. Quattordici (குவதோர்திச்சி )-சதுர்த்தசி

இவைகளில் 4, 14 இந்த இரண்டு கிழமைகளில் 4 ஏன் இப்படி வருகிறது என்று இரண்டு, மூணு நாள் யோசித்து பார்த்தேன். தேடியபொழுது அருமையான விளக்கம் கிடைத்தது.

இத்தாலி நாட்டுக்காரரே உதவி செஞ்சார். அவர் கொன்ஸ்தன்சோ ஜோசப் பெஸ்கி என்ற நம்ம வீரமாமுனிவர். இவர் இத்தாலி மிலான் நகரத்துக்கருகில் காஸ்திலியோனே (Castiglione) என்ற நகரத்தில் பிறந்தவர். இந்த நகரை காஸ்திகிலியோன் என்று நாம் தவறாக எழுதுவது இங்கு வந்ததும் தான் தெரிந்தது. இவர் தான் தமிழ் மீது கொண்ட பற்றால், கற்று, தேர்ந்து தமிழில் முதல் முறையாக அகராதியைத் தொகுத்தவர். ஆங்கிலத்தில் நாம் பயன்படுத்தும் ‘Thesaurus’ போல.
சதுர் அகராதி. சதுர் என்றால் நான்கு. சதுரம் என்றால் நான்கு பக்கமும் சம தூரத்தில் இருக்கும் வடிவம். சதூரம் – சதுரம். நான்கு அகராதி.

இதில்

 1. சொல் அகராதி (சொல்லும் பொருளும்)
 2. பெயர் அகராதி (ஒரு சொல் பல பொருள்)
 3. தொகை அகராதி (கலைச்சொற்கள்)
 4. தொடை அகராதி (எதுகை மோனை)

என சதுர அகராதியை 1732 ல் எழுதி முடித்தார். இப்ப நம்ம விசயத்திற்கு வருவோம்.
இந்த நான்கு என்ற சதுர், ஹிந்தியில் சார் (ஏக், தோ, தீன், சார்) ஆகி சதுர்- சதூர்-chadhoor – cha என்பதை இத்தாலியர்கள் க என்றுதான் உச்சரிப்பார்கள், ஆக சதுர்-சதூர்-கதூர்- ஆகியிருக்கிறது. இது அப்படியே ஆங்கிலத்தில் ‘quarter நான்கில் ஒரு பாகம்’ என்றாகி விட்டது.
இந்த வகையில் மேலும் சில தகவல்கள் கிடைத்தன. வாகன ஓட்டிக்கு சாரதி என்று தமிழில் பெயர். பார்த்தசாரதி என்ற பெயர் நமக்கு அறிமுகமான பெயர். பார் என்ற உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரியனுக்கு தான் அப்பெயர். கதிர்கள் என்ற குதிரைகள் பூட்டிய தேர் சூரியன். இதில் சாரதி என்பது சதுர அ சார் எனும் நான்கு சக்கரங்கள் கொண்ட தேருக்கு அதிபதி என்றே சாரதி பொருள் படுகிறது. இந்த சார்- சதுர்-கதூர்-கார் என்பதும் நான்கு சக்கரங்கள் பூட்டிய வாகனம்.
German மொழியில் car ஐ (வாகனம்) வாகன் என்றே அழைக்கிறார்கள். Volkswagen (f) வோல்க்ஸ்வாகன் அ மக்கள் வாகனம்.
நான்கு கரங்கள் கொண்ட இணைப்போடு இருப்பதால் (நான்கு)சதுர்-கரம், சக்கரம் என்று தமிழன் தான் முதன் முதலில் சக்கரத்தையே கண்டுபிடித்திருக்கிறான்.

 1. Car-ta (கார்-த்தா) – சதுர்த்தாள், நான்கு பக்கங்கள் கொண்ட தாள்.
 2. Car-cere (கார்-செரெ)- சிறை, நான்குபுற சிறை.

நான்குக்கான விளக்கம் கொஞ்சம் அதிகம்தான். பொறுமையாய் வாசித்ததற்கு நன்றி.

 1. Cento (சென்தோ)-சதம்
 2. Novena (நொவெனா)- நவநாள்
 3. Ora, Hour (ஓரா)- ஓரை, ஓரை என்றால் நட்சத்திரக்கூட்டம் என்று தமிழில் பொருள். நமது பால்வெளி ( Milky way ) என்ற பேரண்டத்தில் ஒருபகுதியான நமது சூரியக்குடும்பம் இருக்கும் நட்சத்திரக்கூட்டத்திற்குப்பெயர் ஓரியன் (Orion) இதைக்கொண்டே horoscope, hour எல்லாம் உருவானது.
 4. Dies,(தீயஸ்) day, date – திதி, தேதி
 5. Mese, (மேசெ)Month-மாதம்,மதி
 6. Anno (ஆண்ணோ) – ஆண்டு
 7. GiorNALE (ஜோர்நாளே)-நாள்
 8. Settimana (செத்திமானா)- சத்தமானம் என்பது தமிழ் வார்த்தைதான். சத்தமானம் என்றால் 7 நாள் வரிசை என்று பொருள். ‘சப்த ஸ்வரம்’ ன்னு சொல்றோம்ல. அதுவும் 7 சரம், வரிசையைக்குறிக்கிறது. ச, ரி, க, ம, ப, த, நி.

உண்மையில் சப்தஸ்வரம் அல்ல சத்தசரம்- 7 வரிசை என்பதே சரியான வார்த்தை. சப்தம்-ஒலி என்று நினைத்து தவறாக எழுதப்படுகிறது.

 1. Mattina (மத்தினா)- மத்தியானம்மத்திஅயனம். சூரியனின் பயணத்தில், அயணத்தில், மத்தியில் உள்ள நிலை மத்தியானம். இது தமிழ். விடியல் முதல் மத்தியானம் வரை உள்ள காலப்பகுதியை மத்தீனா என்பது இத்தாலி.
 2. Sera (சேரா) – பொழுதுசேரும்நேரம், சூரியன் சாயுங்காலம்.
 3. Destra (தெஸ்த்ரா)- தெற்கு, தெக்கணம். (Deccan Plateau-தக்கான பீடபூமி, தெற்கு பூமி)

சூரியனுக்கு முன்பாக நின்று கிழக்கு பார்த்து, இரு கைகளையும் விரித்தால் இடது கை வடக்குப்புறமும், வலது கை தெற்கு புறமும் இருக்கும். திசை என்பதற்கு திரை என்றும் வார்த்தை உண்டு என்பது நமக்குத்  தெரியும். திரை கடல் ஓடியும் திரவியம் தேடு. இப்ப இந்த தென் திறம் என்பதுதான் தெஸ்திரம், இத்தாலியில் destra என்றாகி உள்ளது. வலது கை பகுதி வட புறத்திலுள்ள சனி மூலை, சனி திசை, சனி திரம் ஆக sinistra (அடுத்த வார்த்தை) ஆகியிருக்கிறது.

 1. Sinistra (சினிஸ்திறா)- சனி, ஈசான மூலை. சனி-திரம்
 2. Tele (தெலெ)- தொலைவு, telephone, television எல்லாம் இதன் பொருளில் தான்.
 3. Geo- ஜெகம், செகம், சனித்தல், பிறப்பித்தல், உயிர் உருவாகக்கூடிய ஒரே கிரகம் இந்த பூமி என்பதால்.
 4. Prima vera(பிறிமா வேரா)- வசந்த காலம், மழை, குளிர் காலம் முடிந்து இலை துளிர்க்கும் காலம். தமிழில் இது வசந்த காலம் என்றாலும் சரியான வார்த்தை பசந்த காலம் என்கிறார் தமிழறிஞர் இராம.கி. எங்கும் பசுமை இருப்பதால் இப்பெயர். prima vera- என்றால் பிரதம வருகை, துளிர்களின் முதல் வருகை தான் prima vera.
 5. Secoli (சேக்கோழி)-ஊழி, பன்நெடுங்காலம், பல காலம்
 6. Metere(மேதரே)-மாத்திரை, செய்யுளில் நேர் நேர் புளிமா என்று வெண்பா பற்றி தமிழ் வகுப்புகளில் படித்திருப்போம். அப்போ அளவுகளுக்கு மாத்திரை என்று சொல்லக்கேட்டுருப்போம். அதேதான். அந்த மாத்திரைதான், metere, ஆங்கிலத்தில் meter.
 7. Calendario (காலெந்தாறியோ )- கால அந்தம்-ஆதி. காலத்தின் தொடக்க முடிவு.
 8. Zodiaco (சோதியாகோ)-ஜாதகம், சோதியம், சோதி (ஜோதி) யாக இருக்கும் பலகோடி நட்சத்திரங்களைப்பற்றிய துறை. நாம்தான் ஜாதகம். ஜோசியம் என்று சொல்லிகொண்டிருக்கிறோம்.
 9. Cena (சேனா)- சேனம், சேனம் என்றால் உணவு. போசனப்பிரியன்-சாப்பாட்டுராமன், இராபோசனம்-இராவுணவு.
 10. Colazione (கொலா-சியோனே)- காலை சேனம், காலை உணவு.
 11. Pranzo (பிரான்சோ)- மதிய உணவு.

இந்த விளக்கம் மட்டும் எனது தனிப்பட்ட கருத்து. மாற்று விளக்கம் இருந்தால் தெரியப்படுத்தலாம். பொதுவாக தமிழர்கள் தொடக்க காலத்தில் விவசாயிகள். மதிய உணவு சமைக்க நேரம் இருக்காது. ஆகவே முந்தைய நாள் சோறை தண்ணி ஊற்றி பழைய சாதமாக சாப்பிடுவார்கள். அந்த பழஞ்சோறு பிழஞ்சோறு, பிரான்சோறு, பிரான்சோ என ஆகியிருக்கலாம்.

 1. Orientale (ஒரியென்தாலே)-Occidentale (ஒக்சிதேந்தாலே)

இந்த oriental என்ற வார்த்தை கிழக்கத்திய என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். சரிதான். சூரியன் உதிக்கும் பகுதியில் உள்ள நிலங்கள். உதியந்தல். இது ஏறக்குறைய ஜப்பான் முதல் துருக்கி வரை உள்ள பகுதியைக்குறிக்கும். occidental என்றால் மேற்கத்திய என்று அர்த்தப்படுத்துகிறோம். அது சரியல்ல. உண்மையில் சூரியன் உச்சியில் இருக்கும் பகுதி என்றே பொருள்படும். உச்சிதன்தல். அதாவது, ஐரோப்பா, ஆப்பிரிக்கா முழுவதையும் குறிக்கும். அப்ப சூரியன் மறையும் பகுதியில் உள்ள நாடுகளை எப்படி அழைப்பது. எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்.

சூரியன் மறையும் பகுதியில் உள்ள நாடுகளை (வட மற்றும் தென் அமெரிக்க நாடுகள்) அந்தியந்தல் (Anthiental) என அழைக்கலாம் என்று நினைக்கிறேன். (தென் அமெரிக்க மலைத்தொடர் கூட அந்திஸ் [Andes] என்றே அழைக்கப்படுவதை நாமறிவோம்) அந்திமக்காலம், அந்திமந்தாரை, ‘அந்தி வரும் நேரம்…’ என்ற பாடலை நினைத்து பாருங்களேன். மாலை நேரத்தைக் குறிப்பது.

தொடர்ந்து தேடுவோம்…

Advertisements